நாளும் நிலவும்

எம்.ஜி.ஆரை வைத்து பி.ஆர்.பந்துலு இயக்கிய இரண்டாவது படம் நாடோடி. இந்தப் படத்தில் ஒரு மிக இனிய பாடல். பாடலை இந்தச் சுட்டியில் கேட்கலாம்/பார்க்கலாம். https://www.youtube.com/watch?v=d_V7Kg6mmgs அந்தப் பாடல் வரிகளைப் பார்ப்போம்.

படம் – நாடோடி
ஆண்டு – 1966
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
பாடியவர்கள் – இசையரசி பி.சுசீலா & எல்.ஆர்.ஈசுவரி
பாடல் – கவியரசர் கண்ணதாசன்
அன்றொருநாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகில்
நான் அடைக்கலம் தந்தேன் என்னழகை
நீ அறிவாயே வெண்ணிலவே

இந்தப் பாடலின் காட்சியமைப்பை முதலில் பார்க்கலாம்.

இரண்டு பெண்கள். அவர்கள் சகோதரிகள்.
இரவு நேரம். அதுவும் முழுநிலவு நேரம்.
முன்பொரு முழுநிலவில் நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன.
அன்று காதலன் கூட இருந்தான். காதற் களிப்போடு கூடி இருந்தான்.
அந்த எண்ணம் சொற்களில் வண்ணம் பூசிக் கொண்டு பாடலாக வருகிறது. அதுதான் இந்தப் பாடல்.

சரி. இதற்கும் இலக்கியத்துக்கும் என்ன தொடர்பு? உண்டு. உண்டு.

புறநானூற்றில் ஒரு காட்சி.
அங்கும் இரண்டு பெண்கள். அவர்கள் சகோதரிகள்.
இரவு நேரம். அதுவும் முழுநிலவு நேரம்.
முன்பொரு முழுநிலவில் நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன.
அன்று தந்தை கூட இருந்தார். செல்வச் செழிப்போடு கூடி இருந்தார்.
ஆனால் சினிமாப் பாடலில் வந்த சகோதரிகளைப் போல இவர்கள் நிலை இல்லை.
அன்று இருந்த தந்தை இன்று இல்லை. மூவேந்தரும் கூடி அவர்களின் தந்தையைக் கொன்று விட்டனர். அதனால் இவர்கள் இருவரும் அனாதைகள். இல்லை. அனாதைகளாக்கப்பட்டவர்கள். பெரும்புலவர் கபிலரின் ஆதரவில் ஏழ்மையில் இருக்கும் நிலையினர்.
அந்த எண்ணம் சொற்களில் சோகம் பூசிக் கொண்டு பாடலாக வருகிறது. அதுதான் இந்தப் பாடல்.

அற்றைத் திங்க ளவ்வெண் ணிலவின்
எந்தையு முடையேமெங் குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்க ளிவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசில் வேந்தரெம்
குன்றுங் கொண்டார்யா மெந்தையு மிலமே.

இப்போது புரிந்திருக்குமே அந்தப் பெண்களின் தந்தை யாரென்று. அவர்தான் பார் புகழ் பாரி. மாரி(மழை) மட்டும் உலகுக்கு வளம் கொடுக்காது. மாரியை விடச் சிறந்த பாரியும் உண்டு என்று புகழ்ந்த பாரி அவர்களின் தந்தை.

அந்தப் பெண்கள்தான் பாரிமகளிர். அவர்களின் பெயர்கள் அங்கவை-சங்கவை என்பவை. தமிழ் கற்ற அரும் பெண்கள்.

கவியரசருக்கு இவர்களைப் பற்றித் தெரிந்திருக்கிறது. புறநானூறு படித்திருக்கிறார். சோக எண்ணம் பிரதிபலிக்கும் ஒரு பழைய பாடலில் இன்பச்சுவை பரவுமாறு ஒரு கவிதை எழுதுகிறார். அதுதான் “அன்றொருநாள் இதே நிலவில்” என்ற அழகான பாடல். அது அங்கவைக்கும் சங்கவைக்கும் கவியரசர் செய்த மரியாதை. அவருக்கு நன்றி.

இன்றும் அங்கவை சங்கவை திரைப்படங்களில் வருகிறார்கள். பாவம். அங்கவை-சங்கவை-பொங்கவை என்ற நகைச்சுவைகளிலும் பழக வரும்படி அழைப்பதிலும் அசிங்கப்படுத்தப்படுகிறார்கள். அப்படிச் செய்த மனப்பிறழ்வாளர்களை இறைவனும் தமிழும் மன்னிக்கட்டும்.

அன்புடன்,
ஜிரா

004/365