மயிலின் தோகை

கதாநாயகியை மயிலாகப் பார்க்காத கவிஞர்கள் உண்டா? மிகப்பிரபலமான இரண்டு வாலியின் பாடல்களைப் பார்க்கலாம்.

பாடல்-1
படம் – கடவுள் அமைத்து வைத்த மேடை
ஆண்டு – 1979
இசை – இளையராஜா
பாடியவர்கள் – ஜென்சி & எஸ்.பி.பாலசுப்ரமணியம்
மயிலே மயிலே உன் தோகை எங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் எங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ தளிருடல் தொடலாமோ

பாடல்-2
படம் – இரு மலர்கள்
ஆண்டு – 1967
இசை – எம்.எஸ்.விசுவநாதன்
பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார் முகிலாள்
அன்புக் காதலன் நானிருக்கப் பேரெழிலாய்

இந்த இரண்டு பாட்டுகளிலும் பெண்ணைத்தான் மயிலாக உருகவித்திருக்கிறார் கவிஞர். அதிலும் தோகை என்னு அழகை பெண்ணுக்கு உரித்தாக்கியிருக்கிறார்.

ஆனால் அதில் ஒரு முரண் இருக்கிறதே! ஆண் மயிலுக்குத்தானே தோகை உண்டு. அப்படியிருக்க பெண்ணை மயிலுக்கு ஒப்பிடுவதும் தோகை என்னும் அழகை பெண்ணுக்கு இணைப்பதும் சரியாக இருக்க முடியுமா? இது இலக்கணப்படி சரியாகுமா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இலக்கத்தில் விடை உண்டு என்பதே வியப்பு. ஆம். தொல்காப்பியம் இதற்கு அழகான விளக்கம் சொல்லியிருக்கிறது.

தொல்காப்பியத்தில் மூன்று அதிகாரங்கள்.
1. எழுத்ததிகாரம்
2. சொல்லதிகாரம்
3. பொருளதிகாரம்

பொருளதிகாரத்தில் மரபியல் என்று ஒரு பகுதி. எது எது என்ன என்ன என்று சொல்லும் மரபுகளை விளக்கும் பகுதி அது. அதனால் அதற்கு மரபியல் என்று பெயர்.

அந்த மரபியலில் கீழ்க்கண்ட வரிகளைப் பார்ப்போம்.
சேவல் பெயர்க்கொடை சிறகொடு சிவணும்
மா இருந் தூவி மயில் அலங்கடையே

இந்த இரண்டு வரிகளையும் விளக்கவே நான்கைந்து பக்கங்கள் தேவை. சுருக்கமா பொருளை மட்டும் பார்க்கலாம்.

பறவைகளின் ஆண் பறவைகளுக்கு என்ன பெயர்? இந்த மரபைச் சொல்லும் வரிகள்தான் இவை.

பொதுவாகவே ஆண் பறவைகளுக்குச் சேவல் என்று பெயர். அது எந்தப் பறவையின் ஆணாக இருந்தாலும் அது சேவல்தான். எடுத்துக்காட்டாக உவணச் சேவல் என்ற பெயர் சிலப்பதிகாரத்தில் வருகிறது. அதற்கு இன்றைய பெயர் கருடன். பருந்தின் ஆண்பறவைக்கு உவணச் சேவல் என்று பெயர்.

ஆனால் இந்தச் சேவல் என்ற பெயர் எல்லாப் பறவைகளுக்கும் பொருந்தி ஒரேயொரு பறவைக்கு மட்டும் பொருந்தாதாம்.

அந்தப் பொருந்தாப் பறவை மயில்.

ஏன் பொருந்ததாது?

அதற்கு மயிலின் அழகிய தோகை (மா இரும் தூவி) காரணம்.

அப்படி அழகிய தோகையைக் கொண்டிருப்பதால் மயிலின் ஆண் பறவைக்குச் சேவல் என்ற பெயர் பொருந்ததாதாம்.

இப்போது புரிந்திருக்குமே ஏன் திரைப்படக் கவிஞர்களும் பாடலாசிரியர்களும் மயிலை பெண்ணுக்கே உவமையாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று!

இது போல வேறு எந்தப் பாடல்களில் எல்லாம் பெண்ணை வர்ணிக்க மயிலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்!

அன்புடன்,
ஜிரா
03/12/2012
002/365