கலக்கல்
ஒரு இனிய காதற் சுவை நிறைந்த பாடல். அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக இளையராஜாவின் இசையில் வைரமுத்து எழுதியது. பி.எஸ்.சசிரேகாவும் இளையராஜாவும் இணைந்து பாடியது.
விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இதில் வரும் கலந்த என்ற சொல் வேறொரு பாடலை நினைவுபடுத்தியது. அதுவும் இளையராஜாவின் இசையில் வந்த பாடல்தான். எஸ்.ஜானகியும் கமலகாசனும் சேர்ந்து பாடிய சிவப்பு ரோஜாக்கள் படப் பாடல். அட! இரண்டு பாடல்களுமே பாரதிராஜாவின் இயக்கத்தில் வந்த படங்களில் உள்ளவை.
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன்னுறவை
இரண்டு பாடல்களில் இருக்கும் ஒற்றுமை என்ன?
அது உறவைக் கலப்பது. இந்த கலக்கல் தமிழில் எவ்வளவு பழையது என்று யோசித்துப் பார்த்தேன். தொல்காப்பியரின் ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. ஆம். தொல்காப்பியத்துப் பாடல்தான். பொருளதிகாரத்தின் மரபியலில் வரும் பாடல்.
நிலம்தீ நீர்வளி விசும்பொ டைந்துங்
கலந்த மயக்கம் உலகம்
இந்தப் பாடலின் பொருள் பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அதற்குள் ஒரு செய்தி ஒளிந்திருக்கிறது. அந்தப் பாடலைச் சீர் பிரித்து எளிமையாகத் தருகிறேன். எளிதில் புரியும்.
நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்
நிலம், தீ, நீர், வளி(காற்று), விசும்பு(வானம்) ஆகிய ஐந்தும் கலந்த மயக்கமே உலகம் எனப்படும்.
ஆக.. இந்த ஐந்தும் கலந்ததுதான் உலகம். இல்லை. இல்லை. கலந்த மயக்கமே உலகம்.
அதென்ன கலந்த மயக்கம்?
கலப்பதும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவற்றைச் சேர்ப்பதுதான். மயக்கம் என்பதும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவற்றைச் சேர்ப்பதுதான். ஆனால் ஒரு வேறுபாடு உண்டு. அதென்ன?
கலந்தவைகளை பிரித்து எடுத்து விடலாம். மயங்கியவைகளை பிரித்து எடுக்க முடியாது.
ஒரு கூடை முத்துகளும் ஒரு கூடை வைரங்களும் கலந்து விட்டால் பிரித்து எடுத்து விடலாம். ஆனால் குழம்பில் இட்ட உப்பைப் பிரிக்க முடியுமா? குழம்பில் உப்பு கலப்பது மயக்கம் எனப்படும். இன்னொரு எளிய எடுத்துக்காட்டு சொல்கிறேன். சரக்கோடு சோடாவைக் கலப்பதும் மயக்கமே.
பிரிக்க முடியாதவாறு கலப்பதுதான் மயக்கம்.
ஆனால் இந்த இரண்டு பாடல்களிலும் காதல் மிகுந்து உறவு இணையப் பாடுகின்றவர்கள் உறவு கலந்ததைப் பற்றித்தான் பாடுகிறார்கள். மயங்கியதைப் பற்றிப் பாடவில்லை. ஒருவேளை பிரிவு வரும் என்று நினைத்து உறவு கலந்தது என்று பாடுகின்றார்களோ!
ஆனாலும் மயங்கிய உறவுகளும் உண்டு.
மயங்கினேன்
சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
(நானே ராஜா நானே மந்திரி படத்தில் பி.சுசீலாவும் ஜெயச்சந்திரனும் இளையராஜாவின் இசையில் பாடிய பாடல்)
இந்த மயக்கம் என்பது மயக்கம் போட்டு விழுவதல்ல. அவளுடைய மனம் அவன் மீதானா காதலோடு கலந்து மயங்கி விட்டது. இனிமேல் அவளுடைய அந்த மயக்கத்தைப் பிரிக்கவே முடியாது என்று பொருள்.
காதல் மயக்கம்
அழகிய கண்கள் சிரிக்கும்
ஆலிங்கனங்கள் பரவசம்
இன்று அனுமதி இலவசம்
என்று வைரமுத்து புதுமைப்பெண் படத்துக்காக எழுதிய பாடலைப் பாருங்கள். பாடியவர்கள் ஜெயச்சந்திரனும் சுனந்தாவும்.
இதில் கவிஞர் காதல் கலக்கல் என்று எழுதவில்லை. காதல் மயக்கம் என்று சரியாக எழுதியிருக்கிறார்.
மயங்காத மனம் யாவும் மயங்கும்
அலை மோதும் ஆசைப் பார்வையாலே
என்று ஆலங்குடி சோமு எழுதியது எவ்வளவு உண்மை(காஞ்சித் தலைவன் படத்திற்காக கே.வி.மகாதேவன் இசையில் பாடியவர் பி.பானுமதி).
காதலில் எத்தனை மயக்கங்களோ! எத்தனை கலக்கல்களோ!
அன்புடன்,
ஜிரா
038/365
@anuatma 12:36 pm on January 8, 2013 Permalink |
நல்ல விளக்கம். chemistry பாடம் மாதிரி இருக்கு. 🙂
@RRSLM 9:52 am on January 9, 2013 Permalink |
கலக்கல் GiRa….:-)
amas32 (@amas32) 3:04 pm on January 13, 2013 Permalink |
மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா? இது கண்ணதாசன் பாடல் தானே? மயக்கம் வேறு கலக்கம் வேறு என்று பாகுபடுத்திச் சொல்லிவிட்டாரே 🙂
//ஆனால் இந்த இரண்டு பாடல்களிலும் காதல் மிகுந்து உறவு இணையப் பாடுகின்றவர்கள் உறவு கலந்ததைப் பற்றித்தான் பாடுகிறார்கள். மயங்கியதைப் பற்றிப் பாடவில்லை. ஒருவேளை பிரிவு வரும் என்று நினைத்து உறவு கலந்தது என்று பாடுகின்றார்களோ!// Super!
amas32