வட்டிச் சோறு

  • படம்: கிழக்குச் சீமையிலே
  • பாடல்: ஆத்தங்கர மரமே
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: மனோ, சுஜாதா
  • Link: http://www.youtube.com/watch?v=NdXPojNF9JM

மாமனே, ஒன்னக் காங்காம, வட்டியில் சோறும் உங்காம

பாவி நான் பருத்தி நாராப் போனேனே!

காகம்தான் கத்திப் போனாலும், கதவுதான் சத்தம் போட்டாலும்

உன் முகம் பா(ர்)க்க ஓடி வந்தேனே!

கிராமிய மொழியில் எழுதப்பட்ட இந்தப் பாடலில் வரும் ‘காங்காம’, ‘உங்காம’ என்கிற வார்த்தைகளைக் ‘காணாமல்’, ‘உண்ணாமல்’ என்று வாசிக்கவேண்டும், அது எல்லாருக்கும் தெரியும்.

ஆனால், அதென்ன ‘வட்டியில் சோறும் உங்காம’?

‘வட்டி’ அல்லது ‘வட்டில்’ என்பது தட்டையான வட்ட வடிவப் பாத்திரம். அதில் சோறு உண்பதைதான் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார் வைரமுத்து.

செட்டிநாடு பகுதியில் இதை வைத்து ஒரு வேடிக்கையான வாசகமும் உண்டு. ‘அவன் வட்டியில் சாப்பிடுகிறான்’ என்றால், வட்ட வடிவப் பாத்திரத்தில் சாப்பிடுகிறான் என்று ஓர் அர்த்தம், பணத்தை மற்றவர்களுக்குக் கடன் கொடுத்து, அதில் வரும் வட்டித் தொகையை வைத்துச் சாப்பிடுகிறான் என்று இன்னோர் அர்த்தம்.

யார் கண்டது? இந்தக் கதாநாயகி கிராமத்தில் வட்டிக்கடை வைத்திருந்தாளோ என்னவோ!

***

என். சொக்கன் …

06 12 2012

005/365