மானே! தேனே!

  • படம்: மாப்பிள்ளை
  • பாடல்: மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
  • எழுதியவர்: வாலி
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=kVRgKqAKydI

மொய்குழலில் பூ முடித்து,

மங்களமாய்ப் பொட்டு வைத்து,

மெய் அணைத்து, கை அணைக்க

மன்னவனின் நல்வரவைப் பார்த்திருக்க!

கல்யாணத்தில் மொய் எழுதுவார்கள், தெரியும், குழல் என்றால் தலைமுடி / கூந்தல், அதுவும் தெரியும். இரண்டையும் சேர்த்து ‘மொய்குழல்’ என்றால் என்ன அர்த்தம்?

‘மொய்’ என்ற வினைச்சொல்லின் அர்த்தம், கூடி மொய்த்தல், இந்தப் பெண் தன்னுடைய கூந்தலில் மலர்கள் சூடியிருப்பதால், அல்லது இயற்கையாகவே அவள் கூந்தலுக்கு நறுமணம் இருப்பதால் வண்டுகள் அவளுடைய தலைமுடியைச் சூழ்ந்து மொய்க்கின்றன என்று அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டுமா?

கவிதையை நம் இஷ்டப்படி கற்பனை செய்யலாம். ஆனால் ’வண்டு மொய்குழல்’ என்று இங்கே வெளிப்படையாகக் குறிப்பிடப்படாததால், இதற்கு வேறோர் அர்த்தமும் இருக்குமோ? கொஞ்சம் தேடுவோம்.

மாணிக்கவாசகரின் திருவாசகத்திலிருந்து ஒரு வரி: மொய்குழல் வண்டு இனம் ஆட ஆட…

இங்கே வண்டுகள் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன, ஆனால் மொய்குழல் அதற்கு முன்பாகவே வந்துவிடுகிறது. ஆக ‘மொய்’க்கு வண்டு சம்பந்தப்படாத இன்னோர் அர்த்தம் இருந்தாகவேண்டும்.

அகராதியைக் கேட்டேன், ‘மொய்’க்கு ‘நெருங்கிய’ என்று ஒரு பொருள் இருப்பதாகச் சொல்கிறது. வண்டுகள் ‘மொய்’ப்பதுகூட, ஒன்றாக நெருங்கிதானே?

இந்த விளக்கம் இங்கே கச்சிதமாகப் பொருந்துகிறது. அவளுடைய கூந்தல் அடர்த்தியானது, அதில் உள்ள தலைமுடிகள் மிகவும் நெருங்கிக் காணப்படுகின்றன, அத்தகைய மொய்குழலில் அவள் பூ முடித்தாள், அதனால் வண்டுகள் மொய்த்தன, அது வண்டுமொய் மொய்குழலாகிவிட்டது!

***

என். சொக்கன் …

19 01 2013

049/365