கல்யாண மாலை 

காதல் சொல்லும் பாடல் ஆயிரம் உண்டு. கணவன் மனைவி உறவை, எதிர்பார்ப்பை சரியாய் சொல்லும் வரிகள் எவை?   ‘ நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன், நீ இன்றி நான் இல்லை, நீயே என் உயிர், ஈருடல் ஓருயிர்,  நீ பிரிந்தால் நான் இறப்பேன் ‘ நான் சாய்ந்துகொள்ள தோள் வேண்டும் mode ல் ஆணும் பெண்ணும் பேசிக்கொள்வதாய் அமைந்த வரிகள் ஏராளம்.

வீனஸ் கிரகத்தில் இருந்து வந்த பெண்- மார்ஸ் கிரகத்து ஆண்  இருவருக்கும் இடையே இருக்கும் நிஜமான எதிர்பார்ப்புகள் என்ன ? எந்த மாதிரி ஒரு promise ஒரு comfort தேவைப்படுகிறது? சில தேர்ந்தேடுக்கப்பட்ட பாடல் வரிகளை பார்த்து விடை காண்போம்

எனக்கு முதலில் நினைவுக்கு வருவது பாலும் பழமும் படத்தின் கண்ணதாசன் பாடல் http://www.youtube.com/watch?v=88WREnjAp28. அந்த நாளைய ஆதர்ச தம்பதியினர் பலரும் விரும்பிய பாடல் . இன்றும் ரசித்து கேட்கப்படும் ஒரு பாடல். அதில் பெண்

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்

என்று ஆணிடம் சொல்லுகிறாள். இது சரியா? எங்கேயும் எப்போதும் உறவாட வேண்டும் என்று அவள் கேட்பதில் பிரச்சினையில்லை. முதல் வரியுடன்தான் ஒத்து போகமுடியவில்லை. பெண் நினைப்பதை ஆண் பேச வேண்டுமா? இதுதான் உறவின் இலக்கணமா? நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் மாதிரியா?

சரி ஆண்  என்ன பதில் சொல்கிறான் பாருங்கள்

நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்

நீ காணும் பொருள் யாவும் நான் ஆக வேண்டும் நான் ஆக வேண்டும்

போச்சுடா. இவனும் இவன் பார்வையில் அவள் என்ன செய்ய வேண்டும் என்றுதான் யோசிக்கிறான். சட்டென்று பெண் தன்னை ஒரு படி உயர்த்திக்கொள்ள ‘தியாக’ உருவாக பாலோடு பழம் எல்லாம் உனக்கே,  எனக்கு உன் முகம் பார்த்தாலே பசி தீரும்,  நானே உனக்கு தாய் நீயே எனக்கு சேய் என்று இதை ஒரு unequal relationship ஆக பார்க்கிறாள் . இது சரியில்லை

சூர்யகாந்தி படத்தில் வாலியின் கணவன் மனைவி conversation பாடல் ஒன்று http://www.youtube.com/watch?v=lWH2aplXjG0. இதில் வரும் ஆங்கில வரிகள் ராண்டார் கை எழுதியவை. படத்தில் sarcasm ததும்ப வரும் காட்சி. அதை சற்று தள்ளி வைத்து பாடல் வரிகளை பார்ப்போம்

நான் என்றால் அது அவளும் நானும்

அவள் என்றால் அது நானும் அவளும்

நான் சொன்னால் அது அவளின் வேதம்

அவள் சொன்னால் அதுதான் என் எண்ணம்

கட்டிய கணவன் கட்டளை  படியே காரியமாற்றும் குணமுடையாள்

புருஷனுக்கு அருகே சரி சமமாக அமர்ந்திட தயங்கும் பண்புடையாள்

என்று தொடர்ந்து பாடலில் அதே unequal terms போன்ற கருத்தை முன் வைக்கிறார். இதெல்லாம் இந்த காலத்தில் சொன்னால் MCP என்று பட்டம் கிடைக்கும்.

வியட்நாம் வீடு படத்தில் உன் கண்ணில் நீர் வழிந்தால் என்ற பாடலில்

ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன

வேரென நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்

எத்தனை உறவு இருந்தாலும் நீயே என் வேர் என்ற  அற்புதமான கருத்தை சொல்லும் கண்ணதாசன் வரிகள்.. இதை ஆணும் சொல்லலாம் பெண்ணும் சொல்லலாம்.

வாலி புது புது அர்த்தங்கள் படத்தில் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே http://www.youtube.com/watch?v=r5JJIuo4pEo பாடலில்

வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும்

ஆனாலும் அன்பு மாறாதம்மா

மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம்

பிரிவென்ற சொல்லே அறியாதம்மா

என்று இந்த அழகான உறவின்  தன்மை சொல்கிறார். உன்னை விட்டு பிரிவதுமில்லை விலகுவதுமில்லை என்ற Promise.

வைரமுத்து ஒரு பாடலில்  ‘ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம்  என் வாழ்வே வா  என்ற வரியில் பல காலம் ஒன்றாக இருப்பதை பற்றி சொல்கிறார். சிநேகிதனே பாடலில் http://www.youtube.com/watch?v=AgxkHQkLoXE சில உன்னதமான உணர்வுகளை சின்ன சின்னதாய் கோரிக்கைகள் போல் சொல்கிறார்.

இதே அழுத்தம் அழுத்தம்

இதே அணைப்பு அணைப்பு

வாழ்வின் எல்லைவரை வேண்டும் வேண்டும்

போகிற போக்கில் நாம் இன்று போல் என்றும் வாழ வேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்பை பெண் சொல்லும் கவிதை. இதை ஆணும் சொல்ல முடியும். சொல்ல வேண்டும். இதில் வரும் இன்னொரு வரி உன்னதமானது

நீயழும்போது நான் அழ நேர்ந்தால்

துடைக்கின்ற விரல் வேண்டும்

ஒருவரை ஒருவர் வேரென தாங்கி, அழுத்தமாக அணைத்து ஆறுதல் தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானது தானே? இது கணவன் மனைவி உறவுக்கு நல்ல template.

அப்புறம்? தவமாய் தவமிருந்து படத்தில் உன்னை சரணடைந்தேன் http://www.youtube.com/watch?v=LqwqhLmUoCk என்று ஆரம்பித்து ஒரு புது framework கொடுக்கிறார் கவிஞர் தேன்மொழி.

உன் உலகத்தின் மீது நான் மழையாகிறேன்

உன் விருப்பங்கள் மீது நான் நதியாகிறேன்

என்று சொல்லும் அன்பு கவிதையாய் இருக்கிறது. ஒரு ஆண் Provider என்ற நிலையிலிருந்து  விலகி சம நிலையில் முடிந்தால்  enabler / catalyst ஆக இருப்பதே இன்றைய நிதர்சனம். இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் இரு வரிகள்.

காதல் என்ற சொல்லில் காதலே இல்லை என்பேன்

வாழும் வாழ்க்கை இதில் காதலாய் வாழ்வோம் என்பேன்

சங்கின் ஓசை போலே நெஞ்சில் தங்கி அவள் சிநேகிதனே என்று சொல்ல இவன் தோழி என்று சொல்ல ஒரு நேர்மையான அன்பான நிரந்தர நட்பு கிடைத்தால் அதுதான் இறைவன் கொடுத்த வரம்.

மோகன கிருஷ்ணன்

069/365