அதிகாலை நிலா

  • படம்: வான்மதி
  • பாடல்: வைகறையில் வந்ததென்ன
  • எழுதியவர்: வாலி
  • இசை: தேவா
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், கே. எஸ். சித்ரா
  • Link: http://www.youtube.com/watch?v=Ejky1HZJaQE

வைகறையில் வந்ததென்ன வான்மதி!

கைவளையல் ஓசையிலும் தேன்மொழி!

நித்தம் சாயங்கால நேரம், நெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும்,

நெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம், மழைச் சாரல் வீச வேண்டும்!

பழந்தமிழர்கள் ஒரு நாளை ஆறு பொழுதுகளாகப் பிரித்தார்கள். தலா 4 மணி நேரம் கொண்ட ஒவ்வொரு பொழுதுக்கும் ஒவ்வொரு பெயர்.

அந்தவகையில் ’வைகறை’ என்பது, அதிகாலை 2 மணி முதல் 6 மணிவரையிலான நேரம். இதனை ‘விடியற்காலை’ என்று நாம் இப்போது சொல்கிறோம்.

குறுந்தொகையில் ஒரு பாட்டு. காதலனும் காதலியும் களவொழுக்கத்தின்படி சந்திக்கிறார்கள், கூடி மகிழ்கிறார்கள்.

சிறிது நேரத்தில், பொழுது புலர்ந்துவிடுகிறது. காதலன் புறப்படவேண்டும். இல்லாவிட்டால் காதலியின் வீட்டைச் சேர்ந்தவர்கள் அவனைக் கண்டுபிடித்துவிடுவார்கள்.

அள்ளூர் நன்முல்லை என்ற புலவர் இந்தச் சூழ்நிலையை விவரிக்கும்போது, ‘தோள்தோய்க் காதலர்ப் பிரிக்கும் வாள்போல் வைகறை வந்து…’ என்கிறார். அதாவது, தோளோடு தோள் சேர்ந்து இருக்கும் காதலர்களை வெட்டிப் பிரிக்கின்ற வாளைப்போலப் பொழுது விடிகிறதாம்.

இந்தப் படத்தின் பெயர் ‘வான்மதி’, அநேகமாக அது கதாநாயகியின் பெயராக இருக்கும் என்று நினைக்கிறேன். அதற்கு ’வானில் தோன்றும் நிலா’ என்றும் ஒரு பொருள் உண்டு.

ஆகவே, வாலி குறும்பாக அந்த முதல் வரியை எழுதுகிறார், பொதுவாக நிலா ராத்திரியில்தானே வரும், இப்போது என்ன அதிகாலையில் வந்திருக்கிறது?

***

என். சொக்கன் …

03 02 2013

064/365