விருந்தினர் பதிவு : சொட்டிஜா, சொன்னோவா

பாடல் : பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்
பாடியவர்கள் : டி.எம்.எஸ், ஏ.எல்.ராகவன்
இசை : வேதா
பாடல்: வாலி
படம்: அதே கண்கள் (1967)
நடிகர்கள் : ரவிச்சந்திரன், காஞ்சனா, அஷோகன்

இசையமைப்பாளர்கள் தங்கள் மெட்டுக்கேற்ற சரியான அதாவது கேட்சியான (அவர்களின் மொழியில்) வார்த்தைகள் கிடைக்காத போது
கிஞ்சித்தும் அர்த்தமில்லாத ஏதோ வார்த்தைகளை இட்டு நிரப்புவார்கள் மெட்டை.

லாலாக்கு டோல் டப்பிமா,முக்காபுலா, உய்யலாலா முதல் இன்றைய ஓஹ் மகசீயா, மக்காயாலா வரை வரிசையாக உதாரணங்களை அடுக்கலாம்.அப்படி அந்தக் காலத்தில் பயன்படுத்தப் பட்ட ஒரு பாடலை இன்று பார்க்கலாம்!

ஏவிஎம் தயாரிப்பில் 1967இல் வேதா இசையில் வெளியான படம் அதேகண்கள்.இதில் மர்மமாகக் கொலை செய்யும் கொலையாளியை எண்ணி கதாநாயகியும் அவளின் தோழிகளும் பயந்து நடுங்குகிறார்கள்.அவர்களைக் கதாநாயகன் கிண்டல் செய்து பாடுவதாகக் காட்சி.

வாலியும் மெட்டுக்கேற்ப கச்சிதமாகப் பாடல் எழுதிக் கொடுத்து விட்டார்.பாடலின் இடையில் “தானன தானன
தானன, தனனன தனனன தனனன” என வரும் தத்தகாரத்திற்கு ஏற்ற வரிகள் கிடைக்கவில்லை.அப்போது இப்பாடலைப் பாடிய TMS அவர்கள் தானே அந்த வரிகளுக்கு வார்த்தையைப் போட்டுப் பாடிவிட அது எல்லோருக்கும் பிடித்தும் விட்டது.ஆனால் ஒருவருக்கும் அர்த்தம் விளங்கவில்லை.

அந்த வரிகள் “தாக்கெரத் தாக்கெரத் தாக்கெரத் தக்க நொக்கோ தக்க நொக்கோ தக்க நொக்கோ “.பின்னர் இந்த வார்த்தைகளையும் அதன் அர்த்தத்தையும் விளக்கினார் TMS.

அது TMS அவர்களின் சமூகமான சௌராஷ்டிர சமூக மொழி வார்த்தைகள்.இணைந்து இப்பாடலைப் பாடிய AL ராகவன் அவர்களும் சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவரே.சௌராஷ்டிர மொழியில் தாக்கெரத் என்றால் பயம் வந்தால் என்று அர்த்தம். தக்க நொக்கோ என்றால் பயப்பட வேண்டாம் என்று அர்த்தம்.

பாடலின் இரண்டாவது சரணத்தில் சொட்டிஜா சொட்டிஜா சொட்டிஜா என்று பாடுவார் டிஎம் எஸ் சொன்னோவா சொன்னோவா சொன்னோவா என்று பாடுவார் ராகவன்.சொட்டிஜா என்றால் விட்டுப் போ என்றும்,சொன்னோவா என்றால் விட்டுப் போகாதே என்றும் அர்த்தம்!

இந்த வார்த்தைகள் புதுமையாகவும் அதே நேரத்தில் காட்சிக்கேற்ப அர்த்தம் தந்ததாலும் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்!

எம். ஜி. ரவிக்குமார்

(@RavikumarMGR  in twitter)