தலைவா, நீ வா!

  • படம்: பம்பாய்
  • பாடல்: கண்ணாளனே, எனது கண்ணை
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்: கே. எஸ். சித்ரா
  • Link: http://www.youtube.com/watch?v=tUd712cl0SM

கண்ணாளனே,

எனது கண்ணை நேற்றோடு காணவில்லை!

என் கண்களைப் பறித்துக்கொண்டும்

ஏன் இன்னும் பேசவில்லை?

சில வார்த்தைகளைக் கேட்கும்போது அவை மிகவும் நவீனமானவை, சில வருடங்களுக்குமுன்னர், மிஞ்சிப்போனால் சில பத்தாண்டுகளுக்குமுன்னர் கண்டுபிடிக்கப்பட்டவை என்று நினைக்கிறோம். இந்தப் பாடலின் முதல் சொல், அப்படிப்பட்டது.

‘கண்ணாளனே’ என்பது, ஒரு காதலி தன்னுடைய காதலனை ’என்னுடைய கண் போன்றவனே’ என்று அழைப்பதாகப் பொருள் கொண்டு மகிழ்கிறோம். உண்மையில் அது நீண்ட பின்னணி கொண்ட ஒரு புராதனச் சொல்.

சாட்சி வேண்டுமா? இன்னொரு சினிமாப் பாட்டிலேயே தொடங்குவோம், ’கண்ணாளனுடன் கலந்து ஆனந்தம் பெற’ என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியிருக்கிறார்.

கொஞ்சம் பின்னால் சென்றால், பாரதிதாசன், ‘அன்று எனக்குக் காட்சி தந்த கண்ணாளன்’ என்று எழுதினார்.

இன்னும் சற்று பின்னால் சென்றால், வள்ளலார், ‘கண்ணாளா, சுடர் கமலக் கண்ணா’ என்று கடவுளைப் போற்றினார்.

மேலும் பின்னோக்கிச் செல்வோம், கம்பனும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியதுண்டு. ‘அறம் வளர்க்கும் கண்ணாளன்’ என்று ராமனைப் புகழ்ந்தவர் அவர்.

கம்பனுக்கு முன்னால், ஆழ்வார்களும் இதே சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்கள், ‘கண்ணாளன், கண்ண மங்கை நகராளன்’ என்று பாடினார் திருமங்கை ஆழ்வார்.

இன்னும் தொடர்ந்து தேடினால், ஏராளமான ‘கண்ணாளன்’கள் கிடைப்பார்கள். அன்றுமுதல் இன்றுவரை நல் அர்த்தம் தருகிற இளமையான தமிழ்ச் சொல் அது. ’சீர் இளமைத் திறம்’ என்று மனோன்மணீயம் போற்றுவதுபோல்!

அது சரி, கண்ணாளன் என்ற சொல்லுக்கு உண்மையில் என்ன அர்த்தம்?

இந்த உலகில் எத்தனை இன்பங்கள் இருந்தாலும், அவற்றைக் கண்ணால்மட்டும்தான் காணமுடியும், மற்ற உடல் பாகங்கள் அதனை வெறுமனே அனுபவிக்குமேதவிர, கண்தான் முதலில் பார்க்கும், அதனைப் பெற்றுத்தரும். அதுபோல, ’கண்ணாளன்’ என்றால், சுகங்களைப் பெற்றுத் தருகிறவன் என்று பொருள். கம்பனும் ஆழ்வார்களும் இதைக் கடவுளுக்குச் சொன்னார்கள், பட்டுக்கோட்டையாரும் வைரமுத்துவும் காதலன் / கணவனுக்குச் சொன்னார்கள்.

அதென்ன கணவன்மட்டும்? மனைவி கண்போல் இருக்கமாட்டாளா?

ஓ, கண்ணாளனுக்குப் பெண்பால் உண்டு, கண்ணாட்டி!

***

என். சொக்கன் …

18 12 2012

017/365