ஆடை கட்டி வந்த…

பெண்ணை வர்ணிக்கும் பாடல்கள் பொதுவாக அவள் உடை பற்றி பேசும். வெவ்வேறு காலகட்டங்களில் வந்த பாடல்கள் அன்றைய ரசனைகளையும் விருப்பங்களையும் சார்ந்து இருக்கும். உடை பற்றிய பாடல் என்றால் முதலில் நினைவுக்கு வருவது

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா

இது பூவாடை வீசி வர பூத்த பருவமா

https://www.youtube.com/watch?v=XMEJZbkQCBE

இந்த உடை ஒரு பெண்ணின் வயதையும் தோரயமாக விவரிப்பதால், கவிஞர் பழைய நினைவுகளை அசைபோட ஒரு Pivot ஆக எடுத்துக்கொள்கிறார். அந்த நாளில் ஒரு பெண் வேறு ஆடை அணிந்தால்

பட்டுப் பாவாடை எங்கே

கட்டி வைத்த கூந்தல் எங்கே

பொட்டெங்கே பூவும் எங்கே சொல்லம்மா… சொல்லம்மா…

என்று கேள்வி வருகிறது. வைரமுத்து அந்தி மழை பொழியும்போது தாவணி விசிறிகள்தான் வீசுகிறார். சமீபத்தில் ஒரு கவிஞர் வீட்டுக்கு வந்ததும் தாவணி போட்ட தீபாவளி தான்

பெண்ணின் சின்ன சின்ன ஆசையில் சேலை கட்ட வேண்டும் என்பதும் உண்டு.வாழ்வின் அடுத்த நிலையில் பெண் சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரும் சித்திர கைத்தறி சேலை கட்டும்பொழுது கவிஞன் தன கற்பனைக்கு றெக்கை கட்டி விடுகிறான். புடவையின் தேர்ந்த மடிப்பு விசிறி வாழைகள் என்று ஒரு பெண் கவி சொல்ல ஆண் கவியோ நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டி என்று கிறங்குகிறான். புலமைப்பித்தன் சேலை சோலையே என்றும் வைரமுத்து சின்னப்பொண்ணு சேலை செண்பகப்பூ போல என்றும் பஞ்சு அருணாசலம் பட்டு வண்ண சேலைக்காரி என்றும் – பல வரிகள் சேலை மகிமை சொல்லும்.

பழனி பாரதி ‘சேலையிலே வீடு கட்டவா சேர்ந்து வசிக்க’ என்று ஒரு வசீகரமான கேள்வி கேட்கிறார். வைரமுத்து தன் பங்கிற்கு

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு

கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா

என்று கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் ரேஞ்சுக்கு ஆதங்கப்பட்டு

சொல்லிவிட்டு இன்னொரு பாடலில் உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்ததே என்பதை கம்பன் பாடாத சிந்தனை என்று அழகாக பொய் சொல்லுகிறார். பரவாயில்லை கவிதைக்கு பொய் அழகுதானே.

செந்தமிழ் நாட்டு தமிழச்சி சேலை உடுத்த தயங்கி சட்டென்று சுரிதாருக்கு மாறியவுடன் கவிஞர்கள் அதை வர்ணிக்க – சுரிதார் அணிந்து வந்த சொர்கமே என்று பாட்டெழுத வைரமுத்து

குல்முஹர் மலரே குல்முஹர் மலரே கொல்லப் பார்க்காதே உன் துப்பட்டா வில் என்னை கட்டிதூக்கில் போடாதே தூக்கில் போடாதே தூக்கி எரியாதே

என்று துப்பட்டாவிடம் பயப்படுகிறார்

பாவாடையும் தாவணியும், பட்டு, சுங்கிடி கைத்தறி கண்டாங்கி சேலை, சுரிதார் துப்பட்டா -என்னடா இது பழைய பஞ்சாங்கம் என்று வெகுண்டெழும் வாலி

அக்கடான்னு நாங்க உடைபோட்டா

துக்கடான்னு நீங்க எடை போட்டா

தடா உனக்குத்தடா

என்று அதிரடியாக Section 144 பரிந்துரை செய்கிறார். https://www.youtube.com/watch?v=u6zywS5ptm4

தொடர்ந்து பிரபுவின் நகைக்கடை புரட்சி போல்

திரும்பிய திசையிலே எங்கேயும் கிளாமர்தான்

நான் போட்ட டிரஸ்சுகளை பிலிம் ஸ்டாரும் போட்டதில்லை

மடிசாரும் சுடிதாரும் போயாச்சு

ஓரங்கட்டு ஓரங்கட்டு

உடையெல்லாம் ஓரங்கட்டு

என்று கேட்பவர்களை மிரள வைக்கிறார்.

இப்போதெல்லாம் ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹலோ சொல்லி கைகுலுக்க என்று வரிகள். இன்றைய டா போட்டு பேசும் da Vinci ஓவியங்கள் எல்லாம் விவேக் சொல்வது போல மாடர்ன் டிரஸ் மகாலக்ஷ்மிகள் தான்

திரைப்பாடல்கள் முடிந்த வரை நம் வாழும் சமுதாயத்தை பிரதிபலிக்க தவறவே இல்லை!

நா.மோகனகிருஷ்ணன்

035/365