நான் சிரித்தால் தீபாவளி

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

பூவை செங்குட்டுவன் எழுதிய இந்த பாடலை எப்போது கேட்டாலும் சட்டென்று ஒரு சிரிப்பு வரும். இதென்ன கலாட்டா ? பக்கத்தில் இருக்கும் பழமுதிர்ச்சோலையை (இச் உண்டாமே!) விடுங்கள். சுவாமிமலை, பழனி மற்றும் திருசெந்தூரில் கேட்காத சத்தம் திருத்தணியில் மட்டும் எதிரொலிப்பது ஏன்? தொடர்ந்து பாடலை பார்த்தால் http://www.youtube.com/watch?v=kgcTDdmew_o பதிலில்லை. வேறு பாடலில் விடை கிடைக்குமா பார்ப்போம்.

புன்னகை மன்னன் பூவிழி கண்ணனைப்போல் நம் தமிழ்கடவுள் முருகனும் சங்கமமானது வள்ளி தெய்வானை இருவரின் நெஞ்சினிலே. இந்திரன் மகள் தெய்வானை

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தையேதடி
வேலன் இல்லாமல் தோகையேதடி

என்று கிறங்கிய உடனே முருகன் ‘வா வந்து பக்கம் நில். இன்னும் நாளும் கோளும் பார்ப்பதேனடி’ என்று ஆட்கொள்கிறான்.

இன்னொரு பெண். காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகை. அவளை நினைத்து கந்தன் உருகுகிறான்.

வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
புள்ளி வைத்து புள்ளி போட்டான் புதுகோலம்தான்

வேடனாய் உரு மாறி, மரமாய் நின்று கிழவனாகி தேனும் தினை மாவும் தின்று டெம்போ எல்லாம் வைத்து – மன்னிக்கவும்- யானை உதவியுடன் வள்ளியின் மனம் கவர முயல்கிறான். அந்த வள்ளி குறத்தியும் தோழியிடம்

பழமுதிர்சோலையிலே பார்த்தவன் வந்தானடி
அவன் அழகு திருமுகத்தில் இழையும் நகை எடுத்து
ஆரமும் சொன்னானடி தோழி

என்று அழகன் முருகனிடம் ஆசைவைக்கிறாள். வள்ளி என்றால் தமிழில் படர்கொடியாம். பக்கத்தில் வேல் வந்து நின்றவுடன் படராமல் இருக்குமோ கொடி? வள்ளிமலையில் அவளை ஏற்றுக்கொண்டு திருமணத்திற்கு பிறகு திருத்தணியில் வாசம்.

தேவன் முருகன் கோவில் கொண்டது வள்ளியின் நெஞ்சத்திலே
அவன் தெய்வானை என்றொரு பூவையை மணந்தது திருப்பரங்குன்றத்திலே

இரண்டு பெண்கள். ஒரு மாலையை இரு தோளுக்கு சூடுதல் இறைவன் தன்மையன்றோ? அதை விடுங்கள். அப்புறம் என்னாச்சு? முருகனுக்கும் இரண்டு மனம் வேண்டும் நிலைமையா? இந்திரன் மகளும் மலைகுற மகளும் முருகனை பாடாய் படுத்தி விட்டாரோ? இதைத்தான் கவிஞர் முருகன் அங்கே சிரித்தால் இங்கே வெடிக்கும் என்று அழகு தமிழில் சொல்கிறாரோ?

இது செந்தூர் முருகன் கோவிலில் மட்டுமில்லை வேறெங்கும் கேட்காத ஒரு சேதி

மோகனகிருஷ்ணன்

042/365