சரக்கு வெச்சிருக்கேன்

”சரக்கு இரயில் தடம் புரண்டு விட்டது” என்ற செய்தியைப் படிக்கும் போது “சரக்கு இரயிலுக்கு டீசலுக்குப் பதிலா சரக்கு ஊத்திட்டாங்களோ” என்று எனக்குத் தோன்றியதில் வியப்பில்லை.

தொலைக்காட்சிகளில் “நாட்டுச் சரக்கு நச்சுன்னுதான் இருக்கு” என்று ஒரு பாடகர் பாடிக் கொண்டிருந்தார். படம் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்று போட்டிருந்தது. பாடலை எழுதியவர் பெயர் பா.விஜய்.

காலையில் எழுந்து இந்தச் சரக்கைத்தான் கேட்க வேண்டுமா என்று சேனலை மாற்றினேன். “சிங்காரிச் சரக்கு நல்ல சரக்கு” என்று கமல்ஹாசன் ஒய்.விஜயாவோடு சேர்ந்து ஆடிக் கொண்டிருந்தார். வாலியின் வரிகளுக்கு இளையராஜாவின் இசை.

இந்தப் பாடல்களைக் கேட்டாலே சரக்கு ஏற்றியது போலத்தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். சரக்கு என்றாலே குடி என்று தமிழன் இன்று புரிந்து கொண்டிருக்கிறான்.

காலையில் வீட்டுக்கு டிபன் வாங்க பக்கத்து ஓட்டலுக்குச் சென்றேன். சிறிய ஓட்டலாக இருந்தாலும் இட்லி தோசையெல்லாம் நன்றாக இருக்கும். ஓட்டல் ஓனரும் நல்ல பழக்கம்.

”வாங்க சார். இன்னைக்கு இட்லி தோசை மட்டுந்தான் போட்டிருக்கு. சரக்கு மாஸ்டருக்கு ஒடம்புக்கு முடியலை. அதான். என்ன கட்டச் சொல்லட்டும்?” என்று கேட்டார்.

ஆகா சரக்குக்கு இடத்துக்கு ஒரு பொருள் இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டேன். குடிப்பதும் சரக்கு. உண்பதும் சரக்கு.

இட்லி பார்சல் வாங்கிக் கொண்டு வரும் போது வழியில் பலசரக்குக் கடையில் பால் வாங்கச் சென்றேன்.

“சரக்கெல்லாம் பத்திரமா எறக்கி வைங்கப்பா” என்று அண்ணாச்சி சரக்கு கொண்டு வந்திருந்த பையனிடம் கத்திக் கொண்டிருந்தார்.

குடிக்கும் சரக்கு சாப்பாட்டுச் சரக்காகி  பிறகு அண்ணாச்சி கடை மளிகைப் பொருளாகி விட்டது. சரக்கு எத்தனை சரக்குகளோ என்று எண்ணிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா(து)
உனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூ ருடய கோவே

வழியில் ஓதுவார் வீட்டிலிருந்து தேவாரம் தெளிவாகக் கேட்டது. அப்பர் பாடிய தேவாரம். திருவொற்றியூரில் பாடியது. அந்தக் காலத்து சென்னை. ஆக அப்பர் காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கும் வந்திருக்கிறார்.

அப்பர் கூட சரக்கு பற்றி பாடலில் ஏதோ சொல்லியிருக்கிறார் என்று மனம் நினைவூட்டியது. ஆமாம்.

மனம் என்னும் தோணியில்
மதி என்னும் கோலை ஊன்றி
சினம் என்னும் சரக்கை ஏற்றி
வாழ்க்கை என்னும் கடலில் பயணம் சென்றால்
மதம் என்னும் பாறை தாக்கும்!

நெஞ்சில் எழும் சினத்தைக் கப்பலில் ஏற்றும் பண்டங்களோடு ஒப்பிட்டு அப்பர் பாடியிருந்தாலும், கப்பலை ஓட்டும் போது சரக்கை ஏற்றினால் பாறை தாக்க வாய்ப்பிருக்கிறது என்று நெஞ்சம் குதர்க்கமாக நினைத்தது.

இப்படி நினைத்ததற்கு அப்பர் என்னை மன்னித்து விடுவார். ஈசனாரும் என்னை அருள் செய்து மன்னித்தால் நன்று. அப்பரும் ஈசனையே சரக்கு என்று சரக்கறை என்ற தலைப்பில் பல பாடல்கள் பாடியவராயிற்றே.

விடையும் விடைப் பெரும் பாகா! என் விண்ணப்பம்: வெம்மழுவாள்-
படையும், படை ஆய் நிரைத்த பல் பூதமும், பாய்புலித்தோல்-
உடையும், முடைத்தலைமாலையும், மாலைப் பிறை ஒதுங்கும்
சடையும், இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!

குடிப்பவர்களுக்கு குடியே மனமெங்கும் நிறைந்திருப்பது போன்று அப்பரடிகளுக்கு நெஞ்செல்லாம் ஈசனார் நிறைந்திருக்கிறார்.

ஈசனே
உலகுக்கெல்லாம் நேசனே
பகைவரைப் பொருதும் திறமும்
உலகைச் சுமக்கும் உன்னைச் சுமக்கும் எருதும்
கொண்டவனே!
என் விண்ணப்பம் கேள்!
உன்னுடைய
வாளும் வெம்மழுவும்
உனைப் பணிந்து வாழும் பூதக்குழுவும்
பாயும் புலியை உரித்து உடுத்த பாயும்
வெண்டலை மாலையும்
நறுக்கிய பிறையும்
பிறை தாங்கும் சடைமுடியும்
எந்நாளும் வைத்துப் பார்க்கும்
சரக்கு அறையாய் என் நெஞ்சம் ஆக்குவாய்!

இது போல எத்தனையெத்தனை சரக்குகளோ!

அன்புடன்,
ஜிரா

023/365