ஆடிக் காற்றில் ஓர் அம்மி

  • படம்: பாயும் புலி
  • பாடல்: ஆடி மாசக் காத்தடிக்க
  • எழுதியவர்: வாலி
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=QfiRGMK2DxQ

தொட்டா என்ன? பட்டா என்ன? கெட்டா போகும்!

அம்மியும் அசங்குற ஆடி மாசக் காத்தடிக்க…

செம லோக்கலான டக்கர் பாட்டு இது. நாலு வரியெல்லாம் பிரித்து எழுதினால் அடிக்க வந்துவிடுவார்கள். அதனால், ரெண்டே வரியுடன் நிறுத்திக்கொண்டு நமக்கு வேண்டிய விஷயத்தைப் பார்ப்போம்.

‘ஆடி மாசக் காத்துல அம்மியே பறக்கும்’ என்பது பழமொழி. அதை இந்தப் பாடலில் பயன்படுத்த நினைத்த வாலிக்கு பல்லவி, அனுபல்லவியில் சரியான வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதனால், முதல் சரணத்துக்கும் பல்லவிக்கும் நடுவிலுள்ள இடைவெளியில் சரேலென்று நுழைத்துவிடுகிறார்.

இந்தப் பாட்டில் இந்த வரி இருப்பது பல பேருக்குச் சொன்னால்தான் தெரியும். அதைக் கவனித்தவர்களுக்குக்கூட ‘அம்மியும் அசையுற’ என்றுதான் காதில் விழுந்திருக்கும். ஆனால் அங்கே ஜானகி பாடும் வார்த்தை, ‘அசங்குற’தான்.

’அசங்குதல்’ என்றால், அதற்குத் தமிழ் அகராதி சொல்லும் பொருள்: நடுங்குதல், அசைதல், தளர்தல்.

‘ஆடாது, அசங்காது வா’ என்று ஒரு பிரபலமான பக்திப் பாட்டு கேட்டிருப்போம். இன்றைக்கும் பேச்சுவாக்கில் ‘ஆடாம, அசங்காம கொண்டு வா’ என்பார்கள், அதாவது, ’ஆடாமல், அசையாமல்’ என்று அர்த்தம்.

இன்னொரு பொருள், தளர்ந்துவிடுதல். ‘அசந்து தூங்கிட்டேன்’ என்று சொல்கிறோம், அயர்ந்து என்பதன் கொச்சை வடிவம் இது, அந்த அயர்தலுக்கும், அசதிக்கும், இந்த அசங்கலுக்கும் தொடர்பிருக்கிறது.

அதேபோல், யாராவது ஒரு விஷயத்தைச் சிறப்பாகச் செய்தால் ‘அசத்திப்புட்டான்’ என்கிறோம். அதாவது என்னை அசரடித்துவிட்டான் / அயரச்செய்துவிட்டான் / அவனது திறமையைப் பார்த்து நான் நடுங்கிப்போனேன் / நம்மால் இது முடியுமா என்று எண்ணித் தளர்ந்துபோனேன்… இப்படிப் பலவிதமாகப் பொருள் கொள்ளலாம்.

ஆனால், இதெல்லாம் கொச்சை வழக்குகளா? அல்லது, ‘அசங்க’லுக்கு இலக்கிய உதாரணம் உண்டா?

ராமனுடன் போரிட வந்த ராவணனை வர்ணிக்கும் கம்பர் ‘தேவர்கள் வேர்த்து அசங்கிட’ என்கிறார். அதாவது, ராவணனின் போர்த் திறமையைப் பார்த்து, தேவர்களுக்கு வியர்த்துவிட்டதாம், நடுங்கிப்போனார்களாம்.

அதுபோலதான், ஆடிக் காற்றில் நடுங்கிய அந்த அம்மியும்!

***

என். சொக்கன் …

11 12 2012

011/365