குளிருது! குளிருது!

  • படம்: புன்னகை மன்னன்
  • பாடல்: வான்மேகம்
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: இளையராஜா
  • பாடியவர்: கே. எஸ். சித்ரா
  • Link: http://www.youtube.com/watch?v=LpJFQyX4DmM 

மழைத்துளி தெறித்தது, எனக்குள்ளே குளித்தது,

நினைத்தது பலித்தது, குடைக்கம்பி துளிர்த்தது,

வானம், முத்துக்கள் சிந்தி வாழ்கவென்றது,

காதல் வென்றது!

இயைபுத்தொடையில் தெறித்தது, குளித்தது, பலித்தது என்று எழுதிவந்த வைரமுத்து, நிறைவாக ‘குடைக்கம்பி துளிர்த்தது’ என்கிறார். அது என் காதில் ‘குளிர்த்தது’ என்று விழுந்தது.

உண்மையில் ‘குளிர்த்தது’ என்று ஒரு வார்த்தை உண்டா? அது ‘குளிர்ந்தது’ என்றல்லவா இருக்கவேண்டும்?

இங்கே ’குளிர்தல்’ என்பதுதான் வேர்ச்சொல், மலர்தல் ==> மலர்ந்தது, அதுபோல, குளிர்தல் ==> குளிர்ந்தது. சரிதானே? ‘மலர்த்தது’, ‘குளிர்த்தது’ என்று வருமா?

கொஞ்சம் தேடினேன். ’குளிர்த்தல்’, ’குளிர்த்தது’ போன்ற வார்த்தைகள் இப்போது நம்மால் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை, ஆனால் பழந்தமிழ்ப் பாடல்களில் உள்ளன. கம்பனே பயன்படுத்தியிருக்கிறான்.

சுந்தரகாண்டத்தில் அனுமனைப் பிடித்த ராவணன் படையினர் அவனுடைய வாலில் நெருப்பு வைக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட சீதை அக்கினி தேவனைப் பிரார்த்தனை செய்கிறாள், ‘அனுமனைச் சுடாதே’ என்று வேண்டுகோள் (அல்லது கட்டளை) வைக்கிறாள். உடனே, அனுமனின் வால் குளிர்ந்துவிடுகிறது. இதைச் சொல்லும் கம்பன் வரிகள்: ‘தண்மையால் குளிர்த்தது அக் குரிசில் வால்.’

’அனுமன் வால் குளிர்த்தது’ என்று கம்பன் வர்ணிப்பது சரி என்றால், ‘குடைக்கம்பி குளிர்த்தது’ என்று இந்தப் பெண் பாடினாலும் சரிதான்.

ஆனால், ‘குளிர்ந்தது’க்கும் ‘குளிர்த்தது’க்கும் என்ன வித்தியாசம்? எதை எப்போது பயன்படுத்தவேண்டும்?

அதையும் தேடினேன். எனக்குச் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. Logicalலாக யோசித்தபோது தோன்றியதை எழுதுகிறேன், பிழையிருந்தால் சுட்டிக்காட்டித் திருத்துங்கள்.

1. ஒரு கப் காஃபி, சுடச்சுடக் கொண்டுவந்து வைக்கிறேன், அதை அப்படியே மறந்துவிடுகிறேன். ஒரு மணி நேரம் கழித்து, Hot Coffeeயாக இருந்த அது குளிர்ந்த Cold Coffeeயாக மாறிவிடுகிறது.

2. கடையில் குளிர் நீர், ஐஸ் கட்டி போன்றவற்றைப் பயன்படுத்தி நேராக Cold Coffee தயாரிக்கிறார்கள்

இந்த இரண்டுக்கும் ஒரு வித்தியாசம், முதல் காஃபி தானே குளிர்ந்தது, இரண்டாவது காஃபியை நாமாகக் குளிரச்செய்தோம். அதாவது #1 குளிர்ந்த காஃபி #2 குளிர்த்த காஃபி

இங்கே அனுமனின் வால் தானாகக் குளிரவில்லை, அந்தப் பெண்ணின் குடைக் கம்பி தானாகக் குளிரவில்லை, சீதையின் பிரார்த்தனையும், மழைத் தண்ணீரும் அவற்றைக் குளிரச் செய்தன, ஆகவே குளிர்த்த வால், குளிர்த்த குடைக்கம்பி என்று பயன்படுத்துகிறோம்.

இந்த விளக்கம் சரியா? தவறா? தீர்ப்புச் சொல்லுங்கள்!

பின்குறிப்பு: இந்தக் கட்டுரை மொத்தமும், அந்தப் பாடல் வரிகள் ‘குடைக்கம்பி குளிர்த்தது’ என்று அமைந்திருப்பதாக எண்ணி எழுதப்பட்டது. பின்னர் அது ‘ துளிர்த்தது’ என்று தெரிந்துகொண்டேன், So the article became null and void 🙂 ஆனாலும் எனக்கு இந்த அலசலை இழக்க மனம் இல்லை, கொஞ்சம் மாற்றியுள்ளேன் 🙂

***

என். சொக்கன் …

25 01 2013

055/365