கண்ணம்மா!
- படம்: வண்ண வண்ணப் பூக்கள்
- பாடல்: கண்ணம்மா, காதல் எனும் கவிதை சொல்லடி
- எழுதியவர்: இளையராஜா
- இசை: இளையராஜா
- பாடியவர்கள்: இளையராஜா & எஸ். ஜானகி
- Link: http://www.youtube.com/watch?v=Vx-ylI5mHm0
புன்னை மரத் தோப்போரம், உன்னை நினைந்து
முன்னம் சொன்ன குயில் பாட்டு சொல்லி மகிழ்ந்தேன்!
பொன்னி நதிக் கரையோரம் மன்னன் நினைவில்
கண்ணிமைகள் மூடாது கன்னி இருந்தேன்!
பாரதியாருக்கு மிகவும் பிடித்த ‘கண்ணம்மா’ என்கிற பாத்திரத்தின் பெயரைச் சொல்லித் தொடங்குகிற இந்தப் பாடல்முழுவதுமே, பாரதிக்கு ஒரு tributeபோல இருக்கும். அவர் அடிக்கடி பயன்படுத்திய வார்த்தைகள் மற்றும் அவரது ஞாபகத்தைக் கொண்டுவரும் சொற்களை நிரப்பி எழுதியிருப்பார் இளையராஜா.
இங்கே ‘முன்னம் சொன்ன குயில் பாட்டு’ என்ற பதத்துக்கு நேரடியாக எல்லாரும் எடுத்துக்கொள்ளும் பொருள், ‘நீ முன்பு ஒருநாள் சொன்ன குயில் பாட்டை நான் இப்போது ஞாபகப்படுத்திக்கொண்டேன், அதைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தேன்.’
கொஞ்சம் யோசித்தால், இதற்கு இன்னோர் அழகான பொருளும் தோன்றும். பாரதியாரிடமே உதாரணம் கேட்கலாம்:
இருமை அழிந்தபின் எங்கிருப்பாய் அற்ப மாயையே? தெளிந்து
ஒருமை கண்டோர்முன்னம் ஓடாது நிற்பையோ?
ஆக, ‘முன்னம்’ என்றால் in front, ஒருவருக்கு முன்பாக இருப்பது, physical presence!
இந்த அர்த்தத்தில், மேற்சொன்ன வரிக்குப் பொருள், ’நீ என் முன்னே குயில் பாட்டைச் சொன்னாய், இப்போது நீ என் எதிரே இல்லாவிட்டாலும்கூட, அந்தப் பாடலைப் பாடுவதன்மூலம் நான் உன்னை உணர்கிறேன்.’
இலக்கணத் தமிழிலும் ‘முன்னம்’ என்று ஒரு வார்த்தை இருக்கிறது. அதன் அர்த்தம், ஒரு செய்தியை யார் யாரிடம் பேசினார்கள் என்று சொல்லாமல் சொல்வது.
உதாரணமாக, ஒரு மாதிரி வாக்கியம்: கட்டபொம்மன் ஜாக்ஸன் துரையிடம் “வரியெல்லாம் கட்டமுடியாது, சர்த்தான் போய்யா” என்றான்.
இந்த வாக்கியத்தில் சொல்லப்பட்ட செய்திமட்டுமல்ல, அதை யார் சொன்னார்கள், யாரிடம் சொன்னார்கள் என்று எல்லாமே நேரடியாக உள்ளது.
இன்னோர் உதாரணம்: ”அவனை நினைச்சா சந்தோஷமா இருக்குடி, ஆனா எங்க கல்யாணத்துக்கு அப்பா, அம்மா ஒத்துக்குவாங்களோன்னுதான் கவலைப்படறேன்!”
இங்கே சொன்னவர் யார் என்கிற விவரம் இல்லை, அதைக் கேட்டவர் யார் என்றும் தெரியவில்லை, ஆனால் சொல்லப்பட்ட விஷயத்தை வைத்து, ஒரு காதலி தன் தோழியிடம் பேசுகிறாள் என்று நாம் ஊகிக்கலாம். அதைதான் ‘முன்னம்’ என்று அழைக்கிறது செய்யுள் இலக்கணம்.
***
என். சொக்கன் …
22 12 2012
021/365
தேவா.. 12:44 pm on December 22, 2012 Permalink |
முதல் முறையாக முன்னம் பற்றி அறிந்து கொண்டேன்.