கீதையும் காதலின் கீதமும்

பாண்டவ – -கௌரவ யுத்தம். போர்க்களம் வந்த விஜயன், எதிரில் நின்ற அணியை பார்வையிட்டு மனம் தளர்கிறான். ‘கண்ணா, எதிரே பார் என் மாமன் இருக்கிறார் ,என் ஆசான் நிற்கிறார் , மற்றும் நம் உறவினரெல்லாம் வந்திருக்கிறார்கள்’ என்று வில்லை வீசி எறிந்து போரிட மறுக்கும்போது, தர்மத்திற்காகப் போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்பது குறித்து விளக்கி கண்ணன் அவனுக்கு கீதையை உபதேசிக்கிறார். ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் ‘விபூதி யோகம்’ என்ற கடவுளின் பெருமையை சொல்லும் பகுதியில்

‘வேதங்களில் நானே சாம வேதம், தேவரில் நானே இந்திரன்

மலைகளில் நானே மேரு முனிகளில் நானே வியாசன்
மந்திரங்களின் நான் காயத்ரி, மாதங்களில் நான் மார்கழி;
பருவங்களில் மலர் சான்ற இளவேனில்’

என்று தன்னைப்பற்றி கண்ணன் சொல்லும் வரிகள் ரசம் . ஒரு Groupல் உன்னதமானது எதுவோ அது நானே என்னும் பொருளில் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவதை பட்டியல் போல சொல்லும் உபதேசம்.

தமிழகத்தில் இந்த வரிகள் கீதை படிக்காதவர்க்கும் பரிச்சயமானவை. காரணம் ? கண்ணதாசன் இந்த வரிகளை காதலியை பற்றி ஒரு பிரபலமான பாடலில் எழுதுகிறார். http://www.youtube.com/watch?v=baVvb4zJixg

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

என்ற எவர்க்ரீன் பாடலாக்குகிறார். இது கீதையின் அதே best of the Group பாணியில் ஆனால் எளிமையான வார்த்தைகள் கொண்ட பாடல். கீதையில் கண்ணன் ‘ பறவைகளில் நானே கருடன்’ என்று சொன்னதை

பறவைகளில் அவள் மணிப்புறா

பாடல்களில் அவள் தாலாட்டு

கனிகளிலே அவள் மாங்கனி

காற்றினிலே அவள் தென்றல்

என்று சற்றே மாற்றி காதலியைப்பற்றி ஒரு description சொல்வது கண்ணதாசன் டச்

இதையே சமீபத்தில் யுகபாரதி ஒரு பாடலில் http://www.youtube.com/watch?v=042ztDjEGB4 வித்தியாசமாக வேறு கோணத்தில் சொல்கிறார். இவர் சிறந்தவற்றை பட்டியல் போடாமல், மனசுக்கு உகந்த மனசுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களை, பட்டியலாக சொல்கிறார். முக்கியமாக இதை monologue ஆக சொல்லாமல் இன்றைய வாழ்வின் உன்னதமான விஷங்களை வைத்து உரையாடல் போல் சொல்கிறார்.

பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டு பிள்ளைகளின் செல்லக்கோபம்
ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே

சட்டென்று ‘அட ஆமாம்’ என்று கவிஞன் கருத்தோடு ஒத்துபோக வைக்கும் வரிகள். எந்த வயதிலும் எல்லாருக்கும் பிடித்தமான ஜன்னலோரத்தையும் அமைதியான பின்னிரவில் கேட்கும் பாடலையும் நீதான் என்று காதலியிடம் சொல்லும் விதம் அருமை. விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம் என்பதை நினைத்தாலே இனிக்கும். (நான் ஒரு கோடை விடுமுறையில் ஸ்கூல் கிரௌண்டில் கிரிக்கெட் விளையாடி, கலைந்த தலை சீவி நடந்த கதை சொல்லவா?)

தொடர்ந்து பயணத்தில் வருகிற சிறு தூக்கம், பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம், பரீட்சைக்கு படிக்கிற அதிகாலை எல்லாமே நீதானே அன்பே என்று விவரிப்பதில் ஒரு நயம்.

அடைமழை நேரத்தில் பருகும் தேனீர்
அன்பே அன்பே நீதானே
தினமும் காலையில் எனது வாசலில்
இருக்கும் நாளிதழ் நீ….தானே

என்பது ultimate. நாளிதழ் reference அருமை.

பேருந்தில் என்று ஆரம்பிக்கும் இந்த பாடல் கேட்பவர்க்கு கட்டாயம் ஒரு நினைவு பயண அனுபவம் தரும்.

எனக்கு என் வாழ்வில் கிடைக்கும் எல்லா மகிழ்ச்சியான தருணங்களும் உன்னை நினைவுபடுத்துகிறதே என்று காதலன் காதலி பேசிக்கொள்ளும் இந்த கவிதை காதலின் கீதமா கீதையா?

மோகனகிருஷ்ணன்

051 / 365