புகழ்ச்சி

புகழ்ச்சி யாருக்குத்தான் பிடிக்காது! அதிலும் கையில் காசு சேர்ந்து விட்டாலோ, துதிபாடும் கூட்டம் சுற்றி வந்து விட்டாலோ…. ஆகா ஆகான்னு புகழ்ச்சி உச்சந்தலை வரைக்கும் பிடிக்கும். அது கூடிப் பெருகி ஒரு கட்டத்தில் தன்னைப் புகழ்கிறவர்களை மட்டுந்தான் பிடிக்கும். சரிதானே?

தமிழ் சினிமா தொடங்கிய போது புகழ்ச்சியெல்லாம் திரைக்கு வெளியேதான் இருந்தது. 1960களின் தொடக்கம் வரை அப்படித்தான். ஆயிரத்தில் ஒருவன் படம் முடியும் போது கதாநாயகப் பாத்திரத்தையும் கதாநாயகனையும் மறைமுகமாகப் புகழ்வது போல ஒரு பாட்டு வரும். அதுவொரு சிறிய தொடக்கம்.

கவியரசர் கண்ணதாசனோ பட்டுக்கோட்டையோ எடுத்துச் செய்யாத இந்த ஹீரோ புகழ்ச்சிப் பாடல்கள் பிற கவிஞர்கள் வரவால் மாறியது. அந்த மாற்றம் வளர்ந்து இன்றைக்கு ஒவ்வொரு கதாநாயகனும் அறிமுகப் பாடல் (Introduction song) கேட்கும் அளவிற்கு வந்திருக்கிறது.

இது சரியா தவறா என்ற விவாதத்துக்குள் நாம் போகப் போவதில்லை. இந்த ஹீரோ புகழ்ச்சியையும் எந்த அளவுக்கு நம் கவிஞர்கள் கொண்டு சென்றிருக்கிறார்கள் என்பதற்கு ஒரேயொரு எடுத்துக்காட்டு பார்க்கப் போகிறோம்.

எதையும் பாடல் வரிகளில் அடித்து ஆடும் வாலி இதிலும் அடித்து ஆடியிருக்கிறார்.

படம் – ஊருக்கு உழைப்பவன்
பாடல் – கவிஞர் வாலி
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
பாடியவர்கள் – வாணி ஜெயராம் & ஏசுதாஸ்
ஆண்டு – 1976
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=WgCneO_FIss
ஆண்: இதுதான் முதல் ராத்திரி
அன்புக் காதலி என்னை ஆதரி
பெண்: தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னைச் சேர்த்திரு
ஆண்: திருமுக மங்கை திங்களின் தங்கை
நான் பாடும் நவராகமாலிகை

கதைப்படி இது முதலிரவுப் பாட்டு. இந்தப் பாடலின் நடுவே பெண் பாடுவது போல ஒரு வரி.
கைகளில் வாரி வழங்கிய பாரி
தந்தானோ நீ தந்த மாதிரி

அதாவது பாரி வள்ளலே அந்தக் குறிப்பிட்டவரிடமிருந்துதான் வள்ளல்தன்மையைக் கற்றுக் கொண்டு கொடையாளியானாராம்.

அடேங்கப்பா!!!!!!!!!!!!!!!!!

கடையெழு வள்ளல்கள் எழுவர். அவர்களில் அனைவருக்கும் சட்டென்று தெரிவது பாரியின் பெயர். அடுத்தது அதியமான்.

அப்படியிருக்க, அந்தப் பாரியே இவரிடம் கொடையைக் கற்றார் என்று சொல்வது…. டூமச் புகழ்ச்சிதான். சினிமாவில் இதெல்லாம் மிகச்சாதாரணம்.

சரி. அந்தப் பாரியை இலக்கியத்தில் எப்படிப் புகழ்ந்திருக்கிறார்கள் என்று பார்ப்போமா?!

கபிலர் என்னும் பெரும்புலவர் பாரியின் நண்பர். அவர் பாடிய ஒரு பாடலையே எடுத்துப் பார்ப்போம். பாரி பற்றிய நிறைய பாடல்கள் இருந்தாலும் பாரியின் கொடைத்தன்மையை எடுத்துச் சொல்ல இதை விடச் சிறந்த பாடல் இல்லையென்பது என் கருத்து.
பாரி பாரி யென்றுபல வேத்தி (பாரி பாரி என்று பல ஏத்தி)
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் (ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்)
பாரி யொருவனு மல்லன் (பாரி ஒருவனும் அல்லன்)
மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே. (மாரியும் உண்டு ஈங்கு உலகு புரப்பதுவே)

சுருக்கமாகப் பொருள் சொல்கிறேன். பாரி பாரி என்று புலவர்கள் பலவித புகழ்ச்சிகளை ஏற்றிச் சொல்வார்கள். ஆனால் பாரி மட்டுமல்ல இந்த உலகத்தில் மாரியும்(மழையும்) உண்டு.

இதன் வழியாக புலவர் சொல்ல வருவது மழையின் கொடையானது எவ்வளவு சிறப்பானதோ அவ்வளவு சிறப்பானது பொதுவானது செழிப்பானது பாரியின் கொடை. இது வஞ்சப் புகழ்ச்சி. நேரடியாகப் புகழாமல் மறைமுகமாகப் புகழ்வது. புகழ்ச்சிக்கு இல்லாமல் தேவைக்குக் கொடுத்தவன் பாரி.

அப்படிப்பட்ட கொடையாளின் பெயரைச் சொல்லி “கைகளில் வாரி வழங்கிய பாரி தந்தானோ நீ தந்த மாதிரி என்று பாடுவது என்ன அணியோ! பொய்யான வகையில் ஒருவரை மேம்படுத்திச் சொல்வதால் பொய் மேம்பாட்டு அணி என்று சொல்லலாம்.

இப்படியான டூமச் பொய் மேம்பாட்டு அணியில் நீங்களும் நிறைய பாட்டுகள் கேட்டிருப்பீர்கள். உங்களுக்கு எதெல்லாம் உடனே நினைவுக்கு வருகிறது?

அன்புடன்,
ஜிரா

14/365