பாடல் வரிகள் Remix

பழைய பாடல்களின் இசை ரீமிக்ஸ் கேட்டிருக்கிறோம் (அது பிடிக்குமா இல்லையா என்பது வேறு விஷயம்). பாடல் வரிகளின் ரீமிக்ஸ் பார்த்திருக்கிறீர்களா?
தூக்கு தூக்கி படத்தில் ஒரு பாடல். உடுமலை நாராயண கவி இயற்றியது. “கண் வழி புகுந்து கருத்தினில் வளர்ந்த மின்னொளியே ஏன் மௌனம்”  இதை வைரமுத்து எப்படி ரீமிக்ஸ் செய்கிறார்? “விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே” என்று வார்த்தைகளை சீராட்டி அலங்கரித்து ஒரு இலக்கிய வேஷம் கட்டி  … அழகாக இருக்கிறதே!
அடுத்து பாசம் படத்தில் வரும் பாடல். கவியரசு கண்ணதாசன் கற்பனையில் “மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்,மயங்கிய ஒளியினைப் போலே மன மயக்கத்தை தந்தவள் நீயே”. இதையும் வைரமுத்து அவரது வார்த்தைகளில் ரசவாதம் செய்கிறார். எப்படி? “இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதில் வந்துவிடு”
இரண்டு வேறு பாடல்களில் இருந்து இரண்டு வரிகளை இரவல் வாங்கி
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதில் வந்துவிடு
கருமாறாமல் உருமாற்றி  மெட்டுக்குள் உட்காரவைக்கிறார். https://www.youtube.com/watch?v=pY8WyzuCXr0
ஆசை முகம் என்ற படத்தில் ஒரு பாடல். காதலனும் காதலியும் உரையாடுவது போல அமைந்த வரிகள்

நீயா இல்லை நானா நீயா இல்லை நானா

நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது

நீயா இல்லை நானா

https://www.youtube.com/watch?v=XVOpBghkkiQ

இருவரும் அமர்ந்து காதல் எப்படி மலர்ந்தது என்று யோசித்து பல சம்பவங்களை நினைத்து இதை செய்தது நீயா இல்லை நானா என்று பேசுவது போல ஒரு அமைப்பு. கொஞ்சம் உண்மை கொஞ்சம் பொய் கொஞ்சம் கிண்டல் கொஞ்சம் சீண்டல் என்று வாலி அட்டகாசம் செய்யும் பாடல். எல்லா வரிகளும் நீயா இல்லை நானா என்றே முடியும்.

ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது,

ஊர்வலமாக பார்வையில் வந்தது

ஒரு மேடையில்லாமல் நாடகம் நடித்தது

இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது

ஒரு நாள் வந்தது உள்ளத்தைக் கேட்டது

இன்று மறு முறை வரும் வரை மயக்கத்தில் இருப்பது

பூவிதழோரம் புன்னகை வைத்தது

இன்று உள்ளத் திரையில் ஓவியம் வரைந்தது

இந்த பாடல் வைரமுத்துவை inspire செய்திருக்கவேண்டும். பஞ்சதந்திரம் படத்தில் சரியான காட்சியமைப்பு கிடைத்தவுடன் வாலியின் இந்த வரிகளை அடித்தளமாக வைத்துக்கொண்டு எழுதிகிறார். இதுவும் காதலன் காதலி பேசிக்கொள்ளும் காட்சிதான். காதல் இளவரசனும்  கனவுக்கன்னியும் பாடும்  பாடல்  கடற்கரை நிலவொளி எல்லாம் இல்லை. ஜஸ்ட் லைக் தட் நடந்துகொண்டு பாடும் பாடல். கொஞ்சம் Blame game போல கட்டமைப்பு. கூர்ந்து பார்த்தால் காதல் பொங்கும்  வரிகள்

என்னோடு காதல் என்று பேச வைத்தது  நீயா இல்லை நானா

ஊரெங்கும் வதந்தி காற்று வீச வைத்து நீயா இல்லை நானா

https://www.youtube.com/watch?v=tAjGFrWW3V4

சட்டை பொத்தான், கூந்தல், கண்ணில் தூசி ஊதும் சாக்கு, லிப்டின் நீள அகலம் என்று ஒரு  contemporary காதல் உரையாடலை முன் வைக்கிறார். நக்கல் இருந்தாலும் ‘உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது, நீ வேறு நான் வேறு யார் சொன்னது என்று சமரசம் செய்துகொள்ளும் யதார்த்தம்

கவாஸ்கர் போலவே  சச்சின்  straight டிரைவ்  அடித்தால் கொண்டாடுகிறோம் அதை  பாராட்டுவது  போல், இதையும் பாராட்டலாம்.

மோகன கிருஷ்ணன்

029/365