சும்மா எனும் சுமை

பெங்களூருக்குப் போன புதிதில் தமிழ் நண்பர்களோடு பேசும் போது “சும்மா” என்ற சொல்லைப் பயன்படுத்தினால் வடக்கத்திய நண்பர்கள் “சும்மா” என்றால் என்ன என்று கேட்பார்கள். இந்தியில் சும்மா என்றால் முத்தம். தமிழர்கள் அடிக்கடி முத்தத்தைப் பற்றிப் பேசுகிறார்களே என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

ஒரு நாளில் நாம் எத்தனை முறை “சும்மா” சொல்கிறோம் என்பதும் எதற்கெல்லாம் “சும்மா” சொல்கிறோம் என்பது ஒரு ஆச்சரியமான புள்ளிவிவரமாக இருக்கக்கூடும்.

பேச்சில் இத்தனை சும்மா வரும் போது திரைப்படப் பாடல்களில் வராமல் இருக்குமா? இன்றைய மதன் கார்க்கி வரை திடைப்பாடல்களில் “சும்மா” இருக்கிறது.

பாடல்-1
படம் – தூங்காதே தம்பி தூங்காதே
இசை – இளையராஜா
பாடல் – வாலி
பாடியவர் – எஸ்.ஜானகி
பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=xwtip74JdXk
சும்மா நிக்காதிங்க
நான் சொல்லும்படி வெக்காதிங்க
சின்ன மனசு தாங்காது
தன்னந்தனியா தூங்காது

பாடல்-2
படம் – முகமூடி
இசை – கிருஷ்ணகுமார்
பாடியவர் – ஆலப் ராஜு
பாடல் – மதன் கார்க்கி
பாடலின் சுட்டி – http://www.tamilpaa.com/596-vaayamoodi-summa-tamil-songs-lyrics
வாயை மூடி சும்மா இருடா
ரோட்டப் பாத்து நேரா நடடா
கண்ணைக் கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா!

சும்மா இருக்க முடியுமா என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு எல்லாரையும் ஒரு படத்தில் கேள்வி கேட்டு சும்மா இருப்பது எவ்வளவு கடினம் என்று நிரூபிப்பார். படத்தின் பெயர் தெரியவில்லை.

அந்தப் படத்தில் நடித்த வடிவேலுக்கு முன்னால் யாராவது சும்மா இருந்திருக்கின்றார்களா?

ஒருவர் இருந்திருக்கிறார். இன்னொருவர் அவரை சும்மா இருக்கச் சொன்னதால் இருந்திருக்கிறார்.

இருந்தவர் அருணகிரிநாதர். சொன்னவர் முருகன்.

காமக் கலவி என்னும் கள்ளை மொண்டு மொண்டு உண்டவர் அருணகிரி. தொழுநோய் அவரைப் பிடித்ததால் அவரை யாருக்கும் பிடிக்காமல் போனது. கோபுரத்தின் உச்சியில் ஏறி அங்கிருந்து குதிக்கும் போது தடுத்தான் முருகன். தடுத்த முருகன் அருணகிரிக்குச் சொன்னது “சும்மா இரு”.

நம்மால் சும்மா இருக்க முடியும? மனம் எதையாவது நினைக்கும். நாக்கு எதையாவது சாப்பிடச் சொல்லும். காதில் ஏதாவது ஒன்று விழுந்து மூளையை சிந்திக்கத் தூண்டும். உடம்பு ஒரே நிலையில் இருந்ததால் வலித்து நகரச் சொல்லும். இப்படி எல்லா வகையிலும் சும்மா இருக்க நம்மால் இருக்க முடியாது.

ஆனால் அருணகிரி சும்மா இருந்தார். இரவு, பகல், இன்பம், துன்பம், பசி, தாகம், வலி, வேதனை, வாசனை, சுவை, நினைவு, கனவு என்று எதுவும் தொல்லை கொடுக்காமல் சும்மா இருந்தார். அதனால் கிடைத்தது ஞானம்.

கிடைத்ததை இலக்கியத்திலும்(கந்தர் அநுபூதி) எழுதி வைத்தார்.
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருளன்றும் அறிந்திலனே

முருகன் சும்மா இரு என்று சொன்னதும் சும்மா இருந்ததால் இது வரையிலும் மிகப்பெரிய பொருளாகத் தெரிந்த உலக இன்பங்கள் ஒன்றுமில்லாமல் போனதை மிக அழகாகக் கந்தர் அநுபூதிப் பாட்டில் எழுதி வைத்தார் அருணகிரி.

அதெல்லாம் சரி. ஒரு போட்டி.

சுடச்சுட ஒரு டம்ளரில் ஃபில்டர் காப்பி. இன்னொரு தட்டில் மிளகு காரச்சேவும் திருநெல்வேலி அல்வாவும். இன்னொரு பக்கம் தொலைக்காட்சி. இன்னொரு பக்கம் மொபைல் ஃபோன்.

சுற்றிலும் இதையெல்லாம் வைத்துக் கொண்டு உங்களில் யாரெல்லாம் சும்மா இருக்க முடியும்? 😉

அன்புடன்,
ஜிரா

006/365