கண்ணாடி
நம்முடைய நண்பர் கவிஞர் நிரஞ்சன் பாரதி @poetniranjan எழுதிய ஒரு திரைப்படப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். மங்காத்தா படத்தில் யுவன் ஷங்கர்ராஜா இசையில் வெளிவந்த பாடல் அது.
கண்ணாடி நீ கண் ஜாடை நான்
என் வீடு நீ உன் ஜன்னல் நான்
என் தேடல் நீ உன் தேவை நான்
என் பாடல் நீ உன் வார்த்தை நான்
என் பாதி நீ உன் பாதி நான்
என் ஜீவன் நீ உன் தேகம் நான்
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்
என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Rj33vbsHtKU
அழகான பாடல். புதிதாகத் திருமணமானவர்களுக்கான பாட்டு.
இந்தப் பாட்டைக் கேட்கும் போது “கண்ணாடி” என்ற சொல் எந்தன் சிந்தனையைத் தூண்டியது. எத்தனையெத்தனை கண்ணாடி பாடல்கள். கண்ணாடி தொடாத கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம்.
இந்தக் கண்ணாடி தமிழர்கள் பயன்பாட்டில் முன்பு இருந்ததா என்று முதல் கேள்வி.
இருந்தது என்று திருப்பாவை படிக்கையில் புரிந்தது. “உக்கமும் தட்டொளியும் தந்து” என்று ஆண்டாள் பாடியது நினைவுக்கு வந்தது. இந்த வரியில் தட்டொளி என்பது கண்ணாடியைக் குறிக்கும்.
தட்டொளி என்பதுதான் கண்ணாடிக்கு உரிய பழைய தமிழ்ப் பெயரா என்ற ஐயத்தோடு இலக்கியங்களைத் தேடிய போது அரிய விடைகள் கிடைத்தன.
கண்ணாடி என்ற சொல் ஐம்பெருங்காப்பியங்களிலேயே இருந்திருக்கிறது. அப்படியிருக்க பின்னாளில் ஆண்டாள் தட்டொளி என்ற சொல்லை ஏன் பயன்படுத்தினாள் என்று தெரியவில்லை. சங்க இலக்கியங்களில் கண்ணாடி பற்றியும் தேடிப்பார்க்க வேண்டும்.
சரி.. ஐம்பெருங்காப்பியங்களுக்கு வருவோம். அதிலும் முதற் காப்பியமான சிலப்பதிகாரத்திற்கு வருவோம்.
முகம் பார்க்கும் கண்ணாடியை ஆடி என்றே இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.
கோப்பெருந்தேவிக்கு அன்றைய நாள் நல்ல நாளாகவே இல்லை. கண்ட கண்ட கனவுகள். ஒன்றாவது நன்றாக இல்லை. ஏதோ ஒரு தவறு நடக்கப் போவது போல ஒரு குறுகுறுப்பு. அந்த உணர்வுகளைக் கணவனோடு பகிர்ந்து கொள்ள வருகிறாள். அப்போது அவளுடைய பணியாளர்கள் அவளுக்குத் தேவையான பொருட்களைக் கையோடு கொண்டு வருகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு சினிமா நடிகையின் மேக்கப் உதவியாளர்கள் போல.
ஆடியேந்தினர் கலனேந்தினர்
அவிர்ந்துவிளங்கும் அணியிழையினர்
கோடியேந்தினர் பட்டேந்தினர்
கொழுந்திரையலின் செப்பேந்தினர்
வண்ணமேந்தினர் சுண்ணமேந்தினர்
மான்மதத்தின் சாந்தேந்தினர்
கண்ணியேந்தினர் பிணையலேந்தினர்
கவரியேந்தினர் தூபமேந்தினர்ஆடி ஏந்தினர் – கண்ணாடி ஏந்தி வந்தார்கள்
கலம் ஏந்தினர் – அணிகலன்களை ஏந்தி வந்தார்கள்
அவிர்ந்து விளங்கும் அணியிழையினர் – நல்ல அணிமணி அணிந்த ஊழியப் பெண்கள்
கோடி ஏந்தினர் – புதுத்துணிகளை ஏந்தி வந்தார்கள்
பட்டு ஏந்தினர் – பட்டுத் துணிகளை ஏந்தி வந்தார்கள்
கொழும் திரையலின் செப்பு ஏந்தினர் – நல்ல கொழும் வெற்றிலைப் பெட்டியை ஏந்தினர்
வண்ணம் ஏந்தினர் – வண்ண வண்ணப் பொடிகளையும்
சுண்ணம் ஏந்தினர் – வெண்ணிறச் சுண்ணத்தைப் பூசிக் கொள்வதற்கும் ஏந்தி வந்தார்கள்
அடேங்கப்பா என்னவொரு பட்டியல். அரசியோடு எப்பவும் ஒரு கூட்டம் இருந்து கொண்டேயிருந்திருக்கும் போல.
ஏந்திய பொருட்களில் முதற் பொருளாகச் சொல்லப் படுவதே ஆடிதான். அடிக்கடி முகத்தைப் பார்த்து ஒப்பனை செய்கிறவள் போல கோப்பெருந்தேவி.
சரி. கண்ணாடி(Mirror) என்பது முகம் பார்ப்பதற்கு மட்டுமல்ல. Glass என்ற பொருளிலும் வருமே. ஆம். வருகிறது. சீவக சிந்தாமணி காட்டுகிறது அதையும். அந்தப் பாடலில் திருத்தக்க தேவர் சொற்சிலம்பமே ஆடியிருக்கிறார் என்றால் மிகையாகாது. எத்தனை கண்ணாடி வருகிறதென்று பாருங்கள்.
கண்ணாடி யன்ன கடிமார்பன் சிவந்து நீண்ட
கண்ணாடி வென்று களங்கண்டு நியம முற்றிக்
கண்ணாடி வண்டு பருகுங்கமழ் மாலை மூதூர்க்
கண்ணாடி யானை யவர்கைதொழச் சென்று புக்கான்
ரொம்பவும் விளக்காமல் நேரடியாகப் பொருள் கொடுக்கிறேன். படித்து ரசியுங்கள்.
கண்ணாடி அன்ன கடி மார்பன் சிவந்து நீண்ட
கண் ஆடி வென்று களம் கண்டு நியமம் முற்றிக்
கள் நாடி வண்டு பருகும் கமழ் மாலை மூதூர்க்கண்
(கண்) ஆடு யானையவர் கை தொழச் சென்று புக்கான்
கண்ணாடி போன்ற மார்புடைய சீவகன் தன்னுடைய சிவந்து நீண்ட கண்களால் ஆடி (பார்வையிட்டு) போரிட்டு வென்ற போர்க்களத்தைக் கண்ட பின்னர், போர் முடிந்த பின் செய்ய வேண்டிய நியமங்களை முடித்து விட்டு, கள் நாடி வந்து வண்டுகள் பருகும் மணமிகுந்த மாலைகள் நிறைந்த பழம் பெருமை மிக்க ஊருக்குள், வெற்றியானை கொண்டோரெல்லாம் கை தொழும் வகையில் புகுந்தான்.
அதாவது வெற்றி பெற்ற சீவகன் தான் வென்ற ஊருக்குள் நுழைந்ததை நான்கு கண்ணாடிகளை வைத்து அழகாகச் சொல்லியிருக்கிறார் திருத்தக்க தேவர்.
இளங்கோவும் திருத்தக்க தேவரும் பின்னாளில் ஆண்டாளும் தொடர்ந்த பாரம்பரியத்தை பாரதியின் வாரிசான கவிஞர் நிரஞ்சன் பாரதியும் தொடர்வதுதான் சிறப்பு.
அன்புடன்,
ஜிரா
031/365
Rie 12:36 pm on January 1, 2013 Permalink |
CSS நீ, HTML நான் என்று ஃபேஸ்புக்கில் ஒரு வாசகம் பார்த்தேன்.
Niranjan 1:47 pm on January 1, 2013 Permalink |
என் பாடலைப் பற்றி இந்த வலைப்பூவில் எழுதிய ஜீரா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. கண்ணாடி பற்றி எத்தனை தகவல்கள். ஆஹா !! படிக்கப் படிக்க சுவை கூடிக் கொண்டே இருந்தது.
விருந்தினர் பதிவு : இசைவழி இலக்கணம் « நாலு வரி நோட்டு 11:49 am on February 7, 2013 Permalink |
[…] திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணாடி நீ, கண் ஜாடை நான்’, மற்றும் ‘பாகன்’ திரைப்படத்தில் […]