தண்ணீர் ஆடை

  • படம்: மகாநதி
  • பாடல்: தை பொங்கலும் வந்தது
  • எழுதியவர்: வாலி
  • இசை: இளையராஜா
  • பாடியவர்: K. S. சித்ரா
  • Link: http://www.youtube.com/watch?v=wwzL-BhmVMw

தைப் பொங்கலும் வந்தது, பாலும் பொங்குது, பார்த்துச் சொல்லடியோ,

வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியைப் போற்றிச் சொல்லடியோ,

இந்தப் பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி,

இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி!

கவிஞர் வாலியின் திரைப்பாடல் வரிகளில் நிறைய பழந்தமிழ் இலக்கியத் தொடர்ச்சியைப் பார்க்கலாம். அதாவது, அன்றைய புலவர்கள் பயன்படுத்திய பல உத்திகளை இவரும் மிக நுட்பமாகவும் அழகோடும் போகிற போக்கில் சொல்லிவிடுவார்.

உதாரணமாக, இந்தப் பாடலில் காவிரி ஆற்றை அவர் இப்படி வர்ணிக்கிறார்: ‘தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கை’!

பூமியில் பெரும்பகுதி தண்ணீர் என்பதாலேயோ என்னவோ, நில மகளைத் ‘தண்ணீர்ச் சேலை கட்டிய பெண்’ என விவரிப்பது ஒரு பழைய மரபு, இதைச் சொல்லும் ஒரு பிரபலமான பாடலை நீங்கள் நிச்சயமாகக் கேட்டிருப்பீர்கள்: ‘நீர் ஆரும் கடல் உடுத்த நில மடந்தை’!

’மனோன்மணீயம்’ காவியத்தில் இடம்பெறும் இந்தப் பாடல், நம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தாக மாறியுள்ளது. அதன் முதல் வரிக்கு அர்த்தம், ‘நீர் நிறைந்த கடலை உடுத்திய நில மகளே!’

இன்னும் கொஞ்சம் பழைய உதாரணம் வேண்டுமா? கம்பன் வரி: மூரி நீர் ஆடை இரு நில மடந்தை.

’மூரி நீர்’ என்றால் வலிமை மிகுந்த (கடல்) நீர், அதனால் செய்த ஆடையை உடுத்திய ‘இரு நில மடந்தை’, பெரிய பூமிக்குத் தலைவியாகிய நிலமகள்!

***

என். சொக்கன் …

03 12 2012

003/365