’இச்’ உண்டா? இல்லையா?

  • படம்: வருஷம் 16
  • பாடல்: பழமுதிர்ச் சோலை
  • எழுதியவர்: வாலி
  • இசை: இளையராஜா
  • பாடியவர்: கே. ஜே. யேசுதாஸ்
  • Link: http://www.youtube.com/watch?v=nql-xtxyvHI

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்,

படைத்தவன் படைத்தான், அதற்காகத்தான்!

நான்தான் அதன் ராகம், தாளமும், கேட்பேன், தினம் காலை மாலையும்

கோலம், அதன் ஜாலம், இங்கு ஓராயிரம்!

இந்தப் பாட்டைக் கவனித்துக் கேளுங்கள், ‘பழமுதிர்ச் சோலை’ என்றுதான் யேசுதாஸ் பாடுகிறார். ஆனால் உண்மையில் அங்கே ‘ச்’ வருமா? வராதா?

பள்ளி இலக்கணப் பாடத்தில் ’வினைத்தொகை’ என்று படித்திருக்கிறோம். அதாவது, கடந்த / நிகழ் / எதிர்காலம் மூன்றுக்கும் பொருந்தக்கூடிய வகையில் அமைந்த சொற்றொடர்கள்.

இதற்கு மிகப் பிரபலமான உதாரணம், ‘ஊறுகாய்’,

இங்கே ஊறுதல் என்பது Verb, காய் என்பது Noun, அந்தக் காய் ஊறியது, ஊறுகிறது, ஊறிக்கொண்டிருக்கிறது, இனிமேலும் ஊறும், இப்படி எல்லாவற்றுக்கும் அந்த வாக்கியம் பொருந்தும்.

இன்னோர் உதாரணம், ‘சிதறு தேங்காய்’. சிதறிய / சிதறுகின்ற / சிதறப்போகும் தேங்காய்.

வினைத்தொகை தொடர்பான ஒரு முக்கியமான இலக்கண விதி, Verb, Noun இடையே ஒற்று மிகாது. அதாவது ‘ஊறுக்காய்’, ‘சிதறுத் தேங்காய்’ என்று எழுதக்கூடாது, ‘ஊறுகாய்’தான், ‘சிதறு தேங்காய்’தான்.

ஆச்சா, இப்போது இந்தப் பாடலின் முதல் மூன்று வார்த்தைகளைக் கவனிப்போம் : பழம் + முதிர் + சோலை = பழமுதிர்ச் சோலை? அல்லது பழமுதிர் சோலை?

இங்கே முதிர்தல் என்பது Verb, பழம், சோலை என்பவை Noun, ஆக, பழம் விளைந்து முதிர்ந்த சோலை, விளைந்து முதிர்ந்துகொண்டிருக்கும் சோலை, இனியும் விளைந்து முதிரப்போகும் சோலை, அந்த அர்த்தத்தில் எடுத்துக்கொண்டால் இது ஒரு வினைத்தொகை, ஒற்று மிகாது, ஆக ‘பழமுதிர் சோலை’தான் சரி. ‘ச்’ வராது.

இதனை வேறுவிதமாகவும் பிரிக்கலாம்: பழம் + உதிர் + சோலை = பழமுதிர் சோலை. பழங்கள் எங்கும் உதிர்ந்து கிடந்த, உதிர்ந்து கிடக்கிற, இனிமேலும் உதிர்ந்துகொண்டே இருக்கப்போகும் ஒரு சோலை.

’முதிர்தல்’ என்ற Verbக்குப் பதில் ‘உதிர்தல்’ என்ற Verb வந்துள்ளது, மற்றபடி இதுவும் வினைத்தொகைதான். ’ச்’ வராது. ‘பழமுதிர் சோலை’தான் சரி.

அதெல்லாம் முடியாது, வாலி ‘ச்’ போட்டுதான் எழுதியிருக்கிறார், யேசுதாஸும் ‘ச்’ போட்டுதான் பாடியிருக்கிறார், நான் அவர்களைதான் நம்புவேன் என்றால், அதற்கும் ஒரு விளக்கம் உண்டு.

ஒற்று (அதாவது ‘ச்’) மிகுந்திருப்பதால், இது வினைத்தொகை அல்ல என்று நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். ‘பழமுதிர்ச் சோலை’, அதாவது முதிர்ந்த பழங்கள் நிறைந்த சோலை என்று (ஒரே ஒரு tenseல்) அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம்.

சரி விடுங்கள், சோலை என்றால் அவ்வப்போது ‘இச்’ சத்தம் கேட்பது சகஜம்தானே!

***

என். சொக்கன் …

28 12 2012

027/365