ஏலப்பூ

  • படம்: சின்ன தம்பி
  • பாடல்: அரச்ச சந்தனம்
  • எழுதியவர்: கங்கை அமரன்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்: S. P. பாலசுப்ரமணியம்
  • Link: http://www.youtube.com/watch?v=ASAF491CnR4
மான்விழி, ஒரு தேன்மொழி, நல்ல மகிழம்பூவு அதரம்,
பூ நிறம், அவ பொன்னிறம், அவ சிரிக்க நெனப்பு சிதறும்,
ஏலப்பூவு கோலம் போடும் நாசிதான், பல
ஜாலத்தோடு ஆடப் போகும் ராசிதான்!

ஒரு பெண்ணின் மூக்கைப்பற்றிப் பலவிதமான வர்ணனைகளைப் படித்திருக்கிறோம். ஆனால் எனக்குத் தெரிந்து இந்த ஒரு பாட்டுமட்டும்தான் நாசிக்கு ஏலப்பூவை உவமை காட்டுகிறது.

நான் ஏலக்காய் பார்த்திருக்கிறேன், ஏலப்பூ பார்த்ததில்லை. இதைக் கேட்டவுடன், Cardamom Flower என்று கூகுள் செய்து பார்த்தேன், அழகான மூக்கு 🙂 கிராமத்தில் வளர்ந்த கங்கை அமரன் கண்ணில் இப்படி ஒரு உவமை சிக்கியதில் ஆச்சர்யமே இல்லைதான்!

இன்னும் கொஞ்சம் தேடியதில், ஒரு நாடோடிப் பாடல் கிடைத்தது. அதில் குழந்தையின் அழகுக் கண்ணுக்கு ஏலப்பூ உவமையாகிறது:

கண்மணியே ஏலப்பூ, காதிரண்டும் பிச்சிப்பூ,
மேனி மகிழம்பூ, மேற்புருவம் சண்பகப்பூ!

***

என். சொக்கன் …
02 12 2012

001/365