வளைகாப்பு அலங்காரம்

  • படம்: எஜமான்
  • பாடல்: ராக்கு முத்து ராக்கு
  • எழுதியவர்: வாலி
  • இசை: இளையராஜா
  • பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
  • Link: http://www.youtube.com/watch?v=tEL9mdhD7ZA

அடி ராக்கு முத்து ராக்கு, புது

ராக்குடியைச் சூட்டு!

வளை காப்பு தங்கக் காப்பு, இவ

கைப்பிடிச்சுப் பூட்டு!

இந்தப் பாடலைக் குறைந்தபட்சம் நூறு முறையாவது கேட்டிருப்பேன். ஆனால், அந்த ஆறாவது வார்த்தை(ராக்குடி)க்கு என்ன அர்த்தம் என்று ஒருமுறைகூட யோசித்ததில்லை.

‘ராக்குடி’ என்றால் என்ன? ராத்திரி நேரத்தில் கும்பலாக உட்கார்ந்து தண்ணி போடுவதா?

அடுத்த வார்த்தை ‘சூட்டு’ என்று இருக்கிறது. ஆகவே, ’ராக்குடி’ என்பது ஒரு மலர் அல்லது நகையாகதான் இருக்கவேண்டும் என்று தோன்றிய்து.

அதுவும், ‘சூடு’ என்று சொல்லாமல், ‘சூட்டு’ என்று பாடுகிறார் SPB. ஆக, இந்தப் பாடலின் தொடக்கத்தில் விளிக்கப்படும் ‘முத்து ராக்கு’ என்ற பெண் அந்த நகையை / மலரைச் சூடிக்கொள்ளப்போவதில்லை, இன்னொருவருக்கு, அதாவது, இந்தப் பாடல் அமைப்பின்படி வளைகாப்பு கொண்டாடும் கதாநாயகிக்கு அதைச் சூட்டிவிடப்போகிறார்.

’பெண்களுக்கு வளைகாப்பின்போது ராக்குடி என்ற நகையை அணிவிப்பார்களா?’ என் மனைவியிடம் கேட்டேன்.

‘ஆமாம், கல்யாணம், வளைகாப்பு, பரதநாட்டியம் மாதிரி நிகழ்ச்சியிலெல்லாம் ராக்குடின்னு ஒரு நகையைத் தலையில அணிஞ்சுக்குவாங்க’ என்றார் அவர். கூடவே, ’இதுகூட தெரியாதா உனக்கு?’ என்று கேவலமாகப் பார்த்தார்.

‘ம்ஹூம், தெரியாதே, உன்கிட்ட அந்த ராக்குடி இருந்தா கொஞ்சம் காண்பித்து உதவு’ என்றேன்.

‘என்கிட்ட இல்லை’ என்றார் அவர். ‘வேணும்ன்னா கடைக்குப் போய்ப் புதுசா ஒண்ணு வாங்கலாம்.’

ராக்குடியின் விலை என்னவாக இருக்கும் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியாததால், நைஸாக எஸ்கேப் ஆகி வந்து இணையத்தில் தேட ஆரம்பித்தேன். ’பெண்கள் தலையை வாரியபின் கூந்தலினூடே திருகி அணியும் வட்ட வடிவமான அணிகலன்’ என்று விளக்கம் கிடைத்தது.

பின்னர், நண்பர் திருமதி சுஷிமா சேகர் ( @amas32 ) இந்த நகையின் புகைப்படத்தை அனுப்பி உதவினார். அதனை இங்கே பார்க்கலாம்: https://4varinote.wordpress.com/?attachment_id=70

நான் விசாரித்தவரையில், ராக்குடி ஒரு புராதன நகை. அதை மிகப் பொருத்தமாகவும் மெட்டுக்கு இசைவாகவும் இந்தப் பாடலில் அழகுறப் பயன்படுத்தியிருக்கிறார் வாலி.

அப்புறம் ஒரு விஷயம், இந்தப் பாடல் ஆர். வி. உதயகுமார் எழுதியதாக கேஸட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், பாடல் வரிகள், வார்த்தைத் தேர்வுகளைக் கவனிக்கும்போது இது நிச்சயம் வாலியாகதான் இருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

இதனை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, ’எஜமான்’ திரைப்படத்தின் வீடியோவை இணையத்தில் தேடிப் பிடித்தேன். நான் நினைத்தபடி, ‘ராக்கு முத்து ராக்கு’வை எழுதியது வாலிதான், கேஸட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது தவறு என உறுதிப்படுத்திக்கொண்டேன். அதற்கான சான்று இங்கே: https://4varinote.wordpress.com/?attachment_id=69

***

என். சொக்கன் …

08 12 2012

007/365