திருமண மலர்கள் பூக்கும் நேரம்

கல்யாணக் கனவுகள் ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகம். ஆண்களுக்கு கல்யாண விருப்பங்கள் நிறைய இருக்கும். ஆனால் கனவுகள் குறைவு.

ஆனால் பெண்ணுக்கு அப்படியில்லை. குதிரையொன்றில் ஏறி மன்னன் வருவான். முதலில் மனத்தைத் தருவான். பின்னர் மணத்தை தருவான். அதற்குப் பின் இன்பங்களை மட்டும் அள்ளி அள்ளித் தருவான் என்று கனவுகளில் பருவப் பெண்கள் மிதந்து கொண்டிருப்பார்கள்.

அப்படியொருவன் வந்தபின் திருமணம் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று கற்பனைகளிலேயே அவள் மனம் மயங்கிக்கொண்டிருக்கும்.

இந்தத் திரைப்படப் பாடலிலும் அந்தக் கற்பனையோடு ஒரு காதலி பாடுகிறாள்.

படம் – லட்சுமி
இசை – இளையராஜா
பாடியவர் – பி.எஸ்.சசிரேகா
பாடல் – ஆலங்குடி சோமு
ஆண்டு – 1979
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=LR1t5MXCmNs
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
அன்னமே சொர்ணமே அன்றுதான் இந்த ஊர்வலம்
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே

பாட்டின் நடுவில் தன்னுடைய திருமணம் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்றும் நினைத்துப் பாடுகிறாள்.
ஊருக்கெல்லாம் பாக்கு வச்சு காத்திருப்பேன்
ஊரையெல்லாம் பாக்க வச்சு மணம் முடிப்பேன்
கூரச்சேல சரசரக்க அஞ்சி நடப்பேன்
கொண்டவனின் குணம் அறிந்து கொஞ்சி சிரிப்பேன்
அம்மம்மா செல்லம்மா இந்த மயக்கம் எனக்கும் பொறக்கும் புது சுகமிருக்கும்

பி.எஸ்.சசிரேகா ஒரு அருமையான பாடகி. தமிழில் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளப்படாத பாடகி என்பது என் கருத்து. அது போல ஆலங்குடி சோமு இளையராஜா இசையில் பாடல்களை எழுதியிருக்கிறார் என்பதே பலருக்குத் தெரியாது. அந்த வகையில் இந்தப் பாட்டு ஒரு அபூர்வ பாட்டுதான். சரி. கருத்துக்கு வருவோம்.

இப்போதுள்ள பெண்கள் மட்டுந்தானா இப்படி கல்யாணக்கனவு காண்கிறார்கள்?

இல்லை. பெண்களின் உள்ளத்தாசையை சங்க நூல்கள் அழகாகக் காட்டுகின்றன. சங்ககாலத்து வள்ளியும் இப்படித்தான் கனவு கண்டாள். முருகனைக் கணவனாகக் கொண்டாள்.

இது மார்கழி மாதமல்லவா. ஆகையால் நினைக்கப்பட வேண்டிய இன்னொருத்தியும் இருக்கிறாள்.

திருவில்லிபுத்தூர்க்காரி
பெயர் ஆண்டாள்
தமிழை ஆண்டாள்
மாலனுக்குக் கட்டிய மாலைகளைத்
தினந்தினமும் பூண்டாள்
கண்ணனையன்றி எதையும் சீண்டாள்
அவனையுள்ளும் எண்ணமன்றி எதுவும் தூண்டாள்
காதல் கொதித்தெழுந்து
கோவிந்தனைச் சேர்த்தணைத்து வாழாமல்
ஒவ்வொரு இரவும் மாண்டாள்
அந்தக் கார்மேகன் மதுசூதனன் மாதவன் இன்றிக்
கல்யாணமும் வேண்டாள்

அவளுக்கும் ஒரு கல்யாணக் கனவு. அதைப் பாட்டில் வைத்தாள். நெஞ்சக் கூட்டில் வைத்தாள். இறைவன் திருவீட்டிலும் வைத்தாள். பலன் எட்டியதோ கிட்டியதோ! உலகம் பேதையென்று திட்டியதோ! ஆயினும் தமிழாய்க் கொட்டியதோர் கனவினைப் பார்க்கலாம்.

லட்சுமி திரைப்படத்து நாயகி மேளம் கொட்ட என்று பாடினால், இவளோ மத்தளம் கொட்ட என்று பாடுகிறாள்.

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்

வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்துக்
காய்சின மாகளிறன்னான் என் கைப்பற்றித்
தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்

இந்தப் பாடல்களை நாச்சியார் திருமொழி என்று அன்று அவளும் எழுதி வைத்தாள். மார்கழி வருகையில் நாமும் நினைத்துப் பார்க்கிறோம். சரி. அவள் சொன்னதைப் பார்ப்போம்.

ஆயிரம் ஆனைகள் அவனைச் சூழ்ந்து வரும்.  ஆயிரத்து ஒன்றாக அவன் வருவான். மங்கல நீரும் நல்லவர் வாழ்த்தும் மங்கையர் கண்ணும் அவனைத் தீண்டத் தீண்ட கூட்டத்தைத் தாண்டி வருவான்.

கொட்டுகள் அதிரும். சங்கங்கள் முழங்கும். நல்முத்துப் பந்தலடியில் வெண்முத்துப் பல்லழகன் என் முத்துக் கரம் பற்றி மணம் கொள்வான்.

சொல்லில் எல்லாம் உயர்வான சொற்கள் ஒலிக்க, என் கைப்பிடித்து முன் நடந்து பற்றிய தீயை சுற்றி வருவான்.

மேளம் கொட்ட நேரம் வரும் என்று பாடிய சினிமா நாயகிக்கு ஒரு நாயகன் படத்தில் வந்து விட்டான் என்று படம் பார்த்தவர்களுக்கு தெரியும்.

மத்தளம் கொட்ட என்று பாடியவனுக்கு நாரணன் நம்பி வந்தானா இல்லையா என்று யாரைக் கேட்பது!

அன்புடன்,
ஜிரா

020/365