கஸ்தூரி

நேற்றுதான் நண்பர் நாக இந்த 365பதிவுகள் பற்றிப் பேசியது போல இருக்கிறது. ஆனால் தொடங்கி ஐம்பது பதிவுகளாகி விட்டன. உடனிருந்து பதிவுகள் இடும் நண்பர் நாகாவுக்கும் நண்பர் மோகனுக்கும் ஐம்பதாம் பதிவு வாழ்த்துகள்.

கஸ்தூரி திலகம் லலாட பலகே வக்ஷஸ்தலே கௌஸ்துபம்
நாசாக்ரே நவ மூர்த்திகம் கரதலே வேணும்கரே கங்கணம்

என்ன? வழக்கமாக தமிழ் திரைப்படப் பாடல்களோ தமிழ் இலக்கியப் பாடல்களோ இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? காரணமாகத்தான் இந்த வரிகளை இங்கே கொடுத்துள்ளேன்.

இந்த வரிகள் கிருஷ்ண கர்ணாம்ருதம் என்ற வடமொழி நூலில் வரும் வரிகள். இந்த நூலை பதிமூன்றாம் நூற்றாண்டில் பில்வமங்களர் எழுதியுள்ளார்.

இந்த வரிகளில் வரும் கஸ்தூரியைப் பற்றிதான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

கஸ்தூரி திலகம் என்று கிருஷ்ணனைப் பற்றிச் சொல்கிறது. அதாவது கஸ்தூரியை நெற்றியில் திலகமாக இட்டுக் கொண்டவன் என்று பொருள்.

கஸ்தூரி எப்படி முன்பெல்லாம் தயாரிக்கப்பட்டது தெரியுமா? கஸ்தூரி மானைக்(Musk Deer) கொன்று அதன் உடலிலிருந்து எடுக்கப்பட்டது. மணம் மிகுந்த கஸ்தூரிக்காகவே கொல்லப்பட்ட மான்கள் ஏராளம் ஏராளம். அப்படியான கஸ்தூரியை நெற்றியில் சூட்டிக் கொண்டவனே என்று புகழ்கிறது இந்த வரி. இன்றைக்கு கஸ்தூரி மான்களை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டு விட்டாலும் இயற்கையான கஸ்தூரி கிடைத்துக் கொண்டுதானிருக்கிறது. அதுவும் தங்கத்தை விட மிகமிக அதிகமான விலையில்.

இந்த வரிகளை அவன் அவள் அது என்ற திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் மிகச்சரியான இடத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.

பிள்ளையில்லாத மனைவி கோயிலில் கண்ணனை வேண்டிக்கொண்டிருக்கிறாள். மற்றொரு நாயகியோடு நாயகன் கிருஷ்ணலீலை நடத்திக் கொண்டிருக்கிறான்.

ஆத்தோரம் கொடி வீடு
அதன் மீது கோபாலன்
அவனோடு நானாடுவேன்
என்ற கண்ணதாசனின் வரிகளோடு இடையிடையே கஸ்தூரி திலகம் லலாட பலகே என்ற கிருஷ்ண கர்ணாம்ருத மந்திரங்களும் கலந்து வரும். இப்படி பாடல்களுக்கு நடுவில் மந்திர வரிகளைக் கொண்டு வந்ததை மெல்லிசை மன்னர் எப்போதோ பல பாடல்களில் செய்து விட்டார். இந்தப் பாடலின் வீடியோவும் ஆடியோவும் கிடைக்கவில்லை.

சரி. பதிவின் மையக்கருத்தான கஸ்தூரிக்கு வருவோம். வேறு எந்தத் தமிழ்ப் பாடல்களில் எல்லாம் கஸ்தூரி வருகிறது என்று யோசித்துப் பார்த்தேன். கஸ்தூரியை விட கஸ்தூரி மானே தமிழ்க் கவிஞர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது.

காலையில் திருமணம். மாலை முடிந்ததும் முதலிரவு. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்காமல் மனைவியின் மீது பாய்கிறான். புதுப் பெண். புது மணம். சட்டென்று அவன் பாட்டில் வருவது கஸ்தூரிமான் தான்.

கஸ்தூரி மானே கல்யாணத் தேனே
கச்சேரி பாடு வந்து கைத்தாளம் போடு
பாடல் – வைரமுத்து
பாடியவர்கள் – கே.ஜே.ஏசுதாஸ் மற்றும் உமா ரமணன்
இசை – இசைஞானி இளையராஜா
படம் – புதுமைப் பெண்
பாடலைப் பார்க்க – http://www.youtube.com/watch?v=STm1SzZNY4Y

பஞ்சு அருணாச்சலமும் கஸ்தூரிமான்களை விடவில்லை. அவள் ஒரு கண்டாங்கிக் கன்னி. அவள் மனதிலும் ஒரு காதலன். வந்தவன் அல்ல. இனிமேல் வரப் போகின்றவன். அவனைப் பார்த்தீர்களா என்று மலைவாழைத் தோப்பு முழுவதும் தேடுகிறாள். காட்டையும் மேட்டையும் கேட்டவள் கஸ்தூரிமான்களிடமும் கேட்கிறாள் அந்த அன்னக்கிளி.

மச்சானைப் பாத்தீங்களா மலைவாழத் தோப்புக்குள்ளே
……………………..
கஸ்தூரிக் கலைமான்களே அவரைக் கண்டாக்கச் சொல்லுங்களேன்
பாடல் – பஞ்சு அருணாச்சலம்
பாடியவர் – எஸ்.ஜானகி
இசை – இசைஞானி இளையராஜா
படம் – அன்னக்கிளி
பாடலைப் பார்க்க – http://www.youtube.com/watch?v=pqzzI855yns

இன்னொரு பாடல். காதல் நெஞ்சங்கள் பாடுகின்றன. மாலை மயங்கும் நேரம். சோலைக் குயிலும் கூவும். அது மனிதக் குயிலாக இருந்தால் பாடும். அப்படிப் பாடுகிறது ஆண் குயில். பாடுவது ஏன் என்று கேட்டுப் பாடுகிறது பெண்குயில். பாடல் என்பது வெறும் வரிகளா? இல்லை. அந்தக் குயிலை வரவழைக்க இந்தக் குயில் அழைக்கும் குரல் அல்லவா. கஸ்தூரிமான் போன்ற தன் காதலியை அணைப்பதற்கு ஆசை கொண்ட குயிலின் பாட்டு அது.

மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுது
சோடிக் கருங்குயில் பாடிப் பறந்ததைத் தான் தேடுதோ
……………………………
காவேரி ஆத்துக்குக் கல்லில் அணை
கஸ்தூரிமானுக்கு நெஞ்சில் அணை… நான் போடவா (மாலைக் கருக்கலில்
பாடல் – தெரியவில்லை
பாடியவர் – எஸ்.ஜானகி மற்றும் கே.ஜே.ஏசுதாஸ்
இசை – இசைஞானி இளையராஜா
படம் – நீதியின் மறுபக்கம்
பாடலைப் பார்க்க – http://www.youtube.com/watch?v=V5XmIsjTGc8

பெரிய மான்களைப் பற்றிப் பாடியது போதுமென்று வாலி நினைத்து விட்டாரோ என்னவோ மான்குட்டியைப் பற்றிப் பாட வந்துவிட்டார். குழந்தைகளின் அழுகையைத்தான் நம்மால் தாங்க முடிவதில்லையே. அப்படி அழும் தன் மகளைப் பார்த்து கஸ்தூரிமான் குட்டியே என்று அழைத்து தகப்பன் பாடுகிறான். ஒருவேளை தன்னுடைய மனைவியை கஸ்தூரிமான் என்று பாராட்டுகிறானோ?

கஸ்தூரி மான்குட்டியாம்
அது கண்ணீரை ஏன் சிந்துதாம்
உனை ஆவாரம் பூ தொட்டாதோ
அதில் அம்மாடி புண் பட்டதோ
பாடல் – வாலி
பாடியவர்கள் – ஜெயச்சந்திரன் மற்றும் கே.எஸ்.சித்ரா
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – ராஜநடை
பாடலைப் பார்க்க – http://www.youtube.com/watch?v=_-WYic5_jb4

இன்னும் எத்தனையெத்தனை கஸ்தூரி பாடல்கள் உங்களுக்குத் தெரியும்?

அன்புடன்,
ஜிரா

050/365