மாம்பூ

ஒரு அழகான பாடல் தொலைக்காட்சியில் வந்தது. மிக இனிமையான பாட்டு.

படம் : மச்சானைப் பாத்தீங்களா
இசை : சந்திரபோஸ்
பாடியவர்கள் : இசையரசி பி.சுசீலா & கந்தர்வக் குரலோன் கே.ஜே.ஏசுதாஸ்
எழுதியவர் : வாலி
பாடலின் சுட்டி : http://www.youtube.com/watch?v=NcvYJiPUU48

ஆண்: மாம்பூவே சிறு மைனாவே
எங்க ராஜாத்தி ரோஜாச்செடி
முள்ளிருக்கும் கள்ளிருக்கும்
நினைக்கையில் இனிப்பாக இருக்கிறா ஆஆ
நெருங்கையில் நெருப்பாகக் கொதிக்கிறா

பெண்: மாம்பூவே சிறு மைனாவே
நான் மச்சானின் பச்சைக்கிளி
தொத்திக்கொள்ள தோள் கொடுத்தான்
எனக்கது சுகமாக இருக்குது ஆஆ
என் மனம் எங்கெங்கோ பறக்குது

இந்தப் பாடலில் என்னை மிகவும் ஈர்த்தது பாடலின் தொடக்கம்.

காதலியை எத்தனையெத்தனையோ பூக்களுக்கு ஒப்பிட்டுப் பாட்டெழுதியிருக்கிறார்கள். அழகிய தாமரை, மணமிகு மல்லிகை, செந்நிற ரோஜா என்று எத்தனையெத்தனையோ மலர்கள் இருக்க, மாம்பூவே என்று கவிஞர் தொடங்கியிருக்கிறார்.

மாம்பூ மிகச்சிறியது. பொடிப்பொடியாக இருக்கும். ஒருவித மஞ்சள் நிறம் கலந்து இருக்கும். அதில் சிறப்பான நறுமணமும் இருக்காது.

பிறகு ஏன் மாம்பூ என்று சொல்கிறார் கவிஞர்?

பழைய தமிழ்ப் பாடல்களில் மாம்பூ வருகிறதா என்று தேடினேன்.

ஐங்குறுநூறு என்ற நூலில் ஓரம்போகியார் ஒரு விளக்கம் கூறியிருக்கிறார். அது ஒரு 18+ குறும்புக் குறிப்பு.

யாரெல்லாம் மாம்பூக்களை முகர்ந்து பார்த்திருக்கிறீர்கள்?

சரி. ஓரம்போகியாரின் பாட்டுக்குப் போகலாம்.

எக்கர் மாஅத்துப் புதுப் பூம் பெருஞ் சினை,
புணர்ந்தோர் மெய்ம் மணம் கமழும் தண் பொழில்,
வேழ வெண் பூ வெள் உளை சீக்கும்
ஊரன் ஆகலின் கலங்கி,
மாரி மலரின் கண் பனி உகுமே

முழுப்பாட்டையும் விளக்க வேண்டாம். நேரடியாக மாம்பூவுக்கு வருகிறேன்.

எக்கர் மாஅத்துப் புதுப் பூம் பெருஞ்சினை
புணர்ந்தோர் மெய்ம் மணம் கமழும் தண் பொழில்

கொஞ்சம் பிரித்துச் சொல்கிறேன் பொருள் புரியும்.

எக்கர் மாஅத்துப் – மணல்மேட்டிலுள்ள மாமரத்தின்
புதுப் பூம்பெருஞ்சினை – புதிதாக பூத்துள்ள பெரிய அரும்புகள்
புணர்ந்தோர் மெய்ம் மணம் – ஆணோடு கூடிய பெண்ணின் மேனி மணத்தை(ப் போன்றது)
கமழும் தண்பொழில் – கமழும் குளிர்ந்த சோலை

மாம்பூவின் மணம் எப்படிப்பட்டது என்று தெரிகிறதா?

”மாம்பூவே சிறுமைனாவே” என்ற பாடலை எழுதியவர் வாலி. மாம்பூவுக்கு இலக்கியம் சொல்லும் நறுமணத்தைத் தெரிந்துதான் அவர் எழுதியிருக்க வேண்டும்.

சற்று யோசித்துப் பாருங்கள்.. ஒரு காதலன் காதலியை மாம்பூவே என்று அழைக்கிறான் என்றால்… வேண்டாம். வேண்டாம். நான் இங்கேயே நிறுத்திக் கொள்கிறேன்.

அன்புடன்,
ஜிரா

016/365