குற்றமில்லை குற்றமில்லை
பட்டுக்கோட்டை மற்றும் கண்ணதாசன் பாடல்களிலிருந்து மட்டுமே வாழ்க்கைக்கு ஆகும் பஞ்ச் பழமொழிகளை எடுக்கலாம்.
எடுத்துக்காட்டாக, மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், வீடு வரை உறவு என்று எவ்வளவோ சொல்லலாம்.
அப்படியொரு கவியரசர் பாடலைத்தான் இன்று பார்க்கப் போகிறோம்.
படம் – குலமகள் ராதை
இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்
பாடியவர் – ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜன்
பாடல் – கவியரசர் கண்ணதாசன்
ஆண்டு –
பாடலின் சுட்டி
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி
காதலர்களுக்குள் ஏதோ பிரச்சனை. அவர்கள் பொன்வசந்தம் புண்வசந்தம் ஆகிப் போனதால் பண் வசம் சரணடைகிறான் காதலன்.
நடந்ததற்கு யார் காரணம்? யாரைக் குற்றம் சொல்வது என்று கேள்வி கேட்கும் மனதுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு பாடல் பிறக்கிறது.
அவளும் குற்றம் செய்யவில்லை. அவனும் குற்றம் செய்ய வில்லை. எல்லாம் காலமும் கடவுளும் செய்த குற்றம் என்று விதியின் மேல் பழி போடுகிறான்.
இதேபோல ஒரு காட்சி கம்பராமாயணத்தில் வருகிறது. அங்கு இந்தப் பாடலைப் பாடுவது இராமன்.
நதியின் பிழையன்று நறும்புனல் இன்மைஅற்றே
பதியின் பிழையன்று பரிந்து நமைப்புரந்தாள்
மதியின் பிழையன்று மகன்பிழையன்று மைந்த
விதியின்பிழை இதற்கென்னை வெகுண்ட தென்றான்’
எப்போது இராமன் இதைச் சொல்கிறான்? யாரிடம் சொல்கிறான்?
ஏழிரண்டு ஆண்டுகள் வனவாசம் போக வேண்டுமென்று உத்தரவு வாங்கிக் கொண்டு வருகின்றான் இராமன். செய்தியைக் கேள்விப்பட்டு கொதிக்கின்றான் இலக்குவன். அப்போது அவன் சினத்தை அடக்குவதற்காக இராமன் சொல்கிறான்.
“இலக்குவா, என் தம்பியே,
நதியில் நீர் இல்லை என்றால் அது நதியின் குற்றமாகுமா?
நம்மைப் பெற்ற தந்தையின் குற்றமா வரம் கொடுத்தது?
எடுத்து வளர்த்த தாயின் அறிவின் குற்றமா நம்மைக் காட்டுக்குப் போகச் சொன்னது?
இது விதியின் பிழை! விதியின் பிழை மட்டுமே!”
அதைச் சுருக்கமாகச் சொன்னால்..
தாயைச் சொல்லிக் குற்றமில்லை
தந்தை சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடா
கடவுள் செய்த குற்றமடா
இப்படிக் கண்ணதாசன் இலக்கியங்களையும் அந்த இலக்கியங்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளையும் சரியான வகையில் திரைப்படப் பாடல்களிலும் பயன்படுத்தியுள்ளார் என்பதே உண்மை.
சரி..இதே கம்பராமாயணப் பாட்டிலிருந்து ஒரு வரியை இன்னொரு பாட்டில் கண்ணதாசன் பயன்படுத்தியுள்ளார். எந்தப் பாடல் என்று தெரிகிறதா? கண்ணதாசன் படிக்காத கம்பராமாயணமா!
அன்புடன்,
ஜிரா
018/365
Rie 10:45 am on December 19, 2012 Permalink |
தியாகம் படத்தில் வரும் “நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு”
GiRa ஜிரா 7:10 pm on December 19, 2012 Permalink |
அட்டகாசம். சரியாச் சொல்லீட்டிங்க 🙂
MGR 10:55 am on December 19, 2012 Permalink |
நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றம் இல்லை விதியன்றி வேறு யாரம்மா-தியாகம்,நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
GiRa ஜிரா 7:11 pm on December 19, 2012 Permalink |
அதே நதி வெள்ளமேதான். ஒரு பாட்டின் ஆர்வத்தில் ஓராயிரம் பாட்டு எழுதியது கண்ணதாசன் அல்லவா.