சுருக்கமான விளக்கம்

  • படம்: டூயட்
  • பாடல்: என் காதலே, என் காதலி
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
  • Link: http://www.youtube.com/watch?v=stBDLmlW5EI

அமுதென்பதா?

விஷம் என்பதா? உன்னை

அமுத விஷம் என்பதா?

சமீபத்தில் ஒருநாள், மதிய நேரம், சாப்பிட உட்கார்ந்தவனிடம், ‘தாகம் எடுக்குற நேரம்ன்னு ஒரு பாட்டு கேட்டிருக்கியா?’ என்றார் மனைவியார்.

’இல்லையே, இப்போ எனக்குப் பசி எடுக்குற நேரம்’ என்றேன்.

’எனக்காகக் காத்திருன்னு ஒரு படத்துல அந்தப் பாட்டு வருது, இப்பதான் ஏதோ ஒரு கேஸட்ல கேட்டேன்’ என்றார் அவர். ‘அந்தப் பாட்டை எழுதினது யார்ன்னு கொஞ்சம் கண்டுபிடிச்சுச் சொல்லேன்.’

’ஏன்? என்ன விஷயம்?’

‘அதை அப்புறமாச் சொல்றேன்’ என்று சஸ்பென்ஸ் வைத்தார். நானும் சாப்பிட்டு முடித்துவிட்டு கூகுளைப் புரட்டி அந்தப் பாடலைப் பிடித்தேன். இளையராஜா இசையில் வைரமுத்து எழுதி உமா ரமணன் பாடியது.

’வைரமுத்து’ என்றவுடன் மனைவியார் முகம் வாடிவிட்டது, ‘ச்சே!’ என்றார்.

‘எச்சூச்மீ, வைரமுத்துமேல உனக்கு என்ன அப்படி ஒரு கோவம்?’

‘கோவமெல்லாம் இல்லை. இந்தப் பாட்டு வேற யாராச்சும் எழுதியிருந்தாங்கன்னா உனக்கு ஒரு சூப்பரான மேட்டர் சொல்லியிருப்பேன்’ என்றார்.

’இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை, சொல்லு, கேட்கறேன்.’

‘தாகம் எடுக்குற நேரம் பாட்டுல ஒரு வரி வருது: காதல் அமுதமா, விஷமுமா, இல்லை அமுத விஷமா?’

‘அட, இதே வரி டூயட்ல ஒரு பாட்டுலயும் வருதே.’

’அதான் மேட்டர்’ என்றார் மனைவியார், ‘எனக்காகக் காத்திரு பாட்டுல இந்த வரியை எழுதியிருக்கார் வைரமுத்து, அந்தப் பாட்டு அவ்வளவாப் பிரபலமாகலை, யாரும் கவனிக்கலையேங்கற ஆதங்கத்துல, பல வருஷம் காத்திருந்து, மறுபடி அதையே பயன்படுத்தியிருக்கார், இப்போ க்ளிக் ஆகிடிச்சு!’

அது நிற்க. ’அமுத விஷம்’ என்பது, தமிழ் இலக்கணப் பதமாகிய ‘முரண் தொடை’க்கு மிக நல்ல உதாரணம்.

உடனே ரம்பாவின் யூட்யூப் வீடியோக்களைத் தேடாதீர்கள், ‘தொடை’ என்றால் தொடுப்பது, அமுதம், விஷம் என ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரண்டு பதங்களைச் சேர்த்துத் தொடுப்பதால் இது ‘முரண் தொடை’.

கம்பர்கூட அமுதத்தையும் விஷத்தையும் சேர்த்துத் தொடுத்திருக்கிறார், சீதையின் கண்களுக்கு உவமையாக: ‘நஞ்சினோடு அமுதம் கூட்டி நயனங்கள்’!

***

என். சொக்கன் …

10 01 2013

040/365