சார்! கிளி சார்!

  • படம்: உழவன்
  • பாடல்: பெண்ணல்ல பெண்ணல்ல, ஊதாப்பூ
  • எழுதியவர்: வாலி
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
  • Link: http://www.youtube.com/watch?v=z334mCVWnYo

தென்றலைப்போல நடப்பவள், என்னைத் தழுவக் காத்துக் கிடப்பவள்,

செந்தமிழ் நாட்டுத் திருமகள், எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்,

சிந்தையில் தாவும் பூங்கிளி, அவள் சொல்லிடும் வார்த்தை தேன் துளி,

அஞ்சுகம்போல இருப்பவள், கொட்டும் அருவிபோலச் சிரிப்பவள்!

’அஞ்சுகம்’ என்ற சொல்லைப் பல பாடல்களில் கேட்கிறோம். காதலியை ‘அஞ்சுகமே’ என்று நேரடியாக அழைப்பதும், இந்தப் பாட்டில் வருவதுபோல் ‘அஞ்சுகம் போன்றவளே’ என்று வர்ணிப்பதும் உண்டு, பெண் குழந்தைக்கு ‘அஞ்சுகம்’ என்று பெயர் சூட்டும் பழக்கமும் இருந்திருக்கிறது.

இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்?

’அஞ்சுகம்’ என்பதை அம் + சுகம் என்று பிரித்துப் படிக்கவேண்டும். ’அம்’ என்றால் அழகிய, ‘சுகம்’ என்றால் கிளி, சுக முனிவர் என்று கிளி முகம் கொண்ட ஒருவரைப்பற்றிக் கேட்டிருக்கிறோம், அதே சொல்தான்.

‘சுகம்’க்கு நாம் நன்கு அறிந்த இன்னொரு பொருளும் இருக்கிறது, இன்பம்.

ஆக, ‘அஞ்சுகம்’ என்று ஒரு பெண்ணை அழைத்தால், அழகிய கிளி போன்றவளே, அல்லது, அழகிய இன்பத்தைத் தருபவளே என்று அர்த்தம்.

ரொமான்ஸ் மழை ஆச்சா, கொஞ்சம் பக்தி மழையும் பொழிவோம். திருமந்திரத்தில் ஓர் இடத்தில் ‘அஞ்சுக அஞ்செழுத்து’ என்று வருகிறது. இதற்கு என்ன அர்த்தம்?

  • அழகிய கிளி போன்ற அஞ்செழுத்து மந்திரம்?
  • அழகிய சுகம் தரும் அஞ்செழுத்து மந்திரம்?

ம்ஹூம், இரண்டுமே சரிப்படவில்லை. ‘நமசிவாய’ என்ற திருமந்திரத்துக்கும் மேற்சொன்ன அஞ்சுக வர்ணனைகளுக்கும் சம்பந்தம் இருக்குமா என்ன?

இங்கே ‘அஞ்சுக’ என்பதை ‘அஞ்சு உக’ என்று பிரிக்கவேண்டுமாம். ‘அஞ்சு’ என்றால் நம்மைச் சோதனை செய்யக்கூடிய ஐந்து மலங்கள் / தீமைகள், ‘உக’ என்றால் அழிய, ’நம்மைத் துன்புறுத்தும் ஐந்து பிரச்னைகளையும் அழிக்கக்கூடிய அஞ்செழுத்து மந்திரம்’  என்கிறார் திருமூலர்.

அட, காதலுக்கும் கடவுளுக்கும் ஒரே சொல், ஆனால் வெவ்வேறு பொருள், பலே!

***

என். சொக்கன் …

16 01 2013

046/365