தேன் உண்ணும் வண்டு

கவிஞர்களுக்கு பூ என்றால் பெண்தான். அவள்தான் ரோசாப்பூ, மல்லிகைப்பூ, ஆவாரம்பூ செந்தூரப்பூ, செவந்திப்பூ, கொத்தமல்லிப்பூ மாம்பூ எல்லாம். பூவின் தன்மையெல்லாம் அவளுக்கு  என்பது போல் பெண்தான் பூ. அவள் ஊதாப்பூ, கன்னங்கள் ரோசாப்பூ, கண்கள் அல்லிப்பூ. அவள் சிரிப்பு மல்லிகைப்பூ என்று மிகையாக வர்ணித்து சலிக்காமல் பெண் பூவுக்கு நிகர் என்று அலங்கார வார்த்தைகளில் ஜாலம் செய்யும் கவிஞர்கள் உண்டு .

பலமுறை சொல்லப்பட்டதால் பெண்ணுக்கு தான் பூதான் என்று நினைப்பு வந்திருப்பது

பொன் வண்டொன்று மலர் என்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என்று நாயகி பாடுவதிலிருந்து தெரிகிறது.
ஆண் ? அவன் வண்டு, தேனீ, பட்டாம்பூச்சி. காலங்காலமாக அவன் பூவையும் பூவில் உள்ள தேனையும் தேடி ஓடும் ஒரு ஜீவராசி. கரப்பான்பூச்சி என்று சொல்லவில்லை.அவ்வளவுதான்.
முல்லை மலர் அவள்தான். மொய்க்கும் வண்டு இவன்
பொதுவாக காதலன் காதலியை தேடி வருகிறான் என்பதை சொல்ல இந்த பூ-வண்டு equation  ஒரு சுலபமான வழி. பூவில் தேனெடுக்க என்று சட்டென்று ஒரு காட்சியை விவரிக்க முடிகிற சௌகர்யம்.

தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு

திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு

பூங்கொடியே நீ சொல்லுவாய்

என்னும் பாடல் வரிகள் சொல்லும் பிம்பமும் அதுவே. வைரமுத்து பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் என்று சொல்வது  கொஞ்சம் ஆணாதிக்கம் போல் தெரிந்தாலும் அழகான சொல்லாடல்.

இதில் ஒரு ட்விஸ்ட் உண்டு.  ஆண் பெண்ணை ஏமாற்றிவிட்டான் என்று சொல்லவும் இதே equation தான் (என்னா வில்லத்தனம்)
எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி
அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி
என்று சொல்லி ஆடவர்கள் ஆயிரம் பேரை வில்லனாக்கும் வரிகளும் உண்டு. கண்ணதாசன் இரண்டு பக்கமும் பேசுவார் நானே கேள்வி நானே பதில் போல
பூவிலே தேன் எதற்கு  – வண்டு வந்து சுவைப்பதற்கு
வண்டுக்கு சிறகெதற்கு – உண்ட பின்பு பறப்பதற்கு
என்று கண்ணிலே நீரோடு தந்தையின் மகளின் சோகத்தை பாட்டில் வைப்பார்
இந்த cliche தாண்டி பூவையும் வண்டையும் பற்றி வேறு என்ன சொல்லமுடியும்? வைரமுத்து சவாலை ஏற்கிறார்.  கன்னிமகள் கூந்தல் கலைந்திருக்கும்போது கைகளால் வகிடெடுத்துவிட்டு ஆண் பாடும் வரிகளாக
போதை கொண்டு பூ அழைக்க
தேடி வந்து தேன் எடுக்க  (இசை மேடையில் இன்ப வேளையில்)
என்று எழுதி இதை புரட்டி போடுகிறார். பூதான் அழைத்தது என்று தெளிவாக statement கொடுக்கிறார். இது உண்மையா நம் கலாசாரத்தில் இது  சரியா என்ற கேள்விகளை புறக்கணித்து நிற்கும் நிலை. யோசித்து பார்த்தால் இதுவும் சரிதானே? ஆணும் பெண்ணும் சமம் என்று கொள்ளும்  வரிகள் அல்லவா? கண்ணதாசன் சொன்னது போல்
இன்பம் என்பது இருவரின் உரிமை
யார் கேட்டாலும் இளமைக்கு பெருமை
என்னும் போது இந்த புதிய கோணம் இன்னும் இன்னும் அழகாக தெரிகிறதல்லவா?
மோகனகிருஷ்ணன்
032/365