அன்னமே!

  • படம்: பாண்டி நாட்டுத் தங்கம்
  • பாடல்: ஏலேலக்குயிலே
  • எழுதியவர்: கங்கை அமரன்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், உமா ரமணன்
  • Link: http://www.youtube.com/watch?v=C3FKJg4qEo8

ஏலேலக்குயிலே, ஏலமலை வெயிலே,

ஆலோலம் பாடும் அன்னமே, ஒயிலே,

வாடாத வாழைக் குருத்தே, மானே,

வாரேனே மாமன் நானே!

இந்தப் பாடலின் கதாநாயகியை ’ஆலோலம் பாடும் அன்னம்’ என்று பாராட்டுகிறார் கங்கை அமரன், அவருக்கு முன்னோடி, உண்மையான ‘ஆலோலம் பாடிய அன்னம்’, முருகனின் நாயகி, வள்ளி.

வயலில் தானியங்கள் விளைந்து நிற்கும் நேரம், அவற்றைத் தின்பதற்காகப் பலவகைப் பறவைகள் வரும். அவற்றை அடித்து விரட்டுவதும் தவறு, அதற்காக அவை அங்கேயே தங்கி நிறையச் சாப்பிடுவதற்கு அனுமதித்தாலும் அறுவடையில் குறைபாடு வரும். ஆகவே, அந்த வயலைக் காவல் காக்கும் பெண்கள் பாட்டுப் பாடி அவற்றை மெல்ல விரட்டுவார்களாம். அந்தப் பாடல் வகைதான் ‘ஆலோலம்’ என்று அழைக்கப்படுகிறது.

கந்த புராணத்தில் வள்ளியம்மை திருமணப் படலம், தினை வயலில் இருக்கும் வெவ்வேறு பறவைகளை ஆலோலம் பாடி விரட்டுகிறார் வள்ளி. அந்தப் பாடல்:

’பூவைகாள், செங்கண் புறவங்காள், ஆலோலம்!

தூவி மா மஞ்ஞைகாள், சொல் கிளிகாள், ஆலோலம்!

கூவல் சேர்வுற்ற குயில் இனங்காள், ஆலோலம்!

சேவல்காள் ஆலோலம்’ என்றாள் திருந்து இழையாள்!

அதாவது, ‘மைனாக்களே, சிவந்த கண்களைக் கொண்ட புறாக்களே, சிறந்த தோகையைக் கொண்ட மயில்களே, பேசும் கிளிகளே, கூவும் குயில்களே, சேவல்களே, உங்களுக்கெல்லாம் ஆலோலம் பாடுகிறேன், லேசாகக் கொறித்துவிட்டுப் பறந்து செல்லுங்கள்’ என்றாள் திருத்தமான ஆபரணங்களை உடுத்திய வள்ளி.

அது சரி, ‘ஆலோலம்’ என்றால் என்ன அர்த்தம்?

‘அகல ஓலம்’ என்பதுதான் பின்னர் ‘ஆலோலம்’ என்று மாறிவிட்டதாகச் சொல்லிறார்கள். ‘ஓலம்’ என்றால் சத்தமாகக் கத்துதல், அகலம் என்றால்? வயல் முழுவதும் தங்கள் குரல் பரந்து விரிந்து கேட்கும்படி பாடுவதால் அப்படிச் சொல்கிறார்களா? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

***

என். சொக்கன் …

07 01 2013

037/365