அவள் ஒரு ராகமாலிகை

திரையிசை பாடல்கள்  கர்நாடக இசைவடிவத்தை சார்ந்து இருப்பதை  பார்த்திருக்கிறோம்.  கதையின் நாயகிக்கு ராகத்தின் பெயர் வைத்ததையும் பார்த்திருக்கிறோம். ரஞ்சனியும் பைரவியும் சிந்துவும் சஹானாவும் நீலாம்பரியும் கதையில் உலா வருவதுண்டு.

 சண்முகம் என்னும் நாயகனை நினைத்து நாயகி மறைந்திருந்து  பாடிய பாட்டை சண்முகப்பிரியா ராகத்திலும்

அபூர்வமான நாயகியைப்பற்றி  அதிசய ராகத்தில் பாடல் அமைத்ததும்

நாயகியின் பெயர் கொண்ட லலிதா ராகத்தில் இதழில் கதை எழுதியதும்

இசை அமைப்பாளர்களின் இனிய கற்பனை. Creative Brilliance

திரைப்பாடல் வரிகளில் அதிகம் உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தைகளில் ‘ராகம்’ டாப் டென் லிஸ்டில் வரும். ராகங்கள் பதினாறு உருவான வரலாறும் ராக தீபம் ஏற்றும் நேரமும்  நமக்கு தெரியும். சரி ராகங்களின் பெயர்களை அது பெண்ணின் பெயராய்  வருவதை தவிர்த்து  கவிஞர்கள் எப்படி பிரயோகிக்கிறார்கள்?   முதலில் நினைவுக்கு வருவது ‘இசை கேட்டு எழுந்தோடி’ என்று தோடியை கண்ணதாசன் சொன்னதுதான். தர்பாரில் எனக்கு இணை யாரென்று கேட்டதும் ஒரு நாள் போதுமா என்று கேட்ட அதே பாடலில் தான்.

அகத்தியர் படத்தில் ஒரு போட்டி பாடலில் சில முத்துக்கள் உண்டு. எந்த ‘நாட்டையும்’ நாதத்தால் வென்றிடுவேன் என்பதும் ‘அனைத்தும் உன் ‘வசந்தா’னா என்பதும் நயம். இசையமைப்பாளர் இளையராஜா கவிஞராகவும் மாறி என்ன சமையலோ என்று விசாரித்து ‘களைந்திடு அரிசியை கல்யாணி – கல் ஆணி என்று சர்க்கஸ் காட்டுவார்.

கண்ணதாசன் முழுவதும் ராகங்களின் பெயர்களை வைத்து  ஒரு பாடல் எழுதியிருக்கிறார். பெண் ஒன்று கண்டேன் படத்தில் அவளை ராகமாலிகையாய் கற்பனை செய்யும்  பாடல்.

 உன் மை விழி ஆனந்த பைரவி பாடும்

உன் தேகத்தில் மோகன ராகத்தின் பாவம்

நீ ஒரு ராகமாலிகை

உன் நெஞ்சம் என் காதல் மாளிகை

என்று தொடங்கி எல்லா வரிகளிலும் ஒரு ராகத்தின் பெயரை சொல்லும் கவிதை.

 நான் வாவென அழைக்கையில் விரைந்தோடி

வந்து தழுவிடும் தேவ மனோஹரி

ஆரபிமானமும் தேவையில்லை இந்த

அகிலத்தில் உன் போல் பாவையில்லை

நீ ஓடி வந்து தழுவினால் வேறு யார் அபிமானமும் எனக்கு தேவையில்லை என்று சொல்லும் காதல்.

நீ எனக்கே தாரம் என்றிருக்க

உன்னை என் வசந் தாவென நான் கேட்க

என்று ராகத்தின் பெயர்களை பிரித்து பொருள் கொண்டு அவன்  நெஞ்சினில் கொஞ்சும் ரஞ்சனியை அவன் தேடும் நாயகியை  பாடும் வரிகள் செய்யும் வித்தை  நயம்.

பல்லவியும் சரணமும் ராகத்தின் பெயர்களில் சரணம் .

மோகனகிருஷ்ணன்

054/365