நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

Disclaimer கம்பன் பற்றியோ இராமாயணம் பற்றியோ விரிவாக பேசும் அருகதை எனக்கு இருப்பதாக நான் நினைக்கவேயில்லை. இது திரைப்பாடல் வரிகள் எனும் டம்ளருக்குள் நீச்சல் அடிக்கும் முயற்சி.

ஒரு பாடலில் இரண்டு கேள்விகள்.

கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும் காதல் வந்த நேரம் என்னவோ?
வைதேஹி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ?

கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும் காதல் வந்த நேரம் என்னவோ?

இது சுலபம். இராமயணத்தை பள்ளியில் பாடமாக மட்டும் படித்தவர்க்கும் தெரியும் அந்த ‘அண்ணலும் நோக்கி அவளும் நோக்கிய’ தருணம். (அது அந்த காலம். இப்போது நோக்கியா என்று சொன்னால் அவள் uncle என்று சொல்லிவிட்டு போகும் அபாயம் உண்டு) கண்ணோடு கண்ணை கவ்வி, மெல்லுடா என்னை தின்னுடா என்று பார்த்தாலே பரவசமான தருணம். இருவரும் பார்வையாலே தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே என்று கம்பன் சொல்லும் பொன் தருணம்

வைதேஹி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ?

இதுவும் தெரியும். வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் ஸ்ரீராமன் தந்த பொன் வண்ண மாலையை பொங்கும் மகிழ்வோடு வைதேஹி ஏற்றுக்கொண்ட நேரமும் தெரியும்

யோசித்து பார்த்தால் இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்று தோன்றுகிறது. ராமன் வில் ஒடிக்கும் முன் வந்துவிட்ட காதல். அவள் சுயம்வரம் கொள்ள வேறு சில மன்னவர்களும் மிதிலைக்கு வந்திருந்த வேளை. சட்டென்று ஜானகி மனதில் கலவரம் ‘இவன் வில்லை முறிக்கவில்லை என்றால் என்ன ஆகும்’ என்று கவலை. காணாமல் போன பக்கங்களில் சீதையின் நிலை என்ன? கண்ணதாசன் அழகாக ஜனகனின் மகளின் நிலையை விவரிக்கிறார்

மணிமுத்து மாணிக்க மாடத்தில் இருந்து ஜானகி பார்த்திருந்தாள்
இரு மைவிழி சிவக்க மலரடி கொதிக்க இராமனை தேடி நின்றாள்

என்று ஆரம்பித்து நாணம் ஒரு புறம் ஆசை ஒரு புறம் கவலை மறுபுறம் என்று அவள் நிலை சொல்கிறார்.

கொதிக்கின்ற மூச்சு மாலையில் விழுந்து மணியும் கருகியதே
அவள் கூந்தலில் இருந்த மலரும் ஜானகி நிலைமைக்கு உருகியதே

மணியும் மலரும் கூட உருகும் என்ற வரிகள் எவ்வளவு அழகு. நேரே பார்த்து வர்ணனை சொல்வது போல் தொடர்ந்து

நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள் கண்களை மறைக்கவில்லை
அவள் மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீர் மறைத்தும் மறையவில்லை

என்று வாடும் ஒரு பெண்ணின் கோலத்தை கண்ணெதிரே காட்சியாக விரிக்கிறார். முனிவன் முன்புறம் ஸ்ரீராமன் பின்புறம் நடக்க அவள் சிந்தையெல்லாம் அவனிடம் இருந்ததை சொல்லி பிரமிக்க வைக்கிறார்.

மன்னவரெல்லாம் சுயம்வரம் காண மண்டபம் வந்துவிட்டார்
ஒரு மன்னவன் யாரோ வில்லை எடுத்தான் ஜானகி கலங்கி விட்டாள்

அப்புறம் என்ன ? எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர். வசந்தத்தில் ஓர் நாள் கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும் மணமுடித்து – இனியெல்லாம் சுகமே

மோகனகிருஷ்ணன்

039/365