விஞ்ஞானத்தை வளர்க்க …

இலக்கியம் இலக்கணம் எல்லாம் சரி. தமிழ்த் திரைப் பாடல்களில் அறிவியல் விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கிறதா? தொழில் நுட்பம், இயற்பியல், புவியியல், பறவைகள் பற்றி பயிர்கள் பற்றி ? அல்லது

கூந்தல் கருப்பு ஆஹா
குங்குமம் சிவப்பு ஆஹா

போன்ற அரிய உண்மைகளை மட்டும் சொல்லிப்போனதா? கலைவாணர் தான் முன்னோடி. அவர் ஒரு பாடலில்

விஞ்ஞானத்தை வளர்க்க போரேன்டி
மேனாட்டாரை விருந்துக்கழைச்ச்சி காட்டப்போரேன்டி

என்று ஆரம்பித்து அணுசக்தியால ஆள கொல்லாம ஆயுள் விருத்தி பண்ணப்போவதையும், புஞ்சை நிலத்தில் பருத்தி செடியில் புடவை ரவிக்கை காய்க்கபோவதையும் சொல்கிறார். அதே பாடலில் அவர் மனைவி வீட்டுக்கு வேண்டிய விஞ்ஞானமாக சிலவற்றை கேட்கிறார். நெல்லு குத்த நீரெரைக்க மாவரைக்க மெஷினும், குழாயும் குளிர் மெஷினும் கட்டிலுக்கு மேல Fan னும் காலம் காட்டும் கருவியும் கேட்கிறார். வழக்கம் போல கணவர் கேட்டதெல்லாம் இன்னும் நடக்கவில்லை. மனைவியின் கனவுகள் இன்றைய வாழ்வில் நிஜங்கள். வழக்கம் போல!

அப்புறம் கண்ணதாசன். அவர் எதை பாடவில்லை? ஓதிய மரங்கள் பருத்திருந்தாலும் உத்திரமாகாது என்றும் உரித்து பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது என்றும் அவ்வப்போது Botany விஷயங்கள் சொல்வார்.

குயில் இட்ட முட்டை என்று காக்கைக்கு தெரியும்
அது கூவும்போதும் தாவும்போதும் யாருக்கும் புரியும்

என்று பறவைகள் பற்றி சொல்வார்.

காலையில் மலரும் தாமரைப்பூ
அந்தி கருக்கலில் மலரும் மல்லிகைப்பூ
இரவில் மலரும் அல்லிப்பூ

பூக்கள் பூக்கும் தருணம் சொல்லும் பாடல் பிரபலம். (புலமைப்பித்தன் சொன்ன ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை என்பது பூ இல்லை!).

அன்னம் பாலையும் நீரையும் பிரித்தது பற்றியும் இசையை அருந்தும் சாதக பறவை பற்றியும் மழை வருவது மயிலுக்குத்தெரியும் என்றும் மற்ற கவிஞர்களும் எழுதியதுண்டு . தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்றும் நிலவில் பொருள்கள் எடை இழக்கும் நீரிலும் பொருள் எடை இழக்கும் என்றும் வாலியும் வைரமுத்துவும் physics சொல்லியிருக்கிறார்கள். நதிகளில்லாத அரபுதேசம் , நிலவு இல்லாத புதன் கிரகம் என்னும் வரிகளை காதலுக்கு சொல்லி மகிழ்ந்த பாடலும் உண்டு. ஆணின் தவிப்பு பெண்ணின் தவிப்பு என்று வைரமுத்து வேறுபாடுகள் சொல்லும் வரிகள் ரசம்.

இதயம் துடிப்பது நின்றாலும் இரண்டு நிமிடம் உயிரிருக்கும் என்று வைரமுத்து சொல்கிறார். மின்சார கம்பிகள் மீதும் மைனாக்கள் கூடு கட்டும் என்கிறார் நா முத்துக்குமார். உண்மையா? தெரியவில்லை. தங்கத்தை தட்டி தட்டி சிற்பிகள் சிலை செய்யும்போது ஏன் சாறு பிழிந்தார்கள் என்றும் தெரியவில்லை. அது ஒரு தனி ஆராய்ச்சி

எல்லாவற்றிற்கும் சிகரம் வழக்கம் போல் கண்ணதாசன் வரிகள் தான்.

நிலவே உன்னை அறிவேன் அங்கே மேலே ஓர் நாள் வருவேன்
மலர்ந்தால் அங்கு மலர்வேன் இல்லை பனி போல் நானும் கரைவேன்

நிலா நிலா ஓடி வா என்று சொல்லாமல் நான் அங்கே வருவேன் என்று சொன்ன பாடல். வெண்ணிற ஆடை படத்தில். இது வெளியான ஆண்டு 1965. நிலவில் மனிதன் இறங்கியது 1969ல். சந்திரனை முதலில் தொட்டது கண்ணதாசன் தான்

மோகனகிருஷ்ணன்

036/365