முதல்வனின் முத்தம்

முதல்வனே என்னைக் கண் பாராய்
முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா
காதல் பஞ்சம் வந்து நொந்தேனே
முத்த நிவாரணம் எனக்கில்லையா
படம் – முதல்வன்
பாடல் – வைரமுத்து
பாடியவர் – எஸ்.ஜானகி
இசை – ஏ.ஆர்.ரகுமான்
ஆண்டு – 1999

இந்தப் பாடலின் காட்சியமைப்பே சிறப்பானது. இயக்குனர் ஷங்கர் கம்ப்யூட்டர் கிராபிக்சில் புகுந்து விளையாண்டிருப்பார்.

காதலனாக இருப்பவன் நாட்டுக்குக் காவலனாகவும் இருந்தாலே தொல்லைதான். வேளைக்கொரு ஊடலும் நாளுக்கொரு கூடலும் கிடைக்கவே கிடைக்காது. பசிக்குச் சாப்பிடாமல் கிடைத்த போது மட்டும் சாப்பிடும் காதல் பிச்சைக்காரி நிலை.

அப்படியாக காதல் பஞ்சத்தில் அடிபட்டுக் கிடப்பவளுக்கு ஒரு முத்த நிவாரணம் கிடைக்காதா என்றொரு ஏக்கம். அந்த ஏக்கத்தின் தாக்கத்தில் பாடுவதுதான் இந்தப் பாடல்.

பின்னே… முதல்வன் முத்தம் எளிதாகக் கிடைத்து விடுமா?

முதல்வனிடம் முத்தம் வேண்டுமென்று அந்தப் படத்தின் நாயகி மட்டும் கேட்கவில்லை. குமரகுருபரரும் கேட்கிறார்.

ஆனால் அவர் கேட்கும் முதல்வன் நாட்டுக்கு முதல்வனல்ல. எத்தனை அண்டங்களுண்டோ அத்தனை அண்டங்களுக்கும் முதல்வன்.

மதியு நதியு மரவும் விரவு மவுலி யொருவன் முக்கணும்
வனச முகமு மகமு மலர மழலை யொழுகு சொற்சொலும்
புதல்வ விமய முதல்வி யருள்செய் புனித வமரர் கொற்றவன்
புதல்வி தழுவு கொழுந குறவர் சிறுமி குடிகொள் பொற்புய
கதிரு மதியு மொளிர வொளிரும் ஒளிய வளிய கற்பகக்
கனியி னினிய வுருவ பருவ மழையி னுதவு கைத்தல
முதிரு மறிவி லறிஞ ருணரு முதல்வ தருக முத்தமே
முனிவர் பரவு பருதி புரியின் முருக தருக முத்தமே

என்னடா… குமரகுருபரசுவாமிகள் முருகனிடம் முத்தம் கேட்கிறார் என்று பார்க்கின்றீர்களா? ஆம். கேட்கிறார். முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் நூலில் அல்லவா கேட்கிறார்!

முருகனைத் தவிர பிற பந்தங்களை நீங்கிய ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பிரபந்தங்களில் ஒன்றுதான் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ். கந்தர் கலிவெண்பாவும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழும் கூட அவர் எழுதிய பிரபந்தங்களில் அடங்கம்.

பிரபந்தம் என்று சிறுகாப்பிய வகையில் அடங்கும். தமிழறிவும் இறையருளும் இருந்தால் நாமும் பிரபந்தம் எழுதலாம். ஆனால் அவை ஆழ்வார் அருளியது போலவோ குமரகுருபரசுவாமி அருளியது போலவோ இருக்குமா!

உலகத்தைப் படைத்து – அதில்
உயிர்களைப் படைத்து – அவைகட்கு
உணர்வைப் படைத்து – அது தணிக்க
உணவைப் படைத்து – அவற்றிலெல்லாம்
உள்ளிருக்கும் உயர்வான பொருளைக்
குழந்தையென்றும்
மழலையென்றும்
சின்னஞ் சிறுவனென்றும்
எண்ணி எண்ணிக்
கொஞ்சிக் கொஞ்சி உருகும் போது
திருச்செந்தூர்க் குழந்தையாம்
முத்துக்குமரன் முத்தமும் முக்தியன்றோ!

அந்த வீடுபேற்றுக்காகத்தானே குமரகுருபரன் தமிழ்க்கடவுளைக் குழந்தையாக்கிப் பிள்ளைத்தமிழ் பாடியிருக்கிறார். பிறப்பிலே ஊமையாய்ப் பேசாத அவரைத் திருச்செந்தூரிலே பேச வைத்ததும் அந்த முருகக்குழந்தைதானே!

காதல் பஞ்சத்துக் கதாநாயகி முத்த நிவாரணம் கேட்டால், அருள் நிறைந்த குமரகுருபரரோ முத்த முக்தி கேட்கிறார். அது சரி. கேட்பதையும் கேட்கும் இடத்தில்தானே கேட்க வேண்டும்.

அன்புடன்,
ஜிரா

028/365