இஞ்சி

“என்னடா படிக்கிற? அமைதியா உக்காந்திருக்க. வாய் விட்டுப் படிச்சாத்தான் மண்டைல ஏறும்”

நான் சொன்னதும் வாய் விட்டுப் படிக்கத் தொடங்கினான் மகன்.

”செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்ச் செல்வந் தேறி
வம்பிட்ட தெரிய லெம்மு னுயிர்கொண்ட பகையை வாழ்த்தி”

”என்னடா இது?”

“மனப்பாடச் செய்யுள். கம்பராமாயணம்.”

”சரி. படி. படி”

”அப்பா ஒரு சந்தேகம். இஞ்சித் திருநகர்னு போட்டிருக்கே. இலங்கைல இஞ்சி நெறைய வெளயுமா?”

”இலங்கையில் இஞ்சி வெளையும். ஆனா அந்த இஞ்சி வேற. இந்தப் பாட்டுல வர்ர இஞ்சி வேற. இந்த இடத்துல இஞ்சின்னா மதில். செம்பிட்டுச் செய்த இஞ்சின்னா செம்பு கலந்து கட்டப்பட்ட மதிற்சுவர்னு பொருள். படி. படி.”

மதியம் சாப்பிடும் போது தயிர் ஊற்றிக் கொள்ளும் போது தட்டில் மாங்காய் இஞ்சி ஊறுகாய் விழுந்தது. மிக எளிதான ஊறுகாய். உடனடி ஊறுகாயும் கூட. கழுவிப் பொடிப்பொடியாய் நறுக்கிக் கொள்ள வேண்டும். மிளகாய்ப் பொடி கலந்து லேசாய்த் தாளித்து எலுமிச்சம்பழம் பிழிந்தால் தீடீர் ஊறுகாய் தயாராகிவிடும்.

சாப்பிட்டுக் கையைக் கழுவிய பின்னரும் இஞ்சியை மனதிலிருந்து கழுவ முடியவில்லை. தமிழ் இலக்கியத்தில் இஞ்சி எத்தனை இடங்களில் வருகிறது என்று யோசித்தேன். பொதுவாகவே வளமையைக் குறிக்கும் இடங்களில் எல்லாம் இஞ்சி விளையும் என்று சொல்வார்கள்.

சிலப்பதிகாரத்திலும் இஞ்சி இருக்கிறது. “மஞ்சளு மிஞ்சியு மயங்கரில் வலயத்து” என்கிறார் இளங்கோவடிகள். மிக அழகான வரி இது. பிரித்துச் சொல்கிறேன். எளிதாகப் புரியும்.

மஞ்சளு மிஞ்சியு மயங்கரில் வலயத்து = மஞ்சளும் இஞ்சியும் மயங்கு அலரில் வலயத்து
மயங்கு = மயக்கம் (பின்னிக்கொண்டு)
அலர் = பெருமளவில் விரிந்து (நிறைந்து)
வலயம் = வரப்பு

மயக்கம் என்பது கலத்தலைக் குறிக்கும். பிரிக்க முடிந்த சேர்க்கை கலப்பு எனப்படும். பிரிக்க முடியாத சேர்ப்பு மயக்கம் எனப்படும். அரிசியும் கல்லும் கலக்கும். இன்பத்திலோ துன்பத்திலோ மனது மயங்கும். அப்படி நிலத்துக்கடியில் இஞ்சியும் மஞ்சளும் ஒன்றோடொன்று பிண்ணைப் பிணைந்து நிறைந்து வளம் கொளிக்கும் வரப்பு என்று பொருள்.

இதில் ஒரு தகவல் உள்ளது. இஞ்சியும் மஞ்சளும் நிலத்துக்கடியில் விளைகின்றவை என்றாலும் இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. மஞ்சள் கிழங்கு வகை. ஆனால் இஞ்சியோ வேர். திடீர் ஊறுகாய் மாங்காய் இஞ்சியும் வேர்தான்.

இஞ்சியானது நிலத்திலிருக்கும் நீரை உறிஞ்சி உள்ளிழுத்து தன்னுடய செடிக்குக் கொடுக்கிறது. அப்படிச் செய்வதால்தான் அதற்கு இஞ்சி என்றே பெயர். இஞ்சுதல் என்றால் உறிஞ்சுதல் அல்லது உள்ளிழுத்தல். இப்போது புரிந்திருக்குமோ இஞ்சிக்கு அந்தப் பெயர் வந்த காரணம். இந்த இஞ்சி சுள்ளெனக் காய்ந்தால் சுள்+கு = சுட்கு. அதாவது இன்றைய சுக்கு.

இந்த இஞ்சிவேர்தான் லத்தீனில் Gingiber ஆகி கிரேக்கத்தில் Gingibers ஆகி இப்போதைய Ginger ஆகியிருக்கிறது.

நீரை உள்ளே உறிஞ்சி இழுக்கும் வேருக்கு இஞ்சி என்று பேர் வைத்தவன் அறிவை என் மனம் அசை போட்டது.

”அப்பா படிச்சிட்டேம்ப்பா… டீவி போடப் போறேன்” என்று கத்திக் கொண்டே தொலைக்காட்சியிடம் ஓடினான் மகன்.

இஞ்சி இடுப்பழகி மஞ்சச் செவப்பழகி (படம்-தேவர்மகன், பாடல்-வாலி, இசை-இளையராஜா) என்று கமலஹாசன் பாடிக் கொண்டிருந்தார்.

அட முருகா!

அன்புடன்,
ஜிரா

025/365