மாட்டுக்கு மரியாதை

பொங்கல் பண்டிகை சார்ந்து நமக்கு நினைவுக்கு வரும் வார்த்தைகள் என்ன? கரும்பு, பொங்கல், விடுமுறை, பட்டிமன்றம், சூரியன், வயல், அறுவடை, உழவன், திருவள்ளுவன், மாடு மற்றும் இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாக போன்ற வார்த்தைகள்.

பொங்கல் – உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலே. பொன் விளையும் பூமிக்கு வந்தனம் சொல்லி , தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தை மட்டும் தந்து அணைக்கின்ற சூரியனை வணங்கி, உதவிய கால்நடைக்கு நன்றி சொல்லி வழிபடும் பண்டிகை.  கால்நடை என்று சொன்னாலும்  இது மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவை ஆராதிக்கும்  நாளாகவே கொண்டாடப்படுகிறது.
உழவையும் கிராமத்தையும் காட்டிய திரைப்பாடல்களில்  பசு / மாடு பற்றி என்ன இருக்கிறது? மக்கள் திலகம் மாட்டுகார வேலனாகவே வந்தவர். ரஜினிகாந்த் பால்காரனாக வந்தவர்.
முதலில் மக்கள் திலகம் அவர் பசுவை வணங்கி பாடும் பாடலாக கண்ணதாசன் எழுதியது
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே

பாடலில் குங்கும கலையோடு குலம் காக்கும் பெண்ணை  குணத்தில் பசுவென்று சொல்கிறார். காலையில் பசுவின்  முகம் பார்த்த பின்தான் கடமை செய்வாள் எங்கள் தமிழ் நாட்டு பெண் என்று ஒரு கிராமத்து அத்தியாயம் சொல்கிறார். வேறென்ன சிறப்பு?

வளர்த்தவரே உன்னை மறந்து விட்டாலும்

அடுத்தவரிடத்தில் கொடுத்து விட்டாலும்

வளர்ந்த இடத்தை நீ மறக்காத தெய்வம்

வாய் மட்டும் இருந்தால்

நீ மொழி பேசும் தெய்வம்

தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு

சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு

பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு

பூப்போலே வைத்துன்னை காப்பதென் பாடு

என்று புகழாரம் பாடுகிறார்இது மட்டுமா  வந்தேன்டா பால்காரன் என்று சொல்லி வைரமுத்து பசு மாட்டை பற்றி புது பாட்டு கட்டி பாடுகிறார்.

புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும்

பாதிப்புள்ள பொறக்குதப்பா பசும்பால தாய்ப்பாலா நம்பி

தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது பசுவோட வேலையப்பா

சாணம் விழுந்தா உரம் பாரு

 எருவை எரிச்சா திருநீறு

என்று பசு நமக்கு செய்யும் உதவிகளை சொல்கிறார்.

இன்னொரு பாடல் கோமாதா எங்கள் குலமாதா படத்தில் அன்பு தெய்வமாக அன்னை வடிவமாகவே பசுவை வணங்கிய பாடல்
பண்பால் அன்பால் பாசத்தின் பிணைப்பால்
பசுவே நீ தரும் பால்
உன்பால் உலகை உருகிடசெய்யும்
பெண்பால் நீயென பேசிட செய்யும்
பசுவுக்கு வழிபாடு. காளைக்கு?
சொன்னபடி கேளு மக்கர் பண்ணாத
என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாத
என்று சொல்லி ஜல்லிக்கட்டு விளையாடுவர்.!
மோகன கிருஷ்ணன்
045/365