இறைவன் இருக்கின்றானா?

இறைவன் இருக்கின்றானா என்பது மிகவும் பழைய கேள்வி.  ஆத்திக நாத்திக நண்பர்கள் காலம் காலமாக செய்யும் முடிவில்லா விவாதம். சமீபத்தில் கமலஹாசன் தசாவதாரம் படத்தில் சொன்ன ‘நான் எங்கே இல்லன்னு சொன்னேன், இருந்தா  நல்ல இருக்கும்னுதானே சொன்னேன்’ என்ற வசனம் சுவாரஸ்யமானது. ‘Thank God, I am an  Atheist’ போன்ற இந்த  unresolved conflict விவாதத்திற்கு அழகு சேர்க்கிறது.

தமிழகத்தில் ‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்’ என்ற வரிகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒரு கடவுள் மறுப்பு அரசியல் கட்சி வளர்வதற்கு அடித்தளமாய் அமைந்த பிரபல வாசகம். தமிழ் திரைப்பாடல்களில் இந்த கேள்விக்கு விடை கிடைக்குமா? இறைவனும் கடவுளும் ஆண்டவனும் தெய்வமும் சாமியும் எத்தனையோ பாடல்களின் கருப்பொருளாய் வந்திருக்கும்போது நிச்சயம் விடை கிடைக்கும்.

முதலில் கண்ணதாசன்

இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான் – அவன்

 இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான் ? எங்கே வாழ்கிறான்?
நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை (அவன் பித்தனா)

என்று விவாதத்தை ஆரம்பிக்கிறார். மற்றொரு பாடலில் முதல் கட்ட விடை கண்டு கொள்கிறார்

கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா

  காற்றில் தவழுகின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா (ஆனந்த ஜோதி)

இது இறைவன் கண்ணுக்கு தெரிய வேண்டியதில்லை என்று உணர்ந்தது போல் வரிகள். இப்போது இறைவன் இருக்கின்றானா என்பது கேள்வியில்லை. எங்கே என்ற கேள்வி மட்டும் இன்னும் இருக்கிறது. தொடர்ந்த தேடலில் எங்கே என்றும் அறிந்து சொல்கிறார்.

தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே

   தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே
   எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு

இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு (சரஸ்வதி சபதம்)

வாலியும் இந்த தேடலில் சளைக்கவில்லை. இதயத்தை திற இறைவன் வரட்டும் என்று சொல்கிறார்

மனம் என்னும் கோவில் திறக்கின்ற நேரம்

அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும் (சந்திரோதயம்)

தினசரி வாழ்க்கையில் நாம் வாழும் முறையில் இறைவனை காண்பதே இனிது என்பது வாலியின் வாதம். கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் கடவுள் இருக்கிறார். இதோ எந்தன் தெய்வம் முன்னாலே என்று சட்டென்று அடையாளம் கண்ட அவர் கோணத்தில் பாசமுள்ள பார்வையும் கருணையுள்ள  நெஞ்சும் இறைவன் வாழும் இடம். இயற்கையின்  பூவிரியும் சோலை, பூங்குயிலின் தேன்குரல், குளிர் மேகம், கொடி விளையும் கனிகள் எல்லாமே   தெய்வம் வாழும் வீடுதான்.

முடிவாக

பல நூல் படித்து நீ அறியும் கல்வி

பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்

பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்

இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம் (பாபு)

எவ்வளவு தெளிவான பார்வை. நயமான வரிகள். கல்வி கற்று நல்ல நிலைக்கு வந்து, பொது நலத்திற்கு செல்வம் வழங்கி, அடுத்தவர் உயர்வில் இன்பம் காண்பவர் வாழ்க்கைதான் சொர்க்கம் போன்றது. அந்த நிலைதான் தெய்வம் என்றால் யார் மறுப்பு சொல்வார்?

மோகன கிருஷ்ணன்

026/365