சிப்பிக்குள் முத்து

 • படம்: ராஜபார்வை
 • பாடல்: அந்திமழை பொழிகிறது
 • எழுதியவர்: வைரமுத்து
 • இசை: இளையராஜா
 • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி, டி. வி. கோபாலகிருஷ்ணன்
 • Link: http://www.youtube.com/watch?v=J7ThzbP32QI

சிப்பியில் தப்பிய நித்திலமே,

ரகசிய ராத்திரிப் புத்தகமே!

இன்றைக்கு நாம் அதிகம் பயன்படுத்தாத ஒரு சொல், ’நித்திலம்’. இந்தப் பாடலில் சிப்பியுடன் சேர்ந்து வந்திருப்பதால், அதன் அர்த்தத்தை ஊகிப்பது எளிது.

‘நித்திலம்’ என்றால் முத்து. திரைப்பாடல்களிலும் நமது பேச்சுவழக்கிலும் அவ்வளவாக உபயோகத்தில் இல்லாவிட்டாலும், பழந்தமிழ் இலக்கியத்தில் நிறைய நித்திலங்கள் உண்டு. சில உதாரணங்கள் இங்கே:

 • ’ஒள் நித்தில நகையாய்’ : ஒளி நிறைந்த முத்துகளைப்போல் சிரிப்பவளே : திருவெம்பாவை (மாணிக்கவாசகர்)
 • ’நித்தில முறுவல்’ : (சீதைக்கு) முத்துப்போன்ற புன்முறுவல் : கம்ப ராமாயணம்
 • ’நித்தில அரி சிலம்பு’ : முத்துப் பரல்களைக் கொண்ட சிலம்பு : பரிபாடல் (பாடியவர் பெயர் தெரியவில்லை)
 • ’நித்திலம் நிரைத்து இலங்கினவேபோலும் முறுவல்’ : (சிவனுக்கு) முத்துகளை வரிசையாக அடுக்கிவைத்ததுபோன்ற புன்முறுவல் : திருவிசைப்பா (கருவூர்த் தேவர்)
 • ’ஆழ்பொருளுள்ளே மூழ்கி எடுத்து நிரல் படக் கோத்து நித்தில மாலைபோல்’… : திருக்குறளைப்பற்றிக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடியது

நித்திலம் என்ற சொல் எப்படி வந்திருக்கும் என்பது தெரியவில்லை, ஆனால் ‘நிதி’ என்ற சொல் இதிலிருந்து வந்ததுதான் என எழுதுகிறார் முனைவர் இராம.கி. ஆரம்பத்தில் முத்துக் குவியலைக் குறித்த ‘நிதி’, பின்னர் பொதுவான செல்வத்தைக் குறிக்கும்படி மாறிவிட்டதாம்.

முத்துக்குமட்டுமல்ல, சிப்பிக்கும் ஓர் அழகான பழந்தமிழ்ச் சொல் உண்டு. ‘இப்பி’. இதற்கு உதாரணமாக, திருஞானசம்பந்தர் பாடிய ஒரு வரி: ‘ஒளிர் இப்பியும் முத்தும் மணியும்…’

***

என். சொக்கன் …

12 01 2013

043/365