கண்ணனின் நிறம்

கண்ணனின் நிறம்.

காதலின் நிறம் பார்த்தோம். கண்ணனின் நிறம் என்ன? பாசுரம் முதல் திரைப்பாடல் வரை கண்ணன் வண்ணம் சொல்லும் வரிகள் ஏராளம். அவன் நீல மேக சியாமள வண்ணன். கருநீலம். கருமை நிறக்கண்ணன். இருட்டின் நிறம். நிலவின்  தேய்கின்ற பருவம் கிருஷ்ண  பட்சம் எனப்படுகிறது.

தொண்டரடிப்பொடி ஆழ்வாரின், மனதை உருக வைக்கும் பாசுரத்தில்

காரொளி வண்ணனே

கண்ணனே கதறுகின்றேன்

என்று பாடுகிறார். கரிய மேகத்தை போல் வண்ணமா?  கார் முகில் வண்ணன். பாரதியார்  காக்கையின் கரிய நிறம் பார்த்து கண்ணன் நினைவு வந்ததாக பாடுகிறார்.  கண்ணதாசனும் இந்த கரிய நிறத்தையே வழிமொழிகிறார். கோபியர் கொஞ்சும் ரமணனை

மாபாரதத்தின் கண்ணா மாயக்கலையின் மன்னா

மாதவா கார்மேக வண்ணா – மதுசூதனா

வேறு ஒரு பாடலிலும் கரிய நிறத்தையே தொடர்கிறார்

கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னை

காணாத கண்ணில்லையே
ஒரு பழைய அழகான தாலாட்டு பாடலில் மருதகாசி நீலத்தை கண்ணன் வண்ணமாக கொள்கிறார். கருப்பு வண்ணம் குழந்தையை மிரளவைக்கும் என்று நினைத்து அவர்  நீலத்தை மட்டும் வைத்துக்கொண்டு மேகத்தை தள்ளிவைக்கிறார்.
நீல வண்ண கண்ணா வாடா !
நீ ஒரு முத்தம் தாடா
வாலி இந்த கருப்பா  நீலமா கருநீலமா என்ற கேள்விக்கு  பட்டிமன்ற நடுவரை போல் ஒரு தீர்ப்பு சொல்கிறார்
கங்கை கரை மன்னனடி கண்ணன் மலர் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி
வங்கக்கடல் போல் கண்ணன் நிறம் என்றால் வாலி எல்லா தரப்பையும் ஏற்றுக்கொள்கிறார் என்று நினைக்கிறேன்.
வைரமுத்து கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர். . ஆனாலும் கண்ணன் வண்ணம் பாடாமல் இருக்க முடியுமா? வகையாக கிடைத்தார் ரஜினிகாந்த் – கரு வண்ணம் பற்றி பாடல் எழுத. தில்லானா தில்லானா பாடலில் எழுதிய வரிகள் கண்ணன் நிறம் கூறும்.

கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே

கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே

இன்னொரு பாடலில் அவர் வரிகள்

வான் போலே வண்ணம் கொண்டு

வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே

கடல் வண்ணம், கார்மேக வண்ணம் நீல வண்ணம் என்ற பலரும் சொன்னாலும் வைரமுத்துவின் இன்னொரு கற்பனை அபாரம். கண்ணாமூச்சி ஏனடா என்ற பாடலில்

பாற்கடலில் ஆடிய பின்னும் உன் வண்ணம் மாறவில்லை இன்னும்

என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா

என்ற கற்பனை அற்புதம். இதை ராதையும் ஆண்டாளும் மீராவும் பாடிய வரிகளாகவே பார்க்கிறேன்!
***
மோகன கிருஷ்ணன்
022/365