விருந்தினர் பதிவு : குஞ்சரி

  • படம்: அதிசயத் திருடன்
  • பாடல்: முருகா என்றதும்
  • எழுதியவர்: தஞ்சை ராமையாதாஸ்
  • இசை: எஸ். தக்‌ஷிணாமூர்த்தி, பிரசாத ராவ்
  • பாடியவர்: டி. எம். சௌந்தர்ராஜன்
  • Link: http://www.youtube.com/watch?v=zByLKtFRf54

முருகா என்றதும்

உருகாதா மனம்,

மோகனக் குஞ்சரி மணவாளா

இதில் வரும் குஞ்சரி என்றால் என்ன? குஞ்சரி தெய்வானையின் செல்லப் பெயர். எனவே மோகனமாய் இருக்கும் தெய்வானையின் மணவாளனே எனப்பொருள். ஆனால் தெய்வானைக்கு ஏன் குஞ்சரி என்று பெயர்? அதற்கு அவள் கதையை கொஞ்சம் பார்க்க வேண்டும். முழுக்கதையும் சொல்ல நாலு வரி போதாது. அதனால ஒரு கதைச்சுருக்கம் மட்டும்.

ஒரு முறை நடராஜர் ஆட்டத்தைப் பார்த்து மகாவிஷ்ணு கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வந்ததாம். அந்தக் கண்ணீரில் இருந்து அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற இரண்டு பெண்கள் தோன்றினார்களாம். இருவருமே முருகப் பெருமானை மணக்க ஆசைப்பட, முருகனோ தன் அவதார நோக்கம் அசுரர்களை அழிப்பது, அது முடியும் வரை நீங்கள் இருவரும் தவம் செய்து கொண்டு இருங்கள் என ஒருத்தியை மண்ணிற்கும் மற்றவளை விண்ணும் அனுப்பினாராம். மண்ணில் வந்தவள் வள்ளி. விண்ணிற்கு சென்றவள் தெய்வானை.

அசுரர்களுக்குப் பயந்து ஒளிந்து கொண்டிருந்த இந்திரன் கையில் குழந்தையாகக் கிடைத்தாள். அவன் அதை தன் வாகனமான ஐராவதத்திடம் கொடுத்து வளர்க்க சொல்ல, அந்த யானையும் கற்பக வனத்தில் இவளை வளர்த்து வந்ததாம். தெய்வ யானையால் வளர்க்கப்பட்ட இவள் தெய்வானை என்றே அழைக்கப்பட்டாள்.முருகன் அசுரரை அழித்து தேவலோகத்தை இந்திரனுக்குக் கொடுத்த பின் இந்திரன் தெய்வானையை அவருக்கு மணமுடித்துத் தந்தது ஐதிகம்.

யானைக்கு வடமொழியில் குஞ்சரம் என்று பெயர். பாரதத்தில் அஸ்வத்தாமா அத: குஞ்சர: என்று அஸ்வதாமா என்ற யானை இறந்தது என்று யுதிஷ்டிரன் சொல்லும் வசனம் மிகப் புகழ் பெற்ற ஒன்று. குஞ்சரத்தால் வளர்க்கப்பட்ட பெண் குஞ்சரி. அந்தக் குஞ்சரியை மணந்தவன் இந்தக் குஞ்சரி மணவாளன்.

திருப்புகழில் அருணகிரிநாதரும் நாதவிந்து கலாதரா நமோ பாடலில் (http://youtu.be/8gIo1V4QJ2o?t=1m) தேவகுஞ்சரி பாகா நமோ நமோ என்று பாடி இருக்கிறார். இன்னும் பல இடங்களில் “குஞ்சரி மஞ்சரி தோய்” , ”குஞ்சர வஞ்சியு மான்ம டந்தையும்”   என்றெல்லாம் பாடுகிறார்.  தந்தியின் கொம்பைப் புணர்வோனே என்ற இடத்திலும் இதே பொருள்தான். தந்தி என்பது யானை. அது வளர்த்த கொடி போல் இருக்கும் தெய்வானையை ஆட்கொண்டவனே என்பது இதன் பொருள். பாம்பன் ஸ்வாமிகள் அருளிய குமாரஸ்தவம் என்ற தொகுப்பில் ”ஓம் குஞ்சரி பதயே நமோ நம” எனச் சொல்லி இருக்கிறார். இவர்கள் மட்டுமில்லாமல் குஞ்சரி என்பது பரவலாகப் பயன்பட்ட ஒரு பெயரே.

கர்நாடக சங்கீதத்தை எடுத்துக் கொண்டால் பாபநாசம் சிவன் அவர்கள் பழனியப்பன் நின்பதம் மறவேன் எனத் தொடங்கும் பாடலில் மழை நிகர் பைங்குழல் வள்ளி குஞ்சரி மணாள என்றும் கதிர் காமக் கந்தன் எனத் தொடங்கும் பாடலில் பன்னிரு தோளா வள்ளி குஞ்சரி மணாளா என்றும் பாடி இருக்கிறார். இங்கும் இன்னும் பலரும் கூட பாடல்களில் குஞ்சரி எனப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

திருவிடைக்கழி என்ற ஊரில் அமைந்திருக்கும் கோயிலில் முருகனின் பெயரே குஞ்சரி ரஞ்சித குமரன். சொல்லும் பொழுதே அழகாக இருக்கிறது இல்லையா. அதே போல சுவாமிமலை உட்பட பல இடங்களில் முருகனின் வாகனமாக ஐராவதம் இருப்பதையும் காணலாம்.

கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தால் குஞ்சம் என்பது பெண்கள் கூந்தலில் அணிவது. அழகான குஞ்சத்தை அணிந்திருப்பவளைக் குஞ்சரி என்றும் சொல்லலாம் இல்லையா!

இலவசக் கொத்தனார்

ட்விட்டரில் ‘வாத்தி’ என்று செல்லமாக விளிக்கப்படும் இலவசக் கொத்தனார் கோட்டும் டையும் அணிந்த நவீன சீத்தலைச் சாத்தனார். இணையத்தில் எழுத்துப் பிழைகளுக்கே முகம் சுளிக்கிற, இலக்கணப் பிழைகளைத் திருத்த முற்படுகிற மைனாரிட்டி அப்பாவிகளில் ஒருவர். இன்னொருபக்கம், சிலேடை, வெண்பா, வார்த்தை விளையாட்டு, ’எல்லா வார்த்தைகளும் தமிழில் இருந்து சென்றவைதான்’ என்கிற ரேஞ்சுக்கு நகைச்சுவைப் பதிவுகள் எனக் கலவையான ரசனை கொண்டவர். இவரது சமீபத்திய நூலான ‘ஜாலியா தமிழ் இலக்கணம்’ சென்னை புத்தகக் கண்காட்சியில் செம ஹிட்!

இலவசக் கொத்தனாரின் வலைப்பதிவு: http://elavasam.blogspot.in/