குடத்தில் கங்கை

நமக்குத் தெரிஞ்ச ரெண்டு பேரு..
அதுவும் நமக்குப் பிடிச்ச ரெண்டு பேரு..
ரொம்ப மதிக்கும் ரெண்டு பேரு…
அந்த ரெண்டு பேருக்குள்ள ஒரு கருத்து வேறுபாடுன்னா நாம யாரப் போய் கேக்குறது?

அதான் இந்தப் பஞ்சாயத்த ஒங்க கிட்ட கொண்டு வந்துட்டேன். எவ்வளவு செலவானாலும் நீங்கதான் பைசல் பண்ணனும்.

என்னது? ரெண்டு பேரும் நேர்ல வரனுமா? அது முடியாது. ரெண்டு பேரும் இப்ப இல்ல. அதுலயும் ஒருத்தரு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னாடி இருந்தவரு.

விவரத்தைச் சொல்றேன். நீங்களே படிச்சு சிந்திச்சு நிதானமா ஒங்க கருத்தைச் சொல்லுங்க.

காளமேகம்னு ஒரு புலவர்தான் வாதி. இவரு ஆகும்னு சொல்றாரு. கண்ணதாசன்னு ஒரு கவிஞர் பிரதிவாதி. இவரு ஆகாதுன்னு சொல்றாரு. எனக்கென்னவோ ரெண்டு பேரும் சொல்றது சரிதான்னு தோணுது. நீங்கதான் விளக்கனும்.

இந்தப் புலவர் கிட்ட குடத்தில் கங்கை அடங்கும்னு ஈற்றடி வெச்சி செய்யுள் எழுதச் சொல்லியிருக்காங்க. குடத்துல கங்கை அடங்குமா?

காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி? கங்கை வெள்ளை சங்குக்குள்ளே அடங்கி விடாதுன்னு கவியரசர் கண்ணதாசன் பாடியிருக்காரே!

படம் – அவர்கள்
ஆண்டு – 1977
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
பாடல் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர் – எஸ்.ஜானகி
காற்றுக்கென்ன வேலி
கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது

இந்தப் பாட்டுல கவியரசர் என்ன சொல்றாரு? கங்கை வெள்ளத்தை அடக்க முடியாதுன்னு கண்ணதாசன் சொல்றாரு. அதுலயும் சங்குக்குள்ள முடியுமான்னு கேக்குறாரு.

அப்படியிருக்குறப்போ காளமேகத்தை குடத்தில் கங்கை அடங்கும்னு பாடச்சொன்னா எப்படி?

அவரும் அடங்கும்னு பாடியிருக்காரு. சடாம”குடத்தில் கங்கை அடங்கும்”ன்னு பாடியிருக்காரு. அந்தப் பாட்டைக் கீழ குடுக்குறேன். நீங்களே படிங்க.

விண்ணுக்கடங்காமல் வெற்புக்கடங்காமல்
மண்ணுக்கடங்காமல் வந்தாலும் – பெண்ணை
இடத்திலே வைத்த இறைவர் சடாம
குடத்திலே கங்கை அடங்கும்

எனக்கு என்னவோ காளமேகம் ஆடுனது போங்காட்டம் போலத்தான் தெரியுது. ஆனாலும் அசை சீர் எல்லாம் சரியா இருக்குற மாதிரியும் தெரியுது. செய்யுளின் யாப்பிலக்கணமெல்லாம் சரியா இருக்கே. பொருளும் பொருந்தி வருது.

இப்பப் புரியுதா நான் எப்படி சிக்கியிருக்கேன்னு. ஆகையால அரிய பெரிய மக்களாகிய நீங்கதான் காளமேகம் சரியா கண்ணதாசன் சரியான்னு ஆராய்ஞ்சு சொல்லனும்னு வேண்டி வணங்கிக் கேட்டுக்கிறேன்.

அன்புடன்,
ஜிரா

012/365