காதல் கடிதம்

கடிதம் எழுதுவது எளிது. சொல்ல வந்ததைச் சொல்லத்தானே கடிதம். ஆகையால் எழுதுவது எளிது.

ஆனால் காதல் கடிதம்?

அவளொரு பெண். காதல் வந்து விட்ட பெண். காதலனுக்குக் கடிதம் எழுத வேண்டும். என்ன எழுதுவது என்று தெரியாமல் தவிக்கிறாள். அந்த தவிப்பே அவள் இதயத் துடிப்பை கூட்டுகிறது.

டிக் டிக் டிக் டிக் என்று அவளுடைய இதயத் துடிப்பு அவள் காதுகளுக்கே கேட்கிறது. அது இதயத் துடிப்பா இதயக் கதவைக் காதலன் தட்டும் ஓசையா என்று அவளுக்குப் புரியவே இல்லை.

டிக் டிக் டிக் டிக்
என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர
(இப்படியொரு பாட்டை சுசீலாம்மாதான் பாட வேண்டும். இராணித்தேனீ படத்திற்காக இளையராஜா இசையில் பாட்டை இந்தச் சுட்டியில் http://www.youtube.com/watch?v=keS3RIYZP1Y ரசிக்கலாம்)

எப்படியோ… காதலனோ காதலியோ கடிதத்தை எழுதி முடித்து விடுகிறார்கள். அது வெறும் கடிதமா? வெள்ளைத் தாளில் நீல மை தொட்டு எழுத்தால் எழுதிய கடிதமா? இல்லவே இல்லை. காதலர்களைக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் சொல்வார்கள். அவர்கள் அனுப்புவது கடிதம் அல்ல. உள்ளம். அதில் இருப்பவை எழுத்துகளா? இல்ல. எண்ணம். ஏன் என் இதயத்தையே கடிதமாக்கி எண்ணத்தை எழுத்தாக்கி அனுப்புகிறேன் தெரியுமா? உன் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளத்தான் என்று கருத்தும் சொல்வார்கள் இந்தக் காதலர்கள்.

நான் அனுப்புவது கடிதம் அல்ல..உள்ளம்..
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல..எண்ணம்..
உன் உள்ளமதை கொள்ளைக் கொள்ள..
(பேசும் தெய்வம் திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.சௌந்தரராஜன் பாடியது. பாடலை இந்தச் சுட்டியில் http://www.youtube.com/watch?v=eXbPX5wr6bQ கேட்கலாம்)

இன்னும் சில காதலர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இயற்கை ரசிகர்கள். இயற்கையே இவர்களோடு சேர்ந்து காதலிக்கிறது என்று எண்ணிக் கொள்கின்றவர்கள். இவர்களுக்கு இயற்கையும் உதவுகிறது. மேகம் தூது போகிறது. அன்னம் தூது போகிறது. காற்றும் கூட தூது போகிறது. இந்தக் காதலியும் அப்படியொரு இயற்கைக் காதலிதான். அவளுக்குக் கடிதம் எழுதக் காகிதம் கிடைக்கவில்லை. எழுதுகோல் கிடைக்கவில்லை. அவளுக்குக்கும் கவலையில்லை.

காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா
பேனா மையோ தீர்ந்திடும்
(ஜோடி திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் எஸ்.ஜானகி பாடிய பாடலை இந்தச் சுட்டியில் http://www.youtube.com/watch?v=2hGON9d3_Gk கேட்கலாம்)

சரி. காதல் கடிதத்தை எழுதியாகி விட்டது. அந்தக் கடிதம் உரியவருக்குப் போய்ச் சேர்ந்ததா? போகும் வழியிலேயே கூடாதார் கை பட்டு மாய்ந்து விட்டதா? யாரிடம் கேட்க முடியும் நெஞ்சம்? கடிதத்துக்கு பதில் கடிதம் வரும் வரையில் வந்ததா வந்ததா என்றுதான் காதலர் உள்ளம் ஏங்கி நிற்கும்.

காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா
கடிதம் வந்ததா?
(சேரன் பாண்டியன் படத்தில் சௌந்தர்யன் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடலை இந்தச் சுட்டியில் http://www.youtube.com/watch?v=v6iiE88yVFM கேட்கலாம்)

இரண்டு பக்கங்களிலும் கடிதங்கள் பரிமாறின. கடிதம் மட்டுமா? உள்ளங்களும் அந்த உள்ளங்களுக்கும் இடையே இருக்கும் எண்ணங்களும்தான். இதுவரை காதலை மட்டும் சொன்ன காதல் கடிதங்களுக்கு இப்போது சொல்வதற்கு நிறைய தகவல்கள் இருக்கின்றன. உள்ளம் சந்தித்தாலும் உருவங்கள் சந்திக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நலமா என்பதைக் கூட கடிதத்தில் கேட்க வேண்டிய நிலை.

நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்
நீ இங்கு சுகமே…. நான் அங்கு சுகமா?

நீ இங்கு சுகமே…. நான் அங்கு சுகமா?
நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்
(காதல் கோட்டை திரைப்படத்தில் தேவாவின் இசையில் அனுராதா ஸ்ரீராமும் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பாடிய பாடலை இந்தச் சுட்டியில் http://www.youtube.com/watch?v=Ksbjs1K56BA கேட்கலாம்)

எத்தனையோ தடைகளுக்குப் பிறகு காதல் வெற்றி பெறுகிறது. ஊர் ஒத்துக் கொள்ள உலகம் ஏற்றுக் கொள்ள வெற்றி நடை போடுகிறது காதல். இதுவரை கைகளில் எழுதப்பட்ட கடிதங்கள் இப்போது கண்களால் எழுதப்படுகின்றன. அந்தக் கண்களுக்குள்தான் ஆயிரம் ஆயிரம் உரையாடல்கள்.

அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவது என்னவென்றால் உயிர் காதலில் ஓர் கவிதை

அன்புள்ள மன்னவனே
ஆசையில் ஓர் கடிதம்
அதை கைகளில் எழுதவில்லை இரு கண்களில் எழுதி வந்தேன்

நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தானா முத்து சுடரே
இளய கன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ
வண்ணப்பூங்கொடி வடிவம் கொண்டதோ
வாடை காற்றிலே வாடி நின்றதோ
(குழந்தையும் தெய்வமும் திரைப்படத்தில் பி.சுசீலாவும் டி.எம்.சௌந்தரராஜனும் இணைந்து பாடிய பாடலை இந்தச் சுட்டியில் http://www.youtube.com/watch?v=Zy8RM-nayTg கேட்கலாம்)

காதல் கடிதங்கள் வாழ்க!

அன்புடன்,
ஜிரா

034/365