தீர்ப்ப மாத்தி சொல்லு

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம் என்று சொல்கிறார் கண்ணதாசன். சரி  கண்ணகிக்கு, ஊரை எரித்தவளுக்கு ஏன் சிலை? இது என்ன நியாயம்?

வேண்டுமென்றே அடுத்தவரின் வீட்டுக்கு தீ வைப்பது Arson என்ற குற்றம். இவள் ஒரு ஊரையே எரித்தவள். அரசியல், நதி, மொழி, ஜாதி இனம் மதம் என்று எல்லா போராட்டங்களிலும் எதையாவது தீயிட்டு கொளுத்தும் பழக்கத்திற்கு இவள்தான் முன்னோடியா? இவளுக்கு ஏன் சிலை? புரியவில்லை.

வைரமுத்துவின் டேக் இட் ஈசி  பார்வையில்

புரட்சிகள் ஏதும் செய்யாமல் பெண்ணுக்கு நன்மை விளையாது
கண்ணகி சிலைதான் இங்குண்டு சீதைக்கு தனியாய் சிலையேது?

மேலும் குழப்பம். என்ன நடக்குது இங்கே? ஏன் வைரமுத்து சீதையை கண்ணகியோடு சேர்த்து பேசி கலாய்க்கிறார்?

கண்ணகியும் சீதையும் வேறு வேறு. இருவரும் ஒரே வாக்கியத்தில் அடைக்கப்படுவதே அநியாயம் இல்லையா? பல பட்டிமன்றங்களில் கொலைவெறியோடு விவாதிக்கப்பட்ட கற்பில் சிறந்தவள் இவளா அவளா என்ற  கேள்வியே அபத்தமானது. இருவரின் பிரச்னைகளும் தீர்வுகளும் ஒன்றல்ல. கண்ணகி தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக நினைத்தவுடன் போராட புறப்பட்டவள். சீதை ‘எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு’ என்று ராமனோடு சென்று அல்லல்பட்டு கண்ணில் நீர் தெரிய நின்ற நிலை நமக்கு தெரியும். இன்றைய மதிய நேர தொலைக்காட்சி சீரியல் கதாநாயகி ஆக எல்லா தகுதியும் உடையவள் சீதைதான்.

இருவருக்கும் பொதுவான ஒரே அம்சம் நெருப்பு மட்டும் தான். கண்ணகி அதை மதுரை மீது எறிந்தாள். சீதை தானே அதில் நின்று எரிந்தாள்.

கண்ணகி பெண்கள் நலனுக்காக புரட்சி செய்தவளா? அதனால்தான் அவளுக்கு சிலையா? தன் நலம் தவிர வேறெதுவும் தெரியுமா அவளுக்கு? வைரமுத்துவின் வாதம் புரியவில்லை. நல்ல தமிழாசிரியர்கள் பலர் நமக்கு சொல்லித்தந்த ‘ஆராயாமல் தீர்ப்பு வழங்கிய மன்னனே உனக்கு நான் உரைப்பது என்னவென்றால்’ என்ற பாடல்  கண்ணகியும் ஆராயாமல் மதுரையை எரித்தாள்  என்பதை சொல்லவேயில்லையே.

சரி வாலியை கேட்கலாம். அக்னி சாட்சி படத்தில் ஒரு நாட்டிய நாடகம். ‘ஆரம்பம். அதிகாரத்தின் முடிவில் ஓர் ஆரம்பம், சிலப்பதிகாரத்தின் முடிவில் ஓர் ஆரம்பம்’ என்று ஒரு Sequel போடுகிறார்.

‘அநீதி கொன்றது மங்கையின் பதியை
அக்னி தின்றது மதுரையம்பதியை’

அடடா இவரும் Same சைடு கோல் போட்டு வாதத்தை துவக்குகிறார். கண்ணகி தான் வைத்த தீ சரியாக எரிகிறதா என்று பார்க்க ஊர்வலம் வரும்போது ஒரு பெண்ணை பார்க்கிறாள். அவள் தலைவிரிகோலமாக

இன்னுயிர் தலைவன் பொன்னுயிர்தனை காவலன் நீதி கொண்டது போலே
என்னுயிர் தலைவன் இன்னுயிர் தன்னை இழந்து நிற்கும் ஏந்திழையாள் நானே

அதற்கு காரணம் நீ வைத்த தீயே என்று கண்ணகி மேல் குற்றம் சாட்டுகிறாள். கண்ணகி விடவில்லை. துஷ்டக்காவலன் இஷ்டக்கோவலன் என்று வார்த்தை வித்தை செய்து

குற்றத்தீர்ப்பெழுதிய கூடல் மாநகர்
முற்றும் தீர்ந்திட தீ வைத்தேன்.

என்ன தவறு என்று கேட்க அந்தப்பெண் இந்த வாதத்தை ஏற்கவில்லை.

குற்றமிழைத்தவன் செத்து மடிந்தபின் மற்ற உயிர்க்கேன் தண்டனையோ
உந்தன் இழப்பினில் ஊரை எரிப்பது எந்தவிதத்தில் நெறிமுறையோ

என்று சொல்லி ‘மற்ற உயிர்க்கொரு தீங்கு வராமல் உன்னை எரித்திங்கு காட்டுவேன் என்று சபதம் போட்டு நெருப்பிட்டு கல்மனம் கொண்ட கண்ணகியை ஒரு கல்லாய் போக சபிக்கிறாள்.

அட இதுதான் சரி. அவள் சாபத்தில் கல்லாய் போனதைத்தான் நாம் சிலை என்று கொண்டோமா? வாலிக்கு ஒரு ஜே

மோகனகிருஷ்ணன்

048/365