அழகிய அண்ணி

நான் இந்தப் பதிவில் சொல்லப் போவதெல்லாம் ஆண்களுக்கு அறிவுப்பூர்வமாக மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஆனால் பெண்கள் உணர்வுப்பூர்வமாகவும்புரிந்து கொள்ள முடியும்.

உலகத்தில் எத்தனை பேருக்கு அலுப்பாக இருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கும்? அலுப்பாக இருப்பதையும் சுகமாக அனுபவிப்பது என்பது பெண்களால் மட்டுமே முடியும். அது கூட அவர்கள் மசக்கையாக இருக்கும் போது மட்டுமே.

முப்பிணிகளும் உண்டாகட்டும் என்பது பிரபலமான காளிதாசன் வாழ்த்து. பெண்களுக்குச் சொல்லப்படுவது. அதிலொன்று பிள்ளை சுமக்கும் பிணியாம்.

திருமண மகிழ்ச்சியை விட ஒரு பெண்ணுக்குத் தான் தாயாகப் போகும் செய்திதான் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்குமாம். அதனால்தான் “ஈன்று புறம் தருதல் எந்தலைக் கடனே” என்று பழந்தமிழ் கூறுகிறது. ஒரு பெண் தாயானதுமே அவளுக்கு கணவன் இரண்டாம் பட்சம் ஆகிவிடுகிறான். குழந்தைகளுக்கு திருமணம் ஆனபிறகுதான் கணவனுக்கு மறுபடியும் முதலிடம் கிட்டும். சில வீடுகளில் குழந்தைகளுக்குத் திருமணம் ஆன பிறகும் கூட கணவன்களுக்கு இரண்டாமிடம்தான்.

ஒரு பையைச் சுமக்கவே நாம் திண்டாடும் போது வயிற்றில் பிள்ளையை இருபத்துநான்கு மணி நேரமும் சுமப்பது எளிதல்ல. விரும்பிய படியெல்லாம் திரும்பிப் படுக்க முடியாது. வேகம் என்ன வேகம்! சாதரணமாகக் கூட நடக்க முடியாது. வயிற்றில் இருக்கும் பிள்ளையைத் தாங்குவதற்கு வசதியாக முதுகு லேசாக பின்னால் வளைந்து எடையை ஈடு கொடுக்கும். ஒருவேளை கர்ப்பிணிப் பெண் தவறிக் கீழே விழுந்தால் கூட அந்த சமயத்தில் பின்புறமாகத்தான் விழுவாள். வயிற்றில் அடிபடாமல் இருக்க இயற்கையே உண்டாக்கி வைத்திருக்கும் வசதி அது.

இப்படி மகிழ்ச்சியையும் பெருமையையும் தரக்கூடிய இந்த மசக்கை நிகழ்வை சம்சாரம் அது மின்சாரம் படத்தில் குடும்பமே கொண்டாடுவதை அழகான பாடலாகக் காட்டியிருப்பார்கள்.

அழகிய அண்ணி அனுபவம் எண்ணி அடிக்கடி சிரித்தாளே
அவள் ரகசியப் பேச்சு அம்பலமாச்சு அதை எண்ணி தவித்தாளே
படம் – சம்சாரம் அது மின்சாரம்
பாடல் – வைரமுத்து
பாடியவர்கள் – இசையரசி பி.சுசீலா, ஜெயச்சந்திரன்
இசை – சங்கர்-கணேஷ்

இந்தப் பாட்டின் நடுவில் சில வரிகள் இப்படி வரும்.

மாங்காயும் இனிக்குமடி
சாம்பலுந்தான் ருசிக்குமடி

மசக்கை வந்து விட்டாலே எதையெதையோ சாப்பிட ஆசையாக இருக்கும். ஆனால் எதையும் சாப்பிட முடியாது. எதையாவது வதக்கும் வாசனை கூட உமட்டும். யாருக்கு எந்த வாசனை உமட்டும் என்றே சொல்ல முடியாது. சிலருக்கு உமட்டி வாந்தி வருவதும் உண்டு. சிலருக்கு எதுவும் ஒன்றும் செய்யாது.

பட்டிக்காட்டுகளில் ஓட்டுச்சட்டி நெருப்பில் சுடும் வாடையைப் பிடித்துக் கொண்டே கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட்ட கதையெல்லாம் சொல்வார்கள்.

சைவமாக இருந்தால் முளைக்கட்டி வேகவைத்த பயறுகளையும் பேரிச்சம்பழங்களையும் பாலையும் நிறைய சாப்பிட வேண்டும். ஆனால் சிலருக்குப் பால் ஒவ்வாமை உண்டாவதும் உண்டு.

அசைவம் சாப்பிடுகின்றவர்களாக இருந்தால் நெத்திலிக் கருவாடு நல்லது. ஆனால் சிலருக்கு அந்த வாடை பிடிக்காமல் போகலாம். நெத்திலிக்கும் பூண்டுக்கும் தாய்க்கு பால் நிறைய சுரக்க வைக்கும் பண்பும் உண்டு.

மசக்கைக்கு இதுதான் ருசி என்றில்லை. ஆளுக்கொரு மணம். நாக்குக்கொரு சுவை. ஒவ்வொன்றும் ஒருவிதம்.

ஆனாலும் மசக்கைக்கு ஒரு பொதுச் சுவை உண்டு. அதுதான் புளிப்பு. மாங்காய் என்று சொல்லும் போதே வாயூறும். மாங்காயை கல்லில் வைத்து நைத்து நறுச் நறுச்சென்று சாப்பிடச் சொல்லும். புளியையும் உப்பையும் ஒன்றாக வைத்து தட்டி எடுத்து நாக்கில் வைத்துச் சப்புக் கொட்ட ஆசை உண்டாகும். இதுவும் போதாமல் ஓட்டுச் சில்லை நக்கிய பெண்களும் உண்டு. தவிட்டுப் பானையை கவிழ்த்து உருட்டிய பெண்களும் உண்டு. இன்னும் சில பெண்கள் அடுப்புச் சாம்பலில் பல்லை மட்டும் விளக்காமல் வயிற்றுக்கும் ஈவார்கள்.

இன்றைய மருத்துவம் மசக்கையால் உண்டாகும் சோகைதான் அந்த புளிப்பு விருந்தை உண்ணத் தூண்டுகிறது என்று சொல்கிறது.

இந்த புளிப்புச் சுவை ருசிப்பை சங்க இலக்கியமும் காட்டுகிறது. சங்க நூல்களில் முதலில் தொகுக்கப்பட்டதாகக் கூறப்படும் குறுந்தொகையே மசக்கைப் பெண்ணின் புளிப்பு வேட்கையை அழகாகக் காட்டுகிறது.

அம்ம வாழி-தோழி-காதலர்
இன்னே கண்டும் துறக்குவர் கொல்லோ-
முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ
ஒதுங்கல் செல்லாப் பசும் புளி வேட்கைக்
கடுஞ்சூல் மகளிர் போல
நீர் கொண்டு,
விசும்பு இவர்கல்லாது தாங்குபு புணரி,
செழும் பல் குன்றம் நோக்கி,
பெருங் கலி வானம் ஏர்தரும் பொழுதே?
பாடியவர் – கச்சிப்பேட்டு நன்னாகையார்
நூல் – குறுந்தொகை
திணை – முல்லை

இந்தப் பாட்டில் மசக்கை கொண்ட பெண்களின் புளி வேட்கைக்கு அளவு சொல்கிறது.

ஒரு மசக்கைகாரி எப்படி புளியை ருசிப்பதற்கு வேட்கை கொள்வாளோ அந்த வேடையோடு மேகமானது நீரை ஆர்வத்தோடு முகக்கிறது.

அந்த வேட்கையை புரிந்து கொண்டதால்தான் வளைகாப்பின் போது புளிப்புச்சுவை மிகுந்தவைகளைச் செய்து உண்ணச் செய்கிறார்கள். எலுமிச்சம்பழ சாதம், புளியோதரை, கிடாரங்காய் சாதம், நாட்டுத்தக்காளி சாதம், புளியிடியாப்பம், எலுமிச்சை சேவை என்று வகைவகையாகக் கிடைக்கும்.

சங்க காலமோ இந்தக் காலமோ மசக்கையருக்கு புளிப்புதான் பிடித்த சுவை என்பது தெளிவாகத் தெரிகிறது.

அதனால்தான் இன்றைக்கும் மசக்கையைப் பற்றி எழுதும் சினிமாக் கவிஞர்கள் எல்லாரும் மாங்காயையும் புளியையும் சாம்பலையும் தொடாமல் எழுதவே முடியவில்லை. சந்தேகம் இருந்தால் எல்லா மசக்கைப் பாடல்களையும் எடுத்துப் பாருங்கள். நீங்களும் நான் சொல்வதை ஒப்புக் கொள்வீர்கள்.

அன்புடன்,
ஜிரா

047/365