சேலை வாசம்

  • படம்: கொடி பறக்குது
  • பாடல்: சேலை கட்டும் பெண்ணுக்கொரு
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஹம்சலேகா
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், கே. எஸ். சித்ரா
  • Link: http://www.youtube.com/watch?v=a6sDS0zZV8o

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு,

கண்டதுண்டா? கண்டவர்கள் சொன்னதுண்டா?

கிராமத்து மக்கள் ’சேலை’யைச் ‘சீலை’ என்று அழைப்பார்கள். அவர்கள் சரியான சொல் தெரியாமல் கொச்சையாகப் பேசுவதாக நாம் நினைத்துக்கொள்வோம்.

ஆனால் நாம் Window Curtainsஐத் ‘திரைச்சீலை’ என்று சொல்கிறோம், ‘திரைச்சேலை’ என்று சொல்வதில்லை. அப்படியானால் எது சரி? எது கொச்சை?

இவை அனைத்துக்கும் வேர்ச்சொல்லாக நம்பப்படுவது, ‘சீரை’.

உதாரணமாக, தேவாரத்தில் சிவபெருமானைக் குறிப்பிடும் திருநாவுக்கரசர் இப்படி எழுதுகிறார்: ‘உடையும் சீரை, உறைவது காட்டிடை.’

அதாவது, சிவன் அணிவது சீரை என்ற ஆடை, அதன் அர்த்தம், மரப்பட்டையை எடுத்துப் பதப்படுத்தி உருவாக்கப்பட்ட துணி. ‘மரவுரி’ என்று சொல்வார்கள்.

ராமாயணத்தில் ராமனைக் காட்டுக்கு அனுப்ப வரம் கேட்டதோடு கைகேயி நிற்கவில்லை, அவன் காடு செல்லக் கிளம்புகிறான் என்று தெரிந்ததும், அவனுக்கு இந்தச் சீரையைதான் கொடுத்தனுப்புகிறாள். இதைப் பரதன் பின்னர் ஆதங்கத்துடன் சுட்டிக்காட்டுகிறான்.

சீரையை உடுத்தியது ராமன்மட்டுமல்ல, லட்சுமணனும், சீதையும்தான். இதைக் குறிப்பிடும் கம்பர் வாசகம், ‘சீரை சுற்றித் திருமகள் பின் செல…’

ஆக, சீரை என்பது மரவுரி, அதை ஆண்களும் பெண்களும் உடலைச் சுற்றி அணிந்திருக்கிறார்கள். பின்னர் இதுதான் ‘சீலை’யாகத் திரிந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. நாம் இப்போது அதைச் ‘சேலை’ என்கிறோம். கன்னடர்கள் இன்னும் ‘சீரெ’ என்றுதான் சொல்கிறார்கள்.

’சேலை கட்டிய பெண்ணை நம்பாதே’ என்று ஒரு பழமொழி உண்டு, அதைக் கொஞ்சம் சமத்காரமாக, ‘சேல கட்டிய பெண்ணை நம்பாதே’ என்று மாற்றி, இப்படி ஒரு விளக்கம் சொல்வார்கள்:

சேல கட்டிய பெண் : சேல் + அகட்டிய பெண் : சேல் (ஒருவகை மீன்) போன்ற வழிகளை அளவுக்கதிகமாக விரித்துப் பேசும் பெண் பொய் சொல்கிறாள், நம்பாதே!

அது சரி ,’புடவை’க்கு விளக்கம் என்ன?

முதலில், ‘புடவை’ என்று எழுதுவது தவறு, அது ‘புடைவை’ என்று இருக்கவேண்டும்.

‘புடை’ என்றால் பக்கம், ‘மந்திரிகள் புடை சூழ முதலமைச்சர் வருகை தந்தார்’ என்று செய்திகளில் வருகிறதே, அதுதான்.

ஆக, ஒரு பெண்ணின் உடலை எல்லாப் பக்கங்களிலும் சுற்றி அணியப்படுகிற ஆடை என்பதால், அதற்குப் ‘புடைவை’ என்று பெயர் வந்தது. பின்னர் அது எப்படியோ ‘புடவை’ என்று திரிந்துவிட்டது.

அதேபோல், ‘துணி’ப்பதால் (துண்டித்து / கத்தரித்து) விற்பனை செய்வதால், அது ‘துணி’. இதே காரணத்தால் ஆடைக்கு ‘அறுவை’ என்றும் பெயர் உண்டு (அறுத்துப் பயன்படுத்துவதால்).

அறுவை போதும் என்கிறீர்களா? சரி, இதோடு நிறுத்திக்கொள்கிறேன், வேட்டி, சட்டை போன்றவற்றை இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்!

***

என். சொக்கன் …

25 12 2012

024/365