பொலிக! பொலிக!
- படம்: பாசமலர்
- பாடல்: மலர்ந்தும் மலராத
- எழுதியவர்: கண்ணதாசன்
- இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
- பாடியவர்கள்: டி. எம். சௌந்தர்ராஜன், பி. சுசீலா
- Link: http://www.youtube.com/watch?v=R9zT_GGGL7M
நதியில் விளையாடி, கொடியில் தலை சீவி
….நடந்த இளம் தென்றலே, வளர்
பொதிகை மலை தோன்றி, மதுரை நகர் கண்டு
….பொலிந்த தமிழ் மன்றமே!
தமிழ்த் திரை இசை வரலாற்றிலேயே மிகப் பிரபலமான வரிகள் இவை. தென்றல் காற்று நதியில் விளையாடி, கொடியில் தலை சீவி நடந்து செல்கிற அற்புதமான கற்பனை ஒருபுறம், குழந்தையைத் தென்றலுக்கும் தமிழுக்கும் உவமையாகச் சொல்லும் அழகு இன்னொருபுறம்.
ஆனால், நாம் இப்போது பேசப்போவது, கண்ணதாசன் நடுவே மிகச் சிறப்பாகவும் பொருத்தமாகவும் பயன்படுத்தியிருக்கும் ‘பொலிந்த’ என்ற வார்த்தையைப்பற்றி.
’பொலிதல்’ என்ற இந்த வினைச்சொல் (Verb) இப்போது அதிகம் புழக்கத்தில் இல்லை. நல்லவேளையாக, விளம்பர உலகம் அதன் பெயர்ச்சொல் (Noun) வடிவத்தைப் பத்திரமாகப் பாதுகாத்துவைத்திருக்கிறது. அன்று முதல் இன்றுவரை, ‘என் மேனிப் பொலிவுக்குக் காரணம் லக்ஸ்’ என்று சொல்லாத நடிகைகள் உண்டா!
சோப்பு விளம்பரத்தில், ‘பொலிவு’ என்ற வார்த்தை தோற்றப் பொலிவு, அழகு, சிறப்பு என்பதுபோல் சற்றே சுற்றி வளைத்த பொருள்களில் வருகிறது. ஆனால் இங்கே கண்ணதாசன் எழுதியிருப்பது, அதே வார்த்தையின் நேரடிப் பொருளில், அதாவது வளர்தல், பெருத்தல், கொழித்தல் என்ற அர்த்தத்தில்.
உதாரணமாக, கம்ப ராமாயணத்தில் ஓர் இடத்தில் ராமன் தசரதனைப்பற்றிப் பேசும்போது ‘புதல்வரால் பொலிந்தான்’ என்கிறான். அதாவது, தசரதன் ஏற்கெனவே சிறப்பான அரசன், பெரிய வீரன்தான், ஆனால் இப்போது, நல்ல மகன்களால் அவன் மேலும் பெருமை பெற்றான்.
‘பொலிகாளை’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இதே பொலிவுதான் அங்கேயும், நன்கு பெருத்த, வளமான, சினைக்குப் பயன்படக்கூடிய காளை.
இந்தப் பாடல் வரியில் கண்ணதாசன் மூன்று விஷயங்களைச் சொல்கிறார்:
- தமிழ் பொதிகை மலையில் தோன்றியது
- பின்னர், மதுரை நகருக்கு வந்தது
- அங்கே சங்கம் (மன்றம்) வைத்து வளர்க்கப்பட்டது
இவை மூன்றுமே, சும்மா மெட்டுக்குப் பொருத்தமாகச் சொல்லப்பட்டவை அல்ல. தமிழ் மொழியின் தொடக்கம் பொதிகை மலையில்தான் எனவும், அது மதுரையில் வளர்ந்ததாகவும்தான் நம்மிடம் குறிப்புகள் உள்ளன. குறிப்பாக, மதுரை தமிழ்ச் சங்கம்தான் தமிழின் இன்றைய வளத்துக்குக் காரணம். அந்தத் தகவல்களையெல்லாம் சர்வசாதாரணமாக, எந்தத் திணித்த உணர்வும் இல்லாமல் பாடலினுள் இணைத்துவிடுகிறார் கண்ணதாசன்.
இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, ‘பொலிந்த’ என்ற வார்த்தை எத்துணைப் பொருத்தம்!
இன்னொரு விஷயம், இந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் அதிகம் புழக்கத்தில் உள்ள ‘தமிழ்ச் சங்கம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் கண்ணதாசன் ஏன் ‘தமிழ் மன்றமே’ என்று எழுதியிருக்கிறார் என நினைப்பேன்.
ஆனால், அந்த இடத்தில் ‘தமிழ்ச் சங்கமே’ என்று பாடினால், வல்லின ‘ச்’ மெட்டில் உட்காராமல் உறுத்துகிறது, ‘தமிழ் மன்றமே’தான் சுகமாக இருக்கிறது.
சொல்லப்போனால், இந்த வரிகள் முழுவதுமே வல்லின ஒற்றுகள் இல்லை. அதனால்தான் சும்மா சத்தமாகப் படித்தாலே கீதம் சுகமாக உருண்டோடுகிறது.
அதனால்தான் கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தை மன்றம் என எழுதினாரா? அல்லது மதுரையின் சரித்திரத்தில் ‘தமிழ் மன்றம்’ என்று வேறொரு சமாசாரம் இருக்கிறதா? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.
***
என். சொக்கன் …
10 12 2012
009/365
ரசனைக்காரன் 9:01 am on December 10, 2012 Permalink |
வாவ்..இத்தனை நாள் பொழிந்த என பாடுவேன் 🙂
Arun Rajendran 9:16 am on December 10, 2012 Permalink |
மன்றம் -> தமிழ் வார்த்தை…சங்கம் –> வடமொழிச் சொல்…மன்றம் வைத்து வளர்க்கப்பட்ட மொழி தமிழ்..சங்கம் பின்னர் வந்தேரிற்று..
என். சொக்கன் 10:23 am on December 10, 2012 Permalink |
நன்றி அருண். இன்றைக்கும் ‘சங்கத் தமிழ்’ என்றுதான் சொல்கிறார்கள், மறைக்கப்பட்ட மன்றத்தை வெளிக்கொண்டுவந்த கண்ணதாசனைப் போற்றதான் வேண்டும்!
Kannabiran Ravi Shankar (KRS) 10:37 am on December 10, 2012 Permalink |
என்னவொரு “பொலிவு உள்ள” கண்ணதாசன் வரிகள்!
பொலிவு-க்கு என்ன நேரடியான ஆங்கிலச் சொல்லு சொல்ல முடியும்?
பொலிக பொலிக பொலிக -ன்னு சொல்லுவான் மாறன் என்னும் பையன் (நம்மாழ்வார்)
திருவில் பொலி, மருவில் பொலி,
உருவில் பொலி, உடலில் களி -ன்னு வந்தானாம் மன்மதன்:)
திரு (எ) செல்வம் பொலிந்து, மரு (வாசனை) மிக்க வில் பொலிந்து,
உருவம் இல்லாமலேயே பொலிந்து, உடலில் களிக்க வரும் மன்மதன்!
மயிலின் மிசை அழகு பொலி வர வேணும் – ன்னு , திருப்புகழ்!
அழகன் முருகன்பொலியப் பொலிய வர வேணும்-ன்னு:)
நீங்க சொன்னது போல், பொலிதல் = கொழித்தல் என்பதே சரியான சொல்லும்-பொருளும்!
————–
இன்னோன்னு கவனிச்சீங்களா?
வளர் பொதிகை மலை தோன்றி, மதுரை நகர் கண்டு,
….பொலிந்த தமிழ் மன்றமே!
வெறும் பொதிகை இல்லை! “வளர்” பொதிகை;
ஒரு மலையை வளர விடாமல் தடுத்த அகத்தியர், இன்னொரு மலையை வளர வைக்கிறார்:)
வட மலை = விந்திய மலை = வளர விடாமல் தடுத்தவரு
தமிழ் மலை = பொதிகை மலை = “வளர்” பொதிகை ஆக்கி, “வளர்” தமிழ் ஆக்குறாரு:)
சும்மா புராணம் தான்:)
ஒரு மொழியை, ஒருத்தரே உருவாக்கி விட முடியாது; அது சமூகப் பரிணாமத்தில் தான் உருவாகி வளரும்; ஆனாலும் இது கற்பனைக்கு இனிது!:)
Kannabiran Ravi Shankar (KRS) 10:48 am on December 10, 2012 Permalink |
நதியில் விளையாடி, கொடியில் தலை சீவி
….நடந்த இளம் தென்றலே!
இது ரொம்ப இனிப்பான வரி;
நதியில் விளையாடினாத், தலை கலையும்…
தலை கலைஞ்சி இருப்பது = நதியில் வேணும்-ன்னா அழகா இருக்கும்! ஆனா சாலையில் அப்படி வர முடியாது;
அதனால், குளிச்சிட்டு, பக்கத்துல, கொடியில் தலை சீவிக்கிட்டு வந்துச்சாம்! = நடந்த இளந் தென்றல் = என்னைப் பார், என் அழகைப் பார் -ன்னு நடந்து வருது;
காற்று, தண்ணியில் வேகமாத் தான் அடிக்கும்! அலைக்கும் = அதான் “விளையாடி”
ஆனா, சாலையில், ஆளை அடிக்காம, மெல்ல வீசும் = அதான் “நடந்த” இளந்தென்றல்
இந்தக் குட்டிப் பையன் அது போலச் சமத்து;
வூட்டுக்குள்ள விளையாடும் போது, பாவம் அம்மா; ஒரே கலாட்டா & Violence:)
ஆனா மத்தவங்க முன்னாடி? = “நடந்த” இளந் தென்றல் = gentle:))
————
பொலிக -ன்னு சொன்னதும் வேற ஒன்னு ஞாபகத்துக்கு வந்துச்சி;
பொலி = Flourish/ கொழித்தல் தான்;
ஆனா, நாம இன்னிக்கி பேச்சு வழக்கில், “மவனே, உன்னைய பொலி போட்டுருவேன்” -ன்னு சொல்றோம்-ல்ல?:))
Kannabiran Ravi Shankar (KRS) 11:04 am on December 10, 2012 Permalink |
அன்புள்ள அருண் ராஜேந்திரன் & @nchokkan
சங்கத் தமிழில் உள்ள “சங்கம்” = வடமொழியோ? -ன்னு ஒரு கருத்து நிலவினாலும்…
அந்தச் “சங்கம்” = தமிழே!
சங்கம் வேற; ஸங்கம் வேற
கந்தன், ஸ்கந்தன் போலத் தான்!
ஸங்கம் = கூட்டம்/ஸங்கமம்;
புத்தர்களின் ஸங்கம்;
சமணர்களும்/ பெளத்தர்களும் தென்னகம் வந்து, தமிழ் வளர்த்த போது…
அவர்கள் சொல்லாய், “ஸங்கத்” தமிழ் ஆகி விட்டது என்பது கற்பனையே!
சமணர்கள்/ பெளத்தர்கள்… கூடுமானவரை, தமிழ் இலக்கியங்களில், பாலி மொழி கலவாமலேயே, தங்கள் சமயக் கருத்தை எழுதினார்கள்; அவர்கள் தமிழின் தனித் தன்மையை மதித்தார்கள்;
வேதநெறியின் சமஸ்கிருதம் கலப்பு செய்தது போல், தமிழில் பாலி மொழி கலக்கவில்லை பாருங்கள்; அதுவே அத்தாட்சி;
எப்படி விளக்கு = விளக்கம் ஆனதோ,
அப்படி சங்கு = சங்கம்!
விளக்கு ஒளியால் பெறும் தெளிவு = விளக்கம்;
சங்கு ஒலித்து ஒழுங்கு உறும் அவை = சங்கம்!
தலைச் “சங்க” நாண் மதியம் -ன்னே ஒரு ஊரு உண்டு;
சங்கம் = கழகம்/ மன்றம் ; இவையெல்லாம் இணையான சொற்களே;
மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் கூட, முதலில் ஸங்கம் என்று கருதினாலும், பின்னர் ஆய்ந்து, தன்னையே மாற்றிக் கொண்டு, விளக்கினார்;
————-
இந்தப் பாட்டில்,
“தோன்றி, கண்டு, மன்றம்” -ன்னு வல்லினம் ஒலிக்க அமைச்சி இருக்காரு கவிஞரு; அதான் சங்கம் என்றோ, கழகம் என்றோ சொல்லாமல், மன்றம் என்ற சொல்லைச், சந்தமாப் போடுறாரு:)
Kannabiran Ravi Shankar (KRS) 11:33 am on December 10, 2012 Permalink |
இதே போல்…
தமிழ் மறையான திருக்குறளில் = “ஆதி-பகவன்” வடமொழியோ?
சிலப்பதிகாரத்தில் = “அதிகாரம்” வடமொழியோ?
-ன்னு எல்லாம் எழுப்பப்பட்டதுண்டு; ஆனால், பாவாணர், தக்க விடையிறுத்துள்ளார்;
ஆவதால் = ஆதி (தோற்றம்)
பகுப்பதால் = பகல் / பகவன்; Not Sri Valmiki Bhagawan:))
தமிழ் வேர்ச் சொற்கள் – அதன் ஆராய்ச்சி – பாவாணர்/ தெ.பொ.மீ நூல்களிற் காணலாம்;
மன்னர்களிடம் வேலை பார்த்த பண்டிதர்களால், கல்வெட்டு/அரசு அலுவலில், கிரந்தம் புகுந்துவிட்ட பின்னாலும் கூட. (6th-7th CE)
இலக்கியத்தில் மட்டும் புக விடாமல் பார்த்துக் கொண்டார்கள்… தமிழ்க் கவிஞர்கள்… ஆழ்வார்கள், நாயன்மார்கள்… கம்பன் உட்பட (10-11th CE),
கம்பனுக்குப் பின் வந்த காலத்திலும் கூட, இந்தத் தொல்காப்பிய நெறி கடைப்பிடிக்கப்பட்டது;
நாயக்கர்கள் ஆட்சி/ தஞ்சை சரபோஜி – மராத்தியர் ஆட்சிக் கட்டத்தில் தான், துதி பாடும் தன்னலக் கொள்கையால், கவிஞர்கள் -> புலவர்களாக மாறி விடத், தளரத் துவங்கியது
அப்படியொரு உறுதி 15ஆம் நூற்றாண்டு வரைக்கும்!
அப்படி இருக்க, ஆதித் தமிழிலே, “ஸங்கம்” என்று விட்டு விடுவார்களா என்ன, தமிழ்ச் சமூகப் பெருங்குடிச் சான்றோர்கள்? – இதை ஓர்ந்து பார்த்தால், விடை கிடைக்கும்!
தமிழ்ச் சங்கம் வேறு; வடசொல் ஸங்கம் வேறு!
தமிழ்க் கந்தன் வேறு; வடசொல் ஸ்கந்தன் வேறு!
Arun Rajendran 12:33 pm on December 10, 2012 Permalink |
KRS Sir,
மிக அருமையான விளக்கம்… இதுகாறும் நான் கொண்டிருந்தத் தவறானப் புரிதலை /பிழையைத் திருத்தியமைக்கு நன்றி..கற்றுக்கொண்டேன்
உங்கள் (சொக்கன், KRS -> Dosa) முயற்சிக்கு என் பாரட்டுக்கள் மற்றும் வணக்கங்கள்..
அன்புடன்,
அருண்
Kannabiran Ravi Shankar (KRS) 5:38 pm on December 10, 2012 Permalink |
புரிதலுக்கு நன்றி அருண்;
எங்கேனும் தகவற் பிழை இருப்பின், நீங்களும் தவறாது சொல்லுங்கள்;
அறியாதன அறிதலும், அறிந்தன பகிர்தலும் makes Tamizh fun for learning:)
இப்போ தான் தோனிச்சி;
கம்பன் காலத்தில், கிரந்தம் எப்பவோ, உள்ளாற வந்துருச்சி; ஆனாலும் திட்டிவிடம் -ன்னு எழுதுவான் கம்பன்:) = திருஷ்டி விஷம்:)
பார்வையிலேயே நஞ்சுள்ள பாம்பு; திட்டிவிடம்; எதுக்குக் கம்பன் திட்டி விடுறான், யாரை?-ன்னு சிரிப்பு வந்துருச்சி:))