காதலின் நிறம்

வளமையின் நிறம் பசுமை
வறுமையின் நிறம் சிவப்பு
அமைதியின் நிறம் வெண்மை
மங்கலத்தின் நிறம் மஞ்சள்
காதலின் நிறம் என்ன?

காதலித்தவர்களையோ காதலிப்பவர்களையோ கேட்டுப் பாருங்கள். அவர்களால் சொல்ல முடியாவிட்டால் அவர்களின் கண்களைப் பாருங்கள். காதலின் நிறம் தெரியும். இல்லை. காதலின் நிறங்கள் தெரியும்.

அதை மிக அழகாக இலக்கியமாக்கியிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.

பச்சை நிறமே பச்சை நிறமே..
இச்சை ஊட்டும் பச்சை நிறமே..
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே..
எனக்குச் சம்மதம் தருமே..
பச்சை நிறமே பச்சை நிறமே..
இலையின் இளமை பச்சை நிறமே..
உந்தன் நரம்பும் பச்சை நிறமே..
எனக்குச் சம்மதம் தருமே..
எனக்குச் சம்மதம் தருமே.. எனக்குச் சம்மதம் தருமே..

படம் – அலைபாயுதே
ஆண்டு – 2000
இசை – இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர் – ஹரிஹரன்
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=eWCodLVJFgo

இந்தப் பாடல் முழுவதுமே ஒவ்வொரு நிறத்தையும் சொல்லி அழகான எடுத்துக்காட்டையும் கொடுத்திருப்பார். பாடல் முழுவதுமே அழகு என்றாலும் எனக்கு மிகமிகப் பிடித்தது “புத்தம் புதிதாய் ரத்த ரோஜா பூமி தொடாத பிள்ளையின் பாதம்” என்ற வரி. என்ன அழகான கற்பனை! ஆகா!

சரி. காதலும் பக்தியும் ஒன்றா? வெவ்வேறா?

இந்தக் கேள்விக்குத் தெளிவான விடையைச் சொன்னவர் எனக்குத் தெரிந்து இதுவரையில் இல்லை. மகாகவி பாரதியும் அப்படியொரு சூழலில் சிக்கிக் கொள்கிறான்.

கண்ணா… கண்ணா..
நந்தகோபாலா… என் சொந்த கோபாலா…
நீயே என் காதலன்
நீயே என் தாய்
நீயே என் தந்தை
நீயே என் வேலைக்காரன்
நீயேதான் என் காதலியும்
என்று அடுக்கி அடுக்கிப் பாடினாலும் போதாமல் தொடர்ந்து பாடுகிறான்.

அவன் பார்த்த இடத்திலெல்லாம் கண்ணன். கண்டது கேட்டது உணர்ந்தது என்று எல்லாம் நந்தகோபாலனாகிறான். காதல் அன்பு பக்தி என்று எல்லா உணர்ச்சிகளும் ததும்பப் பாடுகிறான்.

காக்கை சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா – நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

”தீக்குள் விரலை வைத்தால் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா” என்பது பக்தியின் உச்சமானால், ”புத்தம் புதிதாய் ரத்த ரோஜா பூமி தொடாத பிள்ளையின் பாதம்” என்பது காதல் கவிதையின் உச்சம்.

அன்புடன்,
ஜிரா